twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதையைத்தான் திருடினீர்கள்; சூப்பர்ஸ்டார் பட்டத்தையுமா? - பயில்வான் ரங்கநாதன்

    |

    பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'நெடுமி'.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.
    ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார்.

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

    Nedumbi’s Trailer Launch

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் பேசும்போது,

    "முதலில் கதை சொல்லும் போது நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை.நீதான் நடிக்க வேண்டும் என்றார்கள். ஏனென்றால் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் பனைமரம் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று தோன்றியது. ஆனால் 10 நாட்கள் எனக்கு அதற்காகப் பயிற்சி கொடுத்தார்கள். மரமெல்லாம் ஏறிப் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

    இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது தான் சிரமமாக இருக்கிறது. இந்தச் சினிமா ஒரு கடல் போன்றது. இங்கே சினிமாவில் பல திமிங்கிலங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

    நாங்கள் இப்போதுதான் மீன் தொட்டியில் இருந்து சினிமாவில் குதித்துள்ளோம்.நாங்களும் திமிங்கிலமாக வளர்வோம்." என்றார்.

    படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது,

    "இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம்.ஒருவரிடம் திறமை இருக்கலாம் அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது.அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாத போதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது.அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி" என்றார்.

    பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது,

    " இப்படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால் இன்று பனையேறிகள் சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன்.

    'காவல் தெய்வம் 'படத்தில் சிவாஜி கணேசன்ஒரு பனையேறியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை எஸ்.வி. சுப்பையா தயாரித்திருப்பார்.
    நடிகர் திலகம் அந்த படத்தில்
    சம்பளம் வாங்காமல் நடித்திருப்பார். காரணம் கேட்டபோது பெருந்தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட சமுதாயம் என்பதால் தான் அப்படி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார்.

    இங்கே பனைத் தொழில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை அழைத்து வந்திருக்கலாம். பனைமரம் மட்டும் தான் தண்ணீர் இல்லாக் காட்டில் கூட விளைந்து பயன் தருவதாகும்.
    பனையேறிகள் என்று சொல்லப்படுபவர்கள் இன்று நன்றாக இருக்கிறார்கள். எவரும் கஷ்டப்படவில்லை .இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான்.
    அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ்.அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர் .எவரும் வறுமையில் வாழவில்லை.

    இந்த சமுதாய மக்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரிடமும் ஏமாறவும் மாட்டார்கள்.

    பனையேறிகள் ஏன் சிரமப்பட வேண்டும்? ஒரு காலத்தில் நாலணாவிற்கு கருப்பட்டி விற்றது.அப்போது வெள்ளை சர்க்கரை எட்டணா விற்றது. இப்போது கருப்பட்டி 400 ரூபாய் விற்கிறது. அதே வெள்ளை சர்க்கரை 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்புள்ளதாக கருப்பட்டி இருக்கிறது .அதனால் தான் சொல்கிறேன் பனையேறிகள் என்றும் சிரமப்பட்டதில்லை.

    பனையேறிகளிடம் ஒரு முறை உண்டு .அதற்குப் பாட்டம் என்று பெயர்.ஒரு நாள் வரும் கள்ளைப் பனையேறி எடுத்துக் கொள்வார். மறுநாள் மரத்துக்காரருக்குக் கொடுப்பார். இப்படி முறை வைத்து சம்பாதிப்பார்கள்.

    நாங்கள் கள்ளை ஆதரித்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். கள் என்பது இயற்கை கொடுத்த பால் .ஒரு மரத்துக் கள்ளை குடிப்பவன் நூறாண்டு வாழ்வான். பனையேறிகள் எப்போதும் உடல் வலிமையோடு இருப்பார்கள்.
    படங்களில் பனையேறிகளை உயர்த்திக்காட்டுங்கள். ஊடகங்கள் எப்போதும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். இந்த படம் உண்மையில் நன்றாக இருந்தால் ஊடகங்கள் நிச்சயமாகக் தூக்கி பிடிப்பார்கள். லவ் டுடே படம் யாரால் ஓடியது ?முழுக்க முழுக்க ஊடகங்கள் தான் காரணம்.

    நான் எதையும் நேரடியாகப் பேசுபவன்.என்னை எப்போதும் தாக்கிப் பேசி வரும் கே .ராஜன் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற்று வர நான் வேண்டுகிறேன்.

    இங்கே பேரரசு இருக்கிறார். அவர் ஒரு மேடையில் பேசினார். பெரிய படங்கள் வெளிவருவதால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன என்று. அவர் விஜய்யை வைத்துப் பெரிய படங்களை இயக்கியவர் தான். அவரது பேச்சை நாளைக்கு விஜய் கேட்டால் அதுவே அவருக்கு இடையூறாக அமையும் என்பதால் நான் அப்படி அவர் பேசக்கூடாது என்று சொல்கிறேன் .இதை அவர் மீது உள்ள அக்கறையால் சொல்கிறேன்.

    நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான். அதேபோல் மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் தான். காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். காதல் இளவரசன் என்றால் அது கமல்ஹாசன் தான். அதேபோல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் ஒரு வர்தான்.அவருக்கு மட்டுமே அந்த பட்டம் சேரும்.
    இப்போது யார் சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள். ஒரு பட்டம் ஒருவருக்குத் தான்.அதை எடுத்து ஏன் இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டும்?
    இதுவரை கதையைத் திருடினீர்கள்.இப்பொழுது பட்டத்தையும் திருடுவீர்களா? "என்றார்.

    இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது,

    " இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.பாண்டிச்சேரியில் நிறைய படப்பிடிப்பு நடக்கும் . அதை வேடிக்கை பார்த்த மக்களே விவரமாக இருப்பார்கள்.இதை நான் என் படப்பிடிப்பில் தெரிந்து கொண்டேன். பாண்டிச்சேரியில் இப்படி சினிமா எடுத்திருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன் .இவர்களே தனியாக எந்தவிதமான முன்னனுபவமும் இல்லாமல் படம் எடுப்பதை அறிந்து நான் நேரில் போய்ச் சந்தித்துப் பேசினேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய சினிமா ஆர்வத்தை நாம் மதித்து, இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்'' என்றார்.

    பத்திரிகையாளர் முக்தார் அகமது பேசும்போது,

    "விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்தப் படவிழாவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்களும் விவசாயிகள் தான், நாங்களும் தமிழர்கள் தான், நாங்களும் தமிழ்க் கலாச்சாரம் கடைப்பிடிப்பவர்கள் தான் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று, செயலில் ஒன்று என்றுதான் இருப்பார்கள்.

    திருக்குறளைப் போலவே விவசாயிகளையும் அரசியல்வாதிகள் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். நான் என்றும் சொல்வேன் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் .ஆண்ட கட்சியையும் ஆளுகிற கட்சியையும் கூட நம்பலாம். ஆனால் தனியே நிற்கிறோம் என்று சொல்கிறார்களே அவர்களை நம்பவே நம்பாதீர்கள். ஏனென்றால் தனியாக இருப்பவர்கள் ரகசிய உடன்பாடு செய்து கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்..தனித்து என்று எவரும் இல்லை அவர்கள் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள்.அவர்களை நம்பாதீர்கள்.

    பொங்கல் சமயத்தில் இரண்டு படங்கள் வந்தன .இவ்வளவு வசூல் இவ்வளவு வெற்றி என்று பேசிக்கொள்கிறார்கள். அந்தப் படங்களால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம்? என்ன நல்ல கருத்து பேசி இருக்கிறது? அந்தப் படங்கள் யார் கண்ணீரை துடைத்து இருக்கின்றன?

    திராவிடம் தமிழ் தேசியம் என்கிற நிலையில் என்னை திருமா கவர்ந்த தலைவராக இருக்கிறார்.

    அதேபோல் ரஜினிகாந்த் பற்றி நான் ஆயிரம் விமர்சனங்கள்செய்திருக்கிறேன்.கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவேன் என்றார். பிறகு அது தவறு என்று புரிகிற போது அதை மாற்றிக் கொள்ளும் துணிச்சல் அவருக்கு இருந்தது .கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். இது ரஜினி கொடுத்துள்ள பாடம்.அந்தத் தெளிவான முடிவு எடுத்தவகையில் அவர் என்னைக் கவர்ந்த ஒருவராகத் தெரிகிறார்.

    இந்தப் படம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றிச் சொல்வதால் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

    இயக்குநர் பேரரசு பேசும்போது,

    "நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன்.

    பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு.பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம் நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்!

    இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

    கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலையை வைத்துக் கொள்ளுங்கள்.
    உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல்.
    கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

    இங்கே முக்தார் பேசும்போது பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார்.நான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பலர் உண்டு.என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்கள் கேள்வி கேட்கும் போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள் ;ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள்.இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை?

    மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்க கூடாது.

    பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம்; ஆனால் கேலி பேசக்கூடாது.

    அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை.இங்கே வந்து அரசியல் பேசக்கூடாது.படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி வாழ்த்த வேண்டும் .அதை விட்டுவிட்டு திசை மாற்றி ,படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக்கூடாது.

    நாம் அனைவரும் வாழ்த்தவே இங்கு வந்திருக்கிறோம்" என்றார்.

    English summary
    Nedumbi’s Trailer Launch
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X