இது நியாயமே இல்லை.. எங்க படத்துக்கும் தியேட்டர் ஒதுக்கணும்.. கொதித்தெழுந்த எனிமி பட தயாரிப்பாளர்!
சென்னை: வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் விஷால் மற்றும அர்யா நடிப்பில் உருவாகி உள்ள எனிமி படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள எனிமி படத்திற்கு போதுமான தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை அதன் தயாரிப்பாளர் வினோத் முன் வைத்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் அதே தேதியில் வெளியாக உள்ள நிலையில், மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது.

எனிமி தீபாவளிக்கு வருமா
இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த படத்திற்கு போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை என அந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத் புலம்பியுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.

ஒடிடிக்கு போகவில்லை
பிரபல நடிகர்கள் இன்னமும் ஒடிடியில் படங்களை வெளியிட்டு வரும் நிலையில், பெரிய ஒடிடி நிறுவனம் கொடுத்த ஆஃபரையும் தூக்கிப் போட்டு விட்டு தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கும் எங்களுக்கு இப்படி போதுமான தியேட்டர்களை ஒதுக்காமல் பெரிய படம் வெளியாவதால் அந்த படத்திற்கே அனைத்து தியேட்டர்களையும் ஒதுக்குவது நியாயமா? என்கிற கேள்வியை அவர் எழுப்பி உள்ளார்.

250 போதும்
மொத்தம் உள்ள 900 தியேட்டர்களிலும் அந்த சூப்பர் ஸ்டார் படத்தையே திரையிட்டால் எப்படி? என்றும் எங்களுக்கு அதிகமாக கூட கேட்கவில்லை அதில் ஒரு 250 தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும் எங்களுக்கு வரவேண்டிய ஷேர் நிச்சயம் வரும் என்றும் மொத்த தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை. அப்படியொரு சாதனை இதுவரை நடந்ததும் கிடையாது என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இடைஞ்சலான அண்ணாத்த
ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளியை குறிவைத்து ரிலீசாக காத்திருந்த பல படங்களுக்கு பெரும் இடைஞ்சலாக மாறி உள்ளது. தல அஜித்தின் வலிமை படம் தள்ளிப் போகவும், சிம்புவின் மாநாடு தள்ளிப் போகவும் அண்ணாத்த ரிலீஸ் தான் காரணம் என்கின்றனர். இந்நிலையில், விஷால், ஆர்யாவின் எனிமி படமும் சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால் தீபாவளி ரிலீஸ் சாத்தியமா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.

சும்மா விடமாட்டேன்
தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் ஐடியாவே எங்களுக்கு இல்லை. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் எங்களுக்கு இந்த விவகாரத்தில் தேவையானவற்றை செய்து ரிலீஸில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், அது நடக்காமல் போனால் சும்மா விடமாட்டேன். நீதி கிடைக்க என்ன போராட்டம் வேண்டுமானாலும் செய்ய தயார் என்றும் வினோத் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











