»   »  நினைவுகளை ஆளும் திரையரங்குகள்

நினைவுகளை ஆளும் திரையரங்குகள்

By Shankar
Subscribe to Oneindia Tamil

- மகுடேசுவரன்

திருப்பூர்ப் புத்தகக் கண்காட்சியில் 'பெரியப்பா' என்று எங்களால் அன்போடு அழைக்கப்படும் யுனிவர்சல் திரையரங்க முதலாளியோடு சற்றே பேச வாய்த்தது. அன்னார் திரைத்தொழிலில் அறுபதாண்டுகள் கண்டவர். இந்நகரில் கட்டி எழுப்பப்பட்ட முதல் திரையரங்குகள் பலவற்றிலும் பங்குதாரராக இருந்தவர். இன்றைக்கும் யுனிவர்சல் திரையரங்கம் தனிப்பேரரங்கமாகப் புதுமைப்பட நிற்பதற்கு அவரின் தொழில் வேட்பே காரணம். புது முயற்சித் திரைப்படங்களுக்குத் தம் அரங்கைத் தந்து புரப்பவர். 'இருவர்' திரைப்படம் வெளியானபோது முதற்காட்சி பார்த்துவிட்டு "இப்பெண்மணி அடுத்த பத்திருபது ஆண்டுகளுக்கு இந்தியத் திரையை ஆள்வாள்" என்று அவர் ஐசுவர்யாவைக் கணித்துச் சொன்னது நினைவிருக்கிறது. என் புது நூல் எது வரினும் முதலாய் வந்து வாங்கி வாழ்த்துவார். "கண்ணதாசனுக்கு அப்புறம் உங்களை என் விருப்பத்துக்குரிய கவிஞனாக மதிக்கிறேன்...," என்று மகிழ்ந்து கூறுவார்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது "இனிமேல் திரைத்தொழில் என்னாகும்ங்க ?" என்று கேட்டேன்.

Nostalgia on cinema halls

"சினிமா இருக்கும். அதற்கு முடிவே இல்லை. சினிமாவுக்குள்ள புதுசு புதுசாக வருபவர்கள் ஓயவே மாட்டார்கள். ஆனால் பாருங்க... சினிமாவுக்குள் வருகின்ற யாரும் வீழ்ச்சியைச் சந்திச்சே ஆகணும். சினிமா உருவாக்கத்தில் பங்கெடுத்தாலும் சரி, சினிமாத் தொழிலில் பங்கெடுத்தாலும் சரி, அந்தச் சரிவை அவர் சந்தித்தே ஆகணும். சினிமா அழியாது, சினிமாக்காரன்தான் அழியும்படி ஆயிடுது. இனிமேல் தனித் திரையரங்குகளை நடத்த முடியாது. அறுநூறு எழுநூறு எண்ணூறு பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவுக்குத் திரையரங்குகளைக் கட்டி வைத்தோம். அவற்றை இனி நடத்துவது நட்டத்தில் முடியும். சனங்க இன்னும் படம் பார்க்க வரத்தான் செய்யறாங்க. ஆனால், அறுநூறு எழுநூறு இருக்கைகளை நிரப்புமளவுக்கு வரவில்லை. ஒரு திரையரங்கை வெற்றிகரமாக நடத்தணும்னா அது சிறியதாக இருப்பதுதான் இனி நல்லது. வெறும் இருநூறு இருக்கைகள் மட்டுமே இருக்கும்படி ஒரு திரையரங்கைக் கட்டினால் நட்டமே இல்லாமல் நடத்தலாம். அந்த எண்ணிக்கைக்கு மேல் பார்வையாளர்கள் வருவார்கள் என்று இனிமேல் நம்புவதற்கில்லை. அப்படி வருபவர்களுக்கு அடுத்த திரையரங்கில் அதே படத்தைக் காணும் வாய்ப்பும் இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த இருக்கைகளைக்கொண்டு ஒரு திரையரங்கைக் கட்டுகிறார்களோ அதனை ஏற்று அரசு இசைவு தரவேண்டும். அரசாங்கம் பார்த்து இதன் வாய்ப்புகளை முறைப்படுத்தி வேண்டியவற்றைச் செய்து தந்தால் இத்தொழில் இன்னும் நன்றாகப் போகும்." என்று விரிவாகக் கூறினார். மேலும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தவர் என்னுடைய காலதர், ஒன்றாய்க் கலந்த உலகு ஆகிய நூல்களை வாங்கிக்கொண்டு விடைபெற்றார்.

Nostalgia on cinema halls

திருப்பூர் மாநகரமானது திரைப்படத்தைத் தவிர வேறெந்தப் பொழுதுபோக்குக்கும் வழியில்லாத ஊர். யுனிவர்சல், புஷ்பா, கஜலட்சுமி, தனலட்சுமி, டைமண்ட், உஷா ஆகியவையே இந்நகரின் முதற்பெரும் திரையரங்குகள். அதற்கடுத்து வந்தது ஜோதி திரையரங்கம். கோவையிலிருந்து செயல்பட்ட புகழ்பெற்ற படப்பிடிப்புத் தளத்தின் (ஜூபிடர் அல்லது சென்ட்ரல் ஸ்டுடியோ என்று நினைவு) எச்சம்தான் ஜோதித் திரையரங்கம். அந்தத் திரையரங்கம் இருக்கும் வீதிக்கு 'ஜோதித் திரையரங்க வீதி' என்றே மாநகராட்சி அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் கூடும் கட்டடத்தின் அடையாளத்தில் அவ்வீதிக்குப் பெயர் வைக்கப்படுகிறது என்றால் அக்கட்டடம் அம்மக்கள் வாழ்வில் எவ்வளவுக்குக் கலந்திருக்க வேண்டும்! சென்னை மலைச்சாலையில் சாந்தி, அலங்கார் என்று பேருந்து நிறுத்தங்கள் எத்தனை கோடி மக்களால் எத்தனை கோடி முறை கூறப்பட்டிருக்கும்! அதைப் போன்றதுதான் ஓர் ஊரின் அடையாளக் கட்டடங்கள்.

திருப்பூரின் மேற்சொன்ன ஆறில் நான்கு திரையரங்குகளில் இன்றும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் உஷா திரையரங்கத்தை ஒரு தீப்பேரிடரின் பின்னர் இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டினார்கள். தனலட்சுமி திரையரங்கம் ஆங்கிலப் படங்களை மட்டுமே திரையிட்டுப் புகழ்பெற்றிருந்தது. நான் சிறுவனாக இருக்கையில் தனலட்சுமித் திரையரங்குக்குச் செல்வதை ஏற்கவே மாட்டார்கள். ஆங்கிலப் படங்களில் அரையுடுப்புக் காட்சிகளைப் பார்ப்பதற்கு யார்தான் இசைவார்கள் ? புரூஸ்லீயின் படங்களும் உமர் முக்தாரும் திரையிடப்பட்டபோது தனலட்சுமித் திரையரங்கம் உள்ள கொங்குச் சாலையில் செல்லவே முடியாது. புரூஸ்லீ நடித்த பிக்பாஸ் என்ற திரைப்படத்தில் என்னதான் இருந்தது ? ஆனால் அந்தப் படத்தை ஊரே திரண்டு பார்த்தது. அன்றைக்கு ஆங்கிலப் படங்கள் என்றாலே வியப்பும் மயக்கமும்தாம்.

Nostalgia on cinema halls

யுனிவர்சல் திரையரங்கம் இதுவரை பன்முறை புதிதாக்கிக் கட்டப்பட்டது. வெளியானபோது பார்க்கத் தவறிய எண்ணற்ற திரைப்படங்களை யுனிவர்சலின் மறு திரையீட்டில் பார்த்திருக்கிறேன். அவ்வாறு பார்த்ததில் மூன்றாம் பிறையை மறக்க முடியாது. டைமண்ட் திரையரங்கத்தைப் பற்றி இன்றும் நினைவுபடுத்திக் கூறுமளவுக்கு நினைவுத்திறன் மிக்கவர் நண்பர் வி.டி. சுப்பிரமணியன். "டைமண்ட் தியேட்டர்ல முதல் படம் பச்சை விளக்கு. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு... தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாச்சு..." என்பது அவருடைய நினைவுகூரல். ஓய்வுபெற்ற வட்டாட்சியரான அவர் இந்நகரின் திரைப்படச் சங்கத்தை நிறுவியர். உலகின் புகழ்பெற்ற திரைப்படங்களைத் தேடி வருவித்து இத்திரையரங்குகளில் காலை எட்டு மணிக்குத் திரையிட்டவர். இவ்வரங்குகளின் அதிபர்கள் அனைவரும் அன்னார்க்கு நண்பர்கள். அதனால் அவரால் இவற்றை எளிதில் செயலாக்க முடிந்தது.

டைமண்ட் திரையரங்கம் போன்று நீண்ட அகன்ற வளாகம் நகர் நடுவில் வேறெங்கும் இருக்கிறதா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட அரச தோரணை மிகுந்த முன்முகப்பு. திருப்பூர்க்குப் படம் பார்ப்பதற்கென்று சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து பேருந்து பிடித்து வருவார்கள். அவர்களுடைய முதல் தேர்வு டைமண்ட் திரையரங்கம்தான். பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதால் எந்தப் படத்தைத் திரையிட்டாலும் டைமண்டில் கூட்டம் திரண்டு நிற்கும். திரிசூலம், முந்தானை முடிச்சு, கரகாட்டக்காரன், வைகாசி பொறந்தாச்சு போன்ற படங்கள் டைமண்ட் திரையரங்கில் சக்கைப்போடு போட்டன. திருப்பூரில் ஆறு மாதங்களுக்கு மேல் ஓடி இருநூறு நாள்களைத் தொட்ட ஒரே திரைப்படமான திரிசூலம் டைமண்ட் திரையரங்கில்தான் வெளியானது. நகரத்தின் இன்றியமையாத முனையமாக உள்ள புஷ்பா திரையரங்கம் இன்று மூடப்பட்டிருக்கிறது. பழைமை மாறாத கட்டடங்களில் ஒன்று என்றால் அதைத்தான் குறிப்பிட வேண்டியிருக்கும். நகரின் எல்லா அரங்கங்களும் கைப்பிடியுள்ள இருக்கைகளை அமைத்தபோதும் புஷ்பாவில் மரக்கட்டை நீள்பலகைகளை உடைய இருக்கைகள்தாம் இருந்தன. உரிமை வழக்கில் மாட்டியிருப்பதால் புஷ்பா திரையரங்கம் கைவிடப்பட்டது என்று நினைக்கிறேன்.

தமிழகத்தின் அரை நூற்றாண்டுக் கால வரலாற்றில் அதன் நகரங்களின் திரையரங்குகளுக்கும் தனித்த தடமுண்டு. கலைச்சுவைப்பில் ஈடிணையற்ற ஆர்வத்தைக் காட்டிய தமிழ்மக்கள் திரையரங்குகள் முன்னம் படைபோல் திரண்டு படம்பார்த்தார்கள் என்பதை எதிர்காலத் தலைமுறையினர் நம்புவதற்குத் தயங்குவார்கள். நகர வாசிகளின் நினைவில் ஆற்றில் வெள்ளம் வந்த நாள், திருவிழாவுக்குத் தேரோடிய நாள் போன்றவற்றின் நினைவுகளைப்போல ஒரு திரையரங்கில் திரைப்படம் பார்த்த நாளும் மறக்க முடியாத ஒன்றுதான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Magudeswaran's nostalgia on singl big cinema halls

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more