அஜித் தப்பிச்சுட்டாரு...ரஜினி, விஜய்க்கு இப்படி ஒரு சோதனையா...பாவம் என்ன செய்ய போறாங்களோ?
சென்னை : கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஷுட்டிங்குகள் ஐதராபாத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதுவும் பெரிய நடிகர்களின் படங்களில் பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத்தில் தான் எடுக்கப்படுகின்றன.
அது ஏன் ஐதராபாத்...அப்படி அங்கு என்ன தான் இருக்கிறது என ரசிகர்களும் குழம்பிப் போய் தான் உள்ளனர். ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஷாலின் துப்பறிவாளன் 2, தனுஷின் வாத்தி, அஜித் தற்போது நடித்து வரும் ஏகே 61, விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு என பல படங்களின் ஷுட்டிங் ஐதராபாத்தில் தான் நடக்கின்றன.
இதற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால் ஷுட்டிங்கை தமிழகத்தில் நடத்த ஆர்.கே.செல்வமணி உள்ளிடட சிலர் கோரிக்கை வைத்தும் வருகின்றனர்.

அது ஏன் ஐதராபாத்தில் ஷுட்டிங்
சரி...ஐதராபாத்தில் ஷுட்டிங் ஏன் என்ற கேள்விக்கு வருவோம். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி சுமார் 1666 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது தான் உலகத்திலேயே மிகப் பெரிய ஃபிலிம்சிட்டி. எவ்வளவு பெரிய செட் வேண்டுமானாலும் போடும் அளவிற்கு வசதிகள் இங்கு உள்ளன. அதனால் தான் பெரிய பட்ஜெட் படங்களின் ஷுட்டிங்கிற்காக இதை பலரும் தேர்வு செய்கிறார்கள்.

இப்படி ஒரு காரணம் இருக்கா
இட வசதி மட்டும் இதற்கு காரணமல்ல, கொரோனா பரவல் சமயத்தில் தமிழகத்தில் ஷுட்டிங் நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா போன்றவற்றில் முதலில் தடை விதிக்காமல் பிறகு தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோலிவுட்டில் பலரும் ஆந்திராவிற்கு சென்று ஷுட்டிங் நடத்தினர். ஆரம்பத்தில் சில காட்சிகளை அங்கு எடுத்து விட்டதால் மீதமுள்ள சீன்களையும் அங்கேயே எடுத்து வருகிறார்கள்.

அஜித் தப்பிச்சுட்டாரு
இனி அஜித் எப்படி தப்பி விட்டார் என்ற விஷயத்திற்கு வருவோம். அஜித் தற்போது நடித்து வரும் ஏகே 61 ஷுட்டிங் ஆரம்பம் முதலிலேயே ராமோஜி ஃபிலிம்சிட்டியில் 9 ஏக்கரில் போடப்பட்ட சென்னை மவுண்ட் ரோடு வங்கிக் கிளை போன்ற செட்டில் தான், ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது அங்கு ஷுட்டிங்கை முடித்து விட்டு, அடுத்து புனே மற்றும் சென்னையில் எடுக்க உள்ளதாக சொல்கிறார்கள். அதனால் ஏகே 61 டீமிற்கு இனி ஐதராபாத்தில் வேலையில்லை.

இப்பத்தான ஷுட்டிங் ஆரம்பிச்சாங்க
அதே சமயம் ஐதராபாத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செட்டில் சமீபத்தில் தான் விஜய்யின் வாரிசு பட ஐந்தாம் கட்ட ஷுட்டிங் துவங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் 3 கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் தான் நடத்தப்பட்டது என்றாலும்,தற்போது தான் மிக முக்கியமான காட்சிகளை படக்குழு எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் வரை இந்த ஷுட்டிங் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.

இவங்க இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே
வாரிசு டீம் பாதி படத்தை முடித்து விட்டார்கள் என்றால், ரஜினியின் ஜெயிலர் டீம் இனி தான் ஷுட்டிங்கை ஆரம்பிக்க போகிறார்கள். பல வதந்திகள், குழப்பங்கைள சமாளித்து தற்போது தான் ஒரு வழியாக ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் பூஜையுடன் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக செட் அமைக்கும் பணிகளும் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அட பாவமே இப்படியா ஒரு சோதனையா
ஆனால் இந்த சமயத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சமயத்தில் அங்கு மழை வேறு வெளுத்து வாங்கி வருகிறது. ஸ்டிரைக் ஆரம்பித்தால் உள்ளுர் படக்குழுவினர் ஷுட்டிங் நடத்துவதே சிக்கலாகி விடும், இதில் நம்ம ஊர் ஆளுங்க நிலைமையை கேட்கவா வேணும். வாரிசு மற்றும் ஜெயிலர் டீம்கள் இந்த புதிய சிக்கலை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தான் தற்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











