»   »  விஸ்வரூபம் டிடிஎச்சிலும் இல்லை.. தியேட்டரிலும் இல்லை... ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிப் போனது!!

விஸ்வரூபம் டிடிஎச்சிலும் இல்லை.. தியேட்டரிலும் இல்லை... ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிப் போனது!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த விஸ்வரூபம் படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை.

இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. வரும் ஜனவரி 25-ம் தேதி தியேட்டர்களில் நேரடியாக வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் இறுதியானதா என்பதை கமல் உறுதி செய்யவில்லை.

விஸ்வரூபம் படத்தை கமல் எழுதி இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம்தான் இந்தப் படத்தை முதலில் தயாரித்தது. ஆனால் ரூ 50 கோடி வரை செலவழித்தவர்கள், ஏறிக் கொண்டே போன பட்ஜெட்டைப் பார்த்து, பின்வாங்கிவிட்டனர். கமலே தயாரிப்பையும் ஏற்றார். தியேட்டர்களில் பிரத்தியேகமாகப் பார்க்கும் வகையில் ஆரோ 3 டி ஒலி நுட்பத்தைப் பயன்படுத்தினார்.

கடைசியில் ரூ 95 கோடி வரை இந்தப் படத்துக்கு பட்ஜெட் எகிறிவிட்டது என்றார் கமல். இந்தத் தொகையை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டதால் படத்தை டிடிஎச் மூலம் வீடுகளில் முதலில் வெளியிடுவது, அடுத்த நாள் தியேட்டர்களில் வெளியிடுவது என்ற முடிவுக்கு வந்தார் கமல்.

இதனை அவர் வெளியிட்ட உடன் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. கமல் முடிவை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கவில்லை. அவரது எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டனர்.

இன்னொரு பக்கம் கமல் மும்முரமாக டிடிஎச் முயற்சியில் இறங்கினார். ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ், சன், வீடியோகான், டிஷ் ஆகிய 6 டிடிஎச் நிறுவனங்கள் இதில் கமலுடன் கைகோர்த்தன.

ஒரு இணைப்புக்கு ரூ 1000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே கமலுக்கு பெரும் லாபம் கிட்டும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் நடந்ததே வேறு. கமல் எதிர்ப்பார்த்த மாதிரி டிடிஎச்சில் முன்பதிவு நடக்கவில்லை. சில ஆயிரம் பேர்தான் ஒவ்வொரு டிடிஎச்சிலும் கட்டணம் செலுத்தி பதிவு செய்தனர், கடைசி நாளான நேற்றுவரை.

இன்னொரு பக்கம் 45 திரையரங்குகள் மட்டுமே இந்தப் படத்தைத் திரையிட முன்வந்தனர்.

இந்த நிலையில் கார்ப்பொரேட் தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாகியின் முயற்சியில், திரையரங்க உரிமையாளர்களுக்கும் கமலுக்கும் இடையில் சமரசப் பேச்சு நேற்று நடந்தது. விடிய விடிய நடந்த இந்த பேச்சில் விஸ்வரூபம் படம் எந்த அளவு சிக்கலில் உள்ளது என்பது குறித்து விவாதித்தனர்.

கடைசியில் இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதிலிருந்து கமல் பின்வாங்கியதாகத் தெரிகிறது. அதே நேரம் படத்தை திட்டமிட்டபடி ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. காரணம் அன்றைய தினம் வெளியாகும் அலெக்ஸ் பாண்டியனுக்கு அதிகபட்ச அரங்குகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் கமல் படத்துக்கு தரமான அரங்குகள் கிடைக்காது என்பதாலும், படத்தை யார் வெளியிடுவது என்பதில் எழுந்த சிக்கல் காரணமாகவும், இப்போதைக்கு படத்தை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

அபிராமி ராமநாதன் அல்லது ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடக் கூடும் என்று கடைசி நேர தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Kamal has shelved his Viswaroopam DTH release plans and the film has been postponed to January 25th.
Please Wait while comments are loading...