Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மனாக இறங்கி ஆடும் நயன்தாரா.. கையில் சூலாயுதத்துடன் பக்தி மயம்!
சென்னை: நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே கதாநாயகி செண்ட்ரிக் படங்களைத்தான் தேர்வு செய்து வருகிறார். ஏதாவது நடிகருடன் இணைந்து நடித்தால் கூட, தனது கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதைப் பொறுத்து தான் தேர்வு செய்து நடிக்கிறார். இப்படி இருக்கும்போது அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் நயன்தாரா படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்ற தகவலே பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மூக்குத்தி அம்மன் படத்தில் மக்களுக்கு கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையை போலி சாமியார்கள் எப்படி தங்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் விஷயமாக பார்க்கிறார்கள் என்பதுதான் கதையாக இருந்தது.

இப்படி இருக்கும்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார் என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இப்படி இருக்கும்போது படத்தில் முதலில் நயன் நடிக்க மறுத்துவிட்டார் எனவும் அதனால் த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று எல்லாம் பேச்சுக்கள் எழுந்தது. அதேபோல் நயன் மீண்டும் கமிட் ஆன பின்னர் சுந்தர் சி மற்றும் நயனுக்கு இடையில் பிரச்னை என்றும், இதனால் சில நாட்கள் படப்பிடிப்பு எல்லாம் நடக்கவில்லை என்றும் பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்தார் நடிகையும் இயக்குநர் சுந்தர் சியின் மனைவியுமான குஷ்பு. அதன் பின்னர் படம் குறித்த சர்ச்சையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஃபர்ஸ்ட் லுக்: இந்நிலையில் படத்தின் அப்டேட்டுகள் எதுவும் இல்லாமல் இருக்கிறதே என்ற பேச்சுக்கள் லேசாக திரைத்துறை வட்டாரத்தில் ஆரம்பித்தது. இப்படி இருக்கையில் படக்குழு சார்பில் இருந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக கையில் சூலாயுதத்துடன் கோபமாக அமர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

படக்குழு: இந்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு ரசிகர்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தான் பிராதானமாகத் தயாரித்தாலும், அவருடன் இணைந்து படத்தை குஷ்பு சுந்தரின் ஆவ்னி தயாரிப்பு நிறுவனம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மேலும், ஐ.வி.ஒய் என்டர்டைமெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். படம் இந்த ஆண்டு இறுதிக்குள்ளோ, அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ கூட வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் பலரும் போஸ்டர் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











