twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்பள பிரச்சனை... நாளை முதல் புதிய படங்களைத் தொடங்கமாட்டோம்!-தயாரிப்பாளர்கள் அறிவிப்பு

    By Shankar
    |

    சென்னை: 'பெப்சி' தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை காரணமாக, நாளை (புதன்கிழமை) முதல் புதிய படங்களை தொடங்க மாட்டோம், என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி)த்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பட அதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    சம்பள உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய சம்பள விகிதப்படி சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வோம் என்று சில தொழிலாளர்கள் நிபந்தனை விதித்ததால், சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த பட அதிபர்களின் கூட்டுக் கூட்டம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்)யில் நேற்று மாலை நடந்தது.

    கூட்டத்தின் முடிவில், 4 மொழி பட அதிபர்கள் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையை 'பிலிம்சேம்பர்' தலைவர் கல்யாண், நிருபர்கள் மத்தியில் படித்தார்.

    அந்த அறிக்கையில், "கடந்த இரண்டு மாதங்களாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மூலம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன், புதிய ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இந்த சூழ்நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த அமைப்புகள் அதிகபட்சமான, வரைமுறையற்ற ஊதிய உயர்வினை அறிவித்து விட்டார்கள்.

    ஆனால், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில், தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் நடந்த ஊதிய ஒப்பந்தத்தில் 10 முதல் 28 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வினை அளித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    புதிய படங்கள் நிறுத்தம்

    மும்பையில், குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என தரம் பிரிக்கப்பட்டு, ஊதிய விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு மட்டும் வரைமுறையற்ற ஊதியத்தை தொழிலாளர்கள் வாங்குவதால், தயாரிப்பாளர்கள் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால், தென்னிந்திய மொழிகளை (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) சேர்ந்த தயாரிப்பாளர்கள் இணைந்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில், வருகிற 7-ந் தேதி (நாளை) முதல் புதிய படங்கள் ஏதும் தொடங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அக்டோபர் 31-ந் தேதிக்குள்...

    தற்போது நடைபெற்று வரும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், அதற்கான பணிகளை வருகிற 31-10-2011-ந் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் எங்களுக்கு விருப்பமான எந்த பிரிவை சேர்ந்த தொழிலாளர்களையும் பணியில் அமர்த்திக்கொள்ளவோ அல்லது தேவையான ஆட்களை மட்டும் பணியில் அமர்த்திக்கொள்ளவோ எங்களுக்கு உரிமை உள்ளது.

    கர்நாடகாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள புதிய ஊதிய உயர்வை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என்று கூறப்பட்டுள்ளது.

    கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

    நேற்று நடந்த படஅதிபர்களின் கூட்டுக்கூட்டத்தில் பிலிம்சேம்பர் தலைவர் கல்யாணுடன் செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவிகொட்டாரக்கரா, துணைத் தலைவர் டி.சிவா, பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், முன்னாள் தலைவர் கேயார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர்கள் கே.முரளிதரன், கதிரேசன், தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் மற்றும் ஏராளமான பட அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.

    பெப்சி பதில்

    தயாரிப்பாளர்களின் இந்ததீர்மானம் பற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன செயலாளர் ஜி.சிவாவிடம் கேட்டபோது, "நாங்கள் எந்த காரணம் கொண்டும் படப்பிடிப்புகளை நிறுத்த மாட்டோம். இப்போது நடைபெறும் படப்பிடிப்புகள் அத்தனையிலும் நாங்கள் கலந்துகொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.

    இந்ததிடீர் முட்டுக் கட்டை காரணமாக தயாரிப்புப் பணிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், விரைவிலேயே சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.

    English summary
    The South Indian Film Chamber of Commerce announced that there will be no new film launch from tomorrow (Wednesday) due to the salary issue of FEFSI members.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X