விக்ரமன் நிரபராதி… ஆனா அசீம் தான் வின்னர்… ADK தீர்ப்பு: இது என்ன புது உருட்டா இருக்குது?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிங்கப்பூர் மாடல் நிவாஷினி எவிக்சன் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 16 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 15 போட்டியாளர்களுக்கும் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் கோர்ட் டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 6 கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறிவிட்டனர். சென்ற வாரம் போட்டியாளர்களுக்கு ராஜா - ராணி டாஸ்க் நடைபெற்றது. அதேபோல், இந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிக் பாஸ் வீட்டில் தங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைத்த போட்டியாளர் மீது, சக போட்டியாளர் வழக்கு தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமுதவாணனின் வழக்கு முதலில் நீதிமன்றம் வரை சென்றது.

அசீம் - ஷிவின் வாதம்
சென்ற வாரம் அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் பேசிய கமல்ஹாசன், வில் - அம்பு டாஸ்க் ஒன்றை நடத்தினார். அதில், யார் வில்லாக செயல்படுகிறார், அவரது அம்பு யார் என கேட்டார். அதில் அமுதவாணன் வில் என்றும், ஜனனி அவரின் அம்பு எனவும் பெரும்பாலான போட்டியாளர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். விக்ரமனும் அமுதவாணன் தான் வில், ஜனனி அம்பு எனக் கூறியிருந்தார். இது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக விக்ரமன் சொன்ன கருத்து என அமுதவாணன் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து விக்ரமனுக்கு ஆதரவாக ஷிவினும், அமுதவாணன் தரப்பில் அசீமும் வழக்கறிஞர்களாக களமிறங்கினர். ஏடிகே இந்த வழக்கின் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

அசீம் எடுத்துவைத்த வாதம்
முதலில் அமுதவாணன் தரப்பில் ஆஜரான அசீம், அவர் தரப்பு வாதங்களை முன்வைத்தார். அதில், விக்ரமன் மற்றவர்கள் சொன்னதை மனதில் வைத்து தான் அமுதவாணனை வில் என்றும், ஜனனியை அம்பு என சொன்னதாகக் கூறினார். அதேபோல், விக்ரமனின் தனிப்பட்ட கருத்தாக தான் அது இருந்தது, உண்மையில் அமுதவாணன் ஜனனியை அப்படி பயன்படுத்தவில்லை எனக் கூறி, சாட்சிகள் மூலமும் நிரூபித்தார். அதேபோல், பார்வையாளர்கள் தரப்பில் இருந்தும் அமுதவாணனுக்கு ஆதரவாகவே கருத்துகள் வந்தன.

ஏடிகேவின் வித்தியாசமான தீர்ப்பு
அதேநேரம், விக்ரமனுக்கு ஆதரவாக ஆஜரான ஷிவின், சில வாதங்களை தெளிவாக எடுத்து வைக்கவில்லை. ஆனால், விக்ரம் தனது கருத்துகளை எடுத்து வைக்கும் போது, அமுதவாணனை திட்டமிட்டு அப்படி கூறவில்லை என விளக்கம் கொடுத்தார். அதேபோல், தான் மட்டுமே அமுதவாணனை வில் எனவும், ஜனனி அம்பு என்றும் கூறவில்லை. ஐந்துக்கும் மேற்பட்டவர்களும் அவர்கள் இருவரையும் அப்படித்தான் சொன்னதாக கூறினார். இறுதியாக தீர்ப்பு வழங்கிய ஏடிகே, விக்ரமன் நிரபராதி எனக் கூறினார். ஆனால், அசீம் வாதம் சரியாக இருந்ததால் அவர் தான் வெற்றியாளர் என அறிவித்தார்.

தீர்ப்ப மாத்தி சொல்லுங்க ஜட்ஜய்யா
ஏடிகேவின் இந்த தீர்ப்புக்கு விக்ரமனும் ஷிவினும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது விக்ரமன் நிரபராதி என்றால், நாங்கள் தான் வெற்றியாளர் ஆனால், இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். ஆனால், அசீமின் வாதம் நன்றாக இருந்ததால், அவர் டீம் தான் வெற்றி என உறுதியாக சொல்லிவிட்டார். அவரது தீர்ப்பு சரியாக இருந்தாலும் விக்ரமனையும் நிரபராதி என எப்படி சொல்லலாம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களும் ஏடிகேவிடம் இதே கருத்தை தான் எடுத்து வைத்தனர். ஆனால், ஏடிகே அதை புரிந்துகொள்ளாமல் தடுமாறியது தெளிவாக தெரிகிறது. அதேபோல், அசீம்க்கு எதிராக தீர்ப்பு சொன்னால் மீண்டும் தேவையில்லாமல் சண்டை வரும் என பயந்து அப்படி முடிவு எடுத்துவிட்டாரா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











