»   »  நிபுணன்.. பழைய பாணியில் ஒரு புதிய த்ரில்லர்

நிபுணன்.. பழைய பாணியில் ஒரு புதிய த்ரில்லர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீரியல் கில்லர் என்கிற வார்த்தை பெரும்பாலும் வெளிநாட்டு சினிமாக்கள்ல தான் உபயோக்கிக்கப்படும். தமிழ் சினிமாக்கள்ல இந்த சீரியல் கில்லர்ங்குற (ரஜினி நடிச்ச நான் சிகப்பு மனிதனில் அந்த வகை) வார்த்தை அதிகம் உபயோகப் படுத்துறதில்லை. இந்த சீரியல் கில்லர்கள் கொலை செய்ய ஆரம்பிக்கிறதுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனா அவங்க கொல்ற ஆளுங்க எல்லாரும் அவனோட சம்பந்தப் பட்டவங்களா இருக்கணும்னு அவசியம் இல்லை. அவர்களோட கொலைகளுக்கு ஒரு முடிவும் இருக்காது.

Nibunan Reader's review

உதாரணமா சிகப்பு ரோஜாக்கள் படத்துல கமல் ஒரு சீரியல் கில்லர். அவர் பெண்களை வெறுப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அவர் கொல்லுற பெண்கள் எல்லாரும் தப்பான பெண்களா இருப்பாங்களே தவிற கமலுக்கு அவர்களால எந்த நேரடி பாதிப்பும் இருக்காது. சிகப்பு ரோஜாக்கள், கலைஞன், மன்மதன், வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு சில படங்கள் சீரியல் கில்லர் வகையை சேர்ந்தவை. சீரியல் கில்லர்களுக்கு ஒவ்வொரு கொலையையும் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சைக்கோ கொலைகாரன்னா அவனுக்கு ஃப்ளாஷ்பேக் கூட வைக்கத் தேவையில்ல.


தமிழ் சினிமால இருக்க கில்லர்கள் தொடர்ந்து சிலபேரக் கடத்தி கொல்லுவாங்களே தவிர அவங்கள சீரியல் கில்லர்ன்னு சொல்ல முடியாது. ஏன்னா அவங்களுக்குன்னு ஒரு டெம்ப்ளேட் ஃப்ளாஷ்பேக் இருக்கும். அதுல ஒரு அரசியல்வாதி, ஒரு போலீஸ், ஒரு வக்கீல், ஒரு டாக்டர்ன்னு ஒரு கும்பலால ஹீரோ அல்லது வில்லனோட குடும்பம் அழிஞ்சி போயிருக்கும். அந்த நாலு பேர வரிசையா தீத்து கட்டுறத்தான் நம்மாளுக பண்ணுவாங்க.


இப்ப சீரியல் கில்லர் ஒருத்தன தேடிக் கண்டுபுடிக்கிற கதைக் களத்துல வெளிவந்துருக்க படம் நிபுணன். "நடிச்சா போலீஸ் சார்.. நா வெய்ட் பன்றேன் சார்"ன்னு சொல்ற நம்ம ஆக்சன் கிங்கோட நூத்தி ஐம்பதாவது படம். சும்மாவே போலீஸா நடிக்கிறவரு நூத்தம்பதாவது படம்னா சும்மா விடுவாறா? அவருக்காகவே ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி எழுதப்பட்ட ஒரு க்ரைம் இன்ஸ்வெஸ்டிகேஷன் கதை.


மத்தவங்கல்லாம் அயல்நாட்டு படங்கள காப்பி அடிச்சா ஒரு கான்செப்ட்டையோ இல்ல ஒருசில காட்சிகளையோதான் காப்பி அடிப்பாங்க. சாரி அப்டி சொல்லக்கூடாது. இன்ஸ்பையர் ஆவாங்கன்னு சொல்லணும். ஆனா நம்ம ஆக்‌ஷன் கிங் அப்டி இல்லை. மொத்தப் படத்தையுமே அப்டியே கொண்டு வந்துருவாரு.


ஆக்‌ஷன் கிங் நடிச்ச 'துரை'ங்கற படம் பாத்துருப்பீங்க. அது உலகப்புகழ் பெற்ற க்ளாடியேட்டர் படத்தோட ரீமேக்குன்னு இன்னும் பல பேருக்குத் தெரியாது. அப்டி தெரியாத மாதிரி ரொம்ப ஆழாகா செஞ்சிருப்பாரு. (கலா மாஸ்டர் ஸ்லாங்கில் படிக்கவும்). அதே மாதிரிதான் இந்தப் படத்துலயும் எதாவது அயல்நாட்டு படங்கள அடிச்சிருப்பாரோன்னு ஒரு டவுட் இருந்துச்சி. ஆனா அப்டி எதுவும் பெருசாத் தெரியல.


ஒரு கதையில இருக்க குழப்பங்களையும் முடிச்சுகளையும் அவிழ்க்க அதுவரைக்கும் அந்தக் கதையிலயே இல்லாத ஒரு கேரக்டர உள்ள புகுத்தி எல்லா குழப்பங்களையும், முடிச்சுகளையும் அவிழ்க்குறத Dues Ex Machina ன்னு சொல்லுவாங்க. உதாரணத்துக்கு துருவங்கள் பதினாறு. அதுவரைக்கும் கதையிலயே காட்டப்படாத ஒரு கேரக்டர கடைசில உள்ள புகுத்தி படத்தோட முடிச்சுகள அவிழ்த்துருப்பாங்க. இந்த நிபுணனும் கிட்டத்தட்ட இந்த Dues Ex Machina வகை தான்.


மற்ற அர்ஜூன் படங்களுக்கும் இந்த நிபுணன் படத்துக்கும் ஒரு பெரிய வித்யாசம் இருக்கு. மத்த படங்கள்ல க்ளைமாக்ஸ்ல அர்ஜூன் சட்டையக் கழட்டிட்டுதான் சண்டைபோடுவாறு. இந்தப் படத்துல சட்டையக் கழட்டாமையே சண்டை போடுறாரு. அவ்ளோதான்.


ஒரு இருபது வருஷத்துக்கு முன்னால ராஜேஷ்குமார் எழுதுன ஒரு நாவல இப்ப படிச்சா நமக்கு என்ன ஒரு தாக்கம் இருக்குமோ அதையேதான் இந்தப் படமும் குடுக்குது. போலீஸுக்கு க்ளூ குடுத்துட்டு வரிசையா ஆளுங்களக் கடத்துறது.. வரிசையா கொள்ளையடிக்கிறது, வரிசையா மூணு நாலு கொலை பண்றது இதெல்லாம் 1945லருந்து தமிழ் சினிமாவுல வந்துக்கிட்டு இருக்க விஷயம்.


அப்படிப்பட்ட பழைய கான்செப்ட்ல படம் பன்னும்போது , அத இப்ப இருக்க ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி எதிர்பார்க்காத ட்விஸ்ட், சஸ்பென்ஸ்ன்னு கதையில மட்டும் இல்லாம படத்தோட மேக்கிங்லயும் வித்யாசப்படுத்திக் காட்டுனாதான் எடுபடும். ஆனா நிபுணன் அதுல கொஞ்சம் கோட்டை விட்டிருக்காங்க.


படத்துல அர்ஜூன் ஒரு விஷயத்த கண்டுபுடிக்கிறதுக்கு முன்னால படம் பாக்குற நம்மாளுங்க அட்வான்ஸா கண்டுபுடிச்சிட்டு, "இதயே இப்பதான் கண்டுபுடிக்கிறீங்களா?"ங்குற மாதிரி கமெண்ட் அடிச்சிட்டு இருக்காங்க.


அர்ஜூனும், அவரோட டீம் ப்ரசன்னா மற்றும் வரலட்சுமியும் கேஸப் பத்தி விவாதிக்கிற காட்சிகளை இன்னும் நல்லா அமைச்சிருக்கலாம்.


ப்ரசன்னா ரொம்ப நேரம் திரையில வர்ற ஒரு அமெரிக்க மாப்பிள்ளை.. மத்தபடி ப்ரசன்னாவுக்கு பெரிய ஸ்கோப் எதுவும் இல்லை. அதே மாதிரிதான் வரலட்சுமியும். அத ஸ்க்ரீன்ல பாக்கும்போதெல்லாம் வடிவேலு மனோபாலாவப் பாத்து சொல்லுவாரே 'உன்னைய போலீஸ் வேலைக்கு தப்பா எடுத்துருக்காய்ங்க'ன்னு.. அந்த வசனம் தான் ஞாபகம் வந்துச்சி. வைபவ் இன்னொரு அமெரிக்க மாப்பிள்ளை.


அப்புறம் படத்துல பிறந்த தேதிய வச்சி ஒருத்தனோட ராசிய சொல்ற மாதிரி காட்சி வச்சிருக்காங்க. ஒரு குறிப்பிட்ட நாள்ல பிறந்த எல்லாருக்கும் ஒரே ராசி இருக்காது. ஒரே நாள்ல வெவ்வேறு ராசிகள் மாறும். ராசி என்பது நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிட்ட நாளை அல்ல.


ஆனந்த் வைத்தியனாதனோட இயக்கம், காட்சிகளோட மக்களை ஒன்ற வைக்க ரொம்ப நேரம் எடுக்குது. அதுவும் அர்ஜூனோட குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் எதோ ஏனோதானோன்னு நகருது. பாடல்கள் ஓகே ரகம்.


மொத்தத்துல புதிய வடிவில் பழைய ஃபார்முலா படம். ஒருதடவ பாக்கலாம்!


- முத்து சிவா

English summary
Reader's review for Nibunan Arjun's Movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil