»   »  மணி ரத்னத்தை ஓய்வெடுக்கச் சொல்ல நீங்கள் யார்?

மணி ரத்னத்தை ஓய்வெடுக்கச் சொல்ல நீங்கள் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எழுதாமல் இருக்கவேண்டும் என்றே நினைத்தேன். ஆனாலும் எழுதுகிறேன். காற்று வெளியிடை, தொழில்நுட்ப அளவில் மிக மிக சிறப்பான படம். இங்கே தொழில்நுட்பம் என்பதை முதன்மையாக ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், ஆர்ட். என்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தொழில்நுட்பங்களை தவிர்த்து கதை, திரைக்கதை என்று பார்த்தால்... இது மணி ரத்னத்தின் பழைய பழைய சோறாகவே இருப்பதே பிரச்சினை.

கதாநாயகி ஆதித்யா ராவ் ஹைதாரி, கார்த்தியை விட மிக மிக பிரமாதமாக நடித்திருக்கிறார். கார்த்தி சில காட்சிகளில் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால், சில ப்ரேம்களில் சில ஆங்கிள்களில் குளோசப்பில் பார்க்கும்போது 'ப்பா' என்றிருக்கிறது. கார்த்தி அடுத்தடுத்த படங்களில் அதை கவனத்தில் கொள்வது நல்லது.


 Nobody can force Manirathnam to retire from film industry?

காஷ்மீர், மிக மிக மிக அழகாக இருக்கிறது... அழகாக காட்டப்பட்டிருக்கிறது. காற்று வெளியிடையில்... மணிரத்னத்தையும் ஏர்.ஆர்.ரகுமானையும் கார்த்தியையும் பின் தள்ளி கதாநாயகனாக முன்னே நிற்கிறார், ஒளிப்பதிவாளர் எஸ்.ரவி வர்மன். போர்க்களம், கார்கில் பின்னணி என்று சொல்லப்பட்ட அளவுக்கு கார்கில் பிரச்சினையோ, போர்ப் பின்னணியோ.., போர் நிகழ்வுகளோ இல்லை என்பது காற்று வெளியிடையின் கனத்தை ரொம்பவே குறைத்துவிடுகிறது. பேருக்கு வானத்தில் பறந்து கொஞ்சம் பூமி பார்த்து குண்டு வீசி... சுடப்பட்டு பாகிஸ்தானுக்குள் விழுந்துவிடுகிறார். அதன் பின் தப்பிப்பதெல்லாம் சினிமா சினிமா மசாலா மசாலா. நம்மூர் வாகாவும், காற்று வெளியிடையும் முறையே பாகிஸ்தானுக்குள் செல்வதையும் அங்கிருந்து தப்பிப்பதையும் ரொம்ப ரொம்ப ஈஸியானதாக காட்டி இருக்கிறார்கள். உடனடியாக இரண்டு இயக்குநர்களும் 'பஜ்ரங்கி பாய்ஜான்' இந்திப் படத்தை பார்ப்பது நல்லது.


நிறைய ஷோபனாவும் கொஞ்சூண்டு சமந்தாவும் அதிதி ராவைப் பார்க்கும்போது மனதில் வந்து வந்து போகிறார்கள். ஆனால் அவர்களிடம் இருந்த இளமை மிஸ்ஸிங். நிறைய காதலித்து, நிறைய கண்ணீர் வடித்து, நிறைய தூரம் போய் தனியாக வாழ்கிற புதுமைப் பெண்ணாகி விடுகிறார் கடைசியில். அங்கேயும் அதிதியை விட அலைபாயுதே ஷாலினி வந்து முன்னே நிற்கிறார். அப்போ நம்ம என்ன செய்ய? ஓகே கண்மணியில் லீலா சாம்சன் கதாபாத்திரம் அளவுக்கு கூட காற்று வெளியிடை லீலா ஆபிரகாம் கதாபாத்திரம் மனதுக்குள் நிறையவில்லை.


அதோடு இந்திய விமானப் படைக்கு ஏதோ வகையில் சொந்தமான ஒரு வளாகத்திற்குள், கூட வேலை பார்ப்பவர்கள் எல்லாம் தனிக்கட்டைகளாக இருக்க, கார்த்தி மட்டும் அதிதி ராவ் உடன் சதா கொஞ்சுவது, சரியா என்பதை விட்டுவிட்டாலும் எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. அதிலும் ஃபைட்டர் பைலட்டுகள் பயிற்சி எடுக்கும் இடத்தில் ஓடு தளத்திற்கே ஓடி வந்து காதலிக்கிறார் அதிதி ராவ். சினிமாதான் என்றாலும் ஓரளவு நியாயம் வேண்டுமா.. அப்படி திறந்த மடமாகவா இருக்கும் விமானப் படைக்குச் சொந்தமான ஒரு இடம்.


கார்த்தி, பாகிஸ்தான் சிறையில், தப்பித்து வரும் வழியில் காதலி பற்றி நினைக்கும்போதெல்லாம், மரியான் தனுசும் பார்வதியும் சொல்லாமல் கொள்ளாமல் திரையிலயே வந்து நிக்கிறார்கள். நமக்கு என்ன பண்றதுன்னே தெரியல. சரி போகட்டும் பார்ப்போம்னுதான் பார்க்க வேண்டி இருக்கு.


உளவியல், பெண்ணியம் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து பேச்சுகள். அம்பூட்டும் தெரிஞ்ச அட்வான்ஸ்டு 'பிள்ளை' குடும்பத்தில் இவர் ஆணாதிக்கம் எல்லாம் ஒட்டவே இல்ல. அதை விட முக்கியமான விசயம் தம்பிக்கு கல்யாணம் நடக்கும்போது, மனைவியாகப் போகிற அவரது காதலி கர்ப்பமாக இருக்கிறாள். குடும்பமே கொண்டாட்டம் போட்டுத்தான் கல்யாணத்தை நடத்தி வைக்கிறாங்க. அந்தப்பாட்டு கூட ஏதோ பழைய பாட்டை ஞாபகப்படுத்துது. 'தன்னன்னாதினம் தன்னன்னாதினம் தன்னன்னாதினம் தன்னானே...' என்பதை கொஞ்சம் டெம்போவோ லாரியோ பிச்சோ எதையோ கொறைச்சு கூட்டி பாடுற மாதிரி இருக்கு.
அவ்வளவு அட்வான்ஸ்டு குடும்பத்தில் மூத்த மகனான, கார்த்தியிடம் கர்ப்பமாக இருக்கிற அவரது காதலி, காதலன் கிட்ட 'எஸ்ஸா, நோ'வான்னு கேக்கிறா. அதுக்கு காதலன் ஆகிய கதை நாயகன் சொல்ற பதில் "எங்கப்பனை மாதிரி நானும் மோசமான அப்பனா இருந்திருவேனோன்னு, பயமா இருக்கு."


சரீ... இவ்வளவு வெவரமான ஃபைட்டர் பைலட், கர்ப்பம் ஆகிற அளவுக்கு காமத்தில் ஈடுபடுவாராம், முன் எச்சரிக்கை இல்லாமல். அதுக்கப்ப்புறம் அட்வான்ஸ்டு மோட்ல இருந்து அரதப்பழசு மோட்க்கு போயிருவாராம். நல்ல போங்காட்டம்.


அதே மாதிரி, இன்னொரு காட்சியில் காதல் மேலிட, கண்ணீர் வடிக்கிறாள் காதலி. 'ஆணை விட பெண் எல்லா வகையிலும் இயற்கை நியதிகளின்படி குறைவானவள் தான்' அப்டிங்கிற அர்த்தம் வர மாதிரி ஒரு வசனம்... அதை அந்த அசாத்திய திறமைசாலி டாக்டரம்மா மறுத்தே பேசமாட்டாங்க. அப்டின்னா நீங்க என்ன சொல்ல வரீங்க இயக்குநரே?


வான் வருவான்... கேட்கிறப்போ அழகா இருக்கு. ஆனா ஓகே கண்மணி பாடல்கள் அளவுக்கு மனசுக்குள்ள தங்க மறுக்குது. அழகியே பாட்டு.... மணிரத்னம் பாட்டா... கௌதம் மேனன் பாட்டான்னு சட்டுன்னு ஒரு கொழப்பம் வந்துட்டு போறது எனக்கு மட்டுந்தானான்னு தெரியல.


இசை பற்றி பேசுறப்போ தீவிர ரஹ்மான் ரசிகர்கள் சிலர் ரஹ்மான்-மணிரத்னம் ஈகோ இல்லாத 25 வருசம்னு பயங்கரமா போஸ்ட் போடுறாங்க. கூடவே 25 வருசமா இளையராஜா-மணிரத்னம் காம்போக்கு RIPனு வேற போடுறாங்க. இது ரகுமான் மேல உள்ள ப்ரியத்தை குறைக்கிற செயல்தான். ஏன்னா 1983ல் இருந்து 1991க்குள்ள வெறும் ஏழு வருசத்துல 11 மணி ரத்னம் படத்திற்கு இசை அமைச்சிருக்கார் இளையராஜா (சத்ரியன் உள்பட). அதுல ஒரு படத்தைக்கூட நீங்க மிஸ் பண்ண முடியாது.


தவிரவும் மணிரத்னம் ரஹ்மானுக்கு இடையில் ஈகோ வரதுக்கு அங்க என்ன இருக்கு. ரெண்டு பேருமே ரொம்ப பேசாதவங்கன்னு (ஊருக்கு) தெரியும். 25 வருசத்துல 13 படம் சேர்ந்து பண்ணிருக்காங்க. அந்த 13 படத்துக்காக இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து 13 நாள் பேசி இருப்பாங்களேங்கிறதே சந்தேகம். அதாவது 13x24 மணி நேரம் மொத்தம் பேசி இருப்பாங்களோ என்னவோ. அப்புறம் எங்க ஈகோ வரது. அதாகப்பட்டது என்னன்னா... இந்த ராஜா-ரகுமான் ஒப்பீடு செஞ்சி குளிர் காய ஆசைப்படாதீங்க அப்டிங்கிறதுதான். அவரவர் காலத்தில் அவரவர் திறமைகாட்டி இருக்காங்க. அதுல எது பெரிசு எது சின்னதுன்னு நீங்க சொல்ல வேண்டாம். ஊரு சொல்லட்டும்.


மீண்டும் கதைக்கு வருவோம். தன் 3வது காதலி கிட்ட ரெண்டாவது தம்பிய அறிமுகப்படுத்துற விசி என்கிற வருண் சக்கரவர்த்தி பிள்ளை, தம்பி பேருக்கு பின்னால வலுக்கட்டாயமா #பிள்ளை ன்னு அழுத்தி சொல்றாரு. இத்தனைக்கு அது அந்த கதைக்கு எந்த வகையிலும் தேவையே இல்லை. அதிலும் அந்த அப்பாக்காரரை பார்த்தா பக்கா பானிபூரி சோன்பப்டி வகையறாவா தெரியிறார். எதுக்கு இந்த தேவையில்லாத ஒட்டாத திணிப்பு?


இந்தப் படத்தில் மிகப்பெரிய ஆச்சர்யமாக நான் நினைத்தது... தேச பக்தி ஊ.ட்டுவதற்காக ரொம்ப மெனக்கிட்டு நம்மை பாடாய்படுத்தவில்லை. இந்திய தேசிய கொடி கூட பயன்படுத்தவில்லை. அதோடு எதிரி நாடு என்பதற்காக பாகிஸ்தானையும் இஸ்லாமியர்களையும் இஷ்டத்திற்கு மோசமாக சித்தரிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். அதுதான் உண்மையெனில் அதற்காக மணிரத்னம் அவர்களுக்கு ஒரு சிறப்பு வணக்கம்.


கதையும், கதைக்களமும், திரைக்கதையும், இதுவரை பார்த்தறியாத அனுபவத்தையும் இதுவரை கேட்டறியாத கதை அனுபவத்தையும் தருவதைப்பொறுத்தே அது நல்ல படம் என்றோ, கெட்ட படம் என்றோ ரசிகன் முடிவு செய்வான்.


அந்த வகையில் மணிரத்னம் படங்களைப்பொறுத்தவரை தாறுமாறு காதலும் காஷ்மீரும் ரகுமான் பாடல்களும் ரசிகனுக்கு புதிதே இல்லை என்ற காரணத்தால் 'காற்று வெளியிடை' ரொம்ப சாதாரணமான படமாகி விடுகிறது. போர்க்களப் பின்புலத்தில் நடக்கிற காதல்... ஆனால் போர்க்களம் கதைக் களம் இல்லை என்பதாலும் படம் சிறப்பற்றதாக மாறிவிடுகிறது.


ரீப்பீட் என்பது புரியாதவர்கள், அது தெரியாதவர்கள்... அது இடைஞ்சலாக இல்லாதவர்களுக்கு காற்று வெளியிடை காட்சிகளும் கதாபாத்திரங்களும் பாடல்களும் மிக அழகான அனுபவமாகவே இருக்கும். நீங்கள் மணிரத்னத்தின் ரோஜா, அலைபாயுதே மற்றும் அவர் படமல்லாத மரியான் படங்களை நீங்கள் பார்த்திருந்தால் காற்று வெளியிடை உங்களைக் கொஞ்சம் கடுப்பேத்தும் என்றே நம்புகிறேன்.


மற்றபடி மணிரத்னம் ஓய்வெடுக்கவேண்டும் என்று சொல்வதெல்லாம் நம் உரிமை இல்லை. அவர் சொந்தக் கம்பெனியில்தான் படம் எடுக்கிறார். அதை பேரம் பேசி வாங்கி வெளியிட, சினிமா வணிகர்கள் வரிசையில் நிற்கும் வரை அவர் படம் எடுத்துக்கொண்டுதான் இருப்பார். ஓடுவது ஓடாததெல்லாம் விசயமல்ல. தவிரவும் அவர் படமே பார்ப்பதில்லை என்று சொன்ன ஞாபம். அதிலும் தமிழ் படங்களுக்கு நோ. அதனால் பருத்திவீரன் கூட்டு பாலியல் வன்முறையை, அதே ப்ரியாமணியை வைத்து ராவணன் படத்திலும் வைத்திருந்தார். மக்கள் கருத்துக்கள் பற்றி எல்லாம் அவர் எப்போதும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. முதன்முறையாக இப்போது கவலைப்பட்டிருப்பார் போலும். அதனால் தான் ஒரு அறிக்கை வந்திருக்கிறது. 'Four Miles to Freedom' என்ற புத்தகத்தில் உள்ள ராவல்பிண்டி சிறையில் இருந்து தப்பித்தல் தொடர்பான உண்மை சம்பவங்களைத்தான் காற்றுவெளியிடை படத்தில் பயன்படுத்தி உள்ளோம் என்கிறது அந்த அறிக்கை. ஏதோ ஒரு கொரியன் சீரியல் தான் காற்று வெளியிடை என்று காத்துவாக்கில் வந்த செய்திதான் இந்த அறிக்கைக்கான காரணமோ என்னவோ...


'பூமாலையே தோள் சேரவா...' தொடங்கி.... 'யமுனை ஆற்றிலே...' வழியாக... 'மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை...' வரை மணி ரத்னம் தமிழ் சினிமாவின் இசை மற்றும் பாடல்கள் வகையிலும் படங்கள் வகையிலும் மிக முக்கியமான ஆளுமையாக இருந்திருக்கிறார். இருந்து கொண்டிருக்கிறார்.


அதிலும் 1983 முதல் 1991 வரை 7 வருடங்களில் இளையராஜாவுடன் பணியாற்றிய பல்லவி அனுபல்லவி, உணர்வு, பகல்நிலவு, இதயகோயில், மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி, தளபதி மற்றும் கதை வசனம் எழுதித் தயாரித்த சத்ரியன் ஆகிய 11 படங்களில் உள்ள எந்த ஒரு பாடலையும் இன்று கூட நீங்கள் ஒதுக்கிவிட முடியாதபடி என்றும் புதுமையாக ரசனையாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.


அதைப்போலவே... 1992ல் தொடங்கி 2017 இன்று வரை 25 வருடங்களில்... ரகுமானுடன் சேர்ந்து பணியாற்றிய 12 படங்களான ரோஜா, பம்பாய், இருவர், உயிரே(தில் சே), அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு, ராவணன் (ராவண்), கடல், ஓகே கண்மணி... காற்றுவெளியிடை ஆகிய படங்களும் பாடல்களும் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படுபவையே. எனவே, மீண்டும் ஆகச்சிறந்த ரசனைக்குரிய படைப்போடு மணி ரத்னம் வருவார். வரவேண்டும். காத்திருப்போம். அதுவரை அவர் தந்திருக்கும் படங்களை, பாடல்களை மீண்டும் பார்த்து ரசித்திருப்போம்.


- முருகன் மந்திரம்

English summary
An analysis on Manirathnam's latest release Kaatru Veliyidai by lyricist Murugan Manthiram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil