என்னடா சூரரைப் போற்று எடுக்குறேன்னு சொல்லிட்டு பிதாமகன் எடுத்து வச்சிருக்கீங்க
சென்னை : சூர்யா நடிப்பில் டைரக்டர் சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரைப் போற்று. கொரோனா காரணமாக 2020 ம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது.
சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், கருணாஸ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. மிக குறைந்த கட்டணத்தில், சாமானிய மக்களுக்கு விமான பயணத்தை சாத்தியமாக்க வேண்டும் என சாதித்து காட்டும் ஒரு இளைஞனின் கதை.

35 விருதுகளை வாங்கிய படம்
ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனங்களை இந்த படம் கவர்ந்தது. பல சர்வதேச விருதுகளை வென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 க்கும் அதிகமான விருதுகளை இந்த படம் பெற்றுள்ளது. இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு கூட இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது.ஏற்கனவே சூரரைப் போற்று படம் Udaan பெயரில் இந்தியில் டப் செய்து கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

சூரரைப் போற்று இந்தி ரீமேக்
சர்வதேச அளவில் பாராட்டு பெற்ற சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் சமீபத்தில் துவங்கப்பட்டது. இதையும் சுதா கொங்கரா தான் இயக்குகிறார். 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. முதலில் சூர்யா தான் ஹீரோ ரோலில் நடிக்கிறார் என தகவல் பரவி நிலையில், அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க
இந்த ஃபர்ஸ்ட்லுக்கில், குடிசை வீடு ஒன்றின் முன் சிறுமி ஒருவருக்கு அருகில் அக்ஷய் குமார் பரட்டை தலை, அழுக்கான உடையுடன் அமர்ந்திருப்பதை போல் காட்டப்பட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், செமயாக கலாய்த்து வருகின்றனர். நீங்க என்ன வேணா பண்ணுங்க. ஆனால் தயவு செய்து இனிமேல் ரீமேக் மட்டும் பண்ணாதீங்க. எங்களால் தாங்க முடியல. என்னடா சூரரைப் போற்று எடுக்குறேன்னு சொல்லிட்டு பிதாமகன் ரீமேக் எடுத்து வச்சிருக்கீங்க என கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.

தமிழ் சினிமா மீது என்ன கோபம்
தமிழ் படங்கள் மீது உங்களுக்கு என்ன அப்படி ஒரு கொலவெறி. இங்கு நன்றாக எடுக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்ற நல்ல படங்களை எல்லாம் ரீமேக் செய்கிறேன் என்கிற பெயரில் இப்படி நாசப்படுத்தி வைக்கிறீர்களே. ஏற்கனவே சூர்யா நடித்த சிங்கம் படத்தை அப்படி தான் செய்தீர்கள். விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதாவை கெடுத்துட்டு இருக்கீங்க. இப்போ சூரரைப் போற்று படமா. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா அல்லது படத்தின் கதை புரியவில்லையா என கோபமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











