»   »  பழைய திரையரங்கங்கள் நினைவுச் சின்னங்களாக வேண்டும்!

பழைய திரையரங்கங்கள் நினைவுச் சின்னங்களாக வேண்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-கவிஞர் மகுடேசுவரன்

ஒவ்வோர் ஊரிலும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவே அவ்வூர்த் திரையரங்கங்கள் மாறியிருக்கும். திரையரங்குகள் நிலக்குறிகளாக (LandMark) விளங்குகிற காலகட்டம் நம்முடையது. "கொங்கு நகர்தானே போகணும்? தனலட்சுமி தியேட்டர் எங்கேன்னு கேளுங்க... நேரா அங்கே போயிடுவீங்க...," என்று சொல்லிக் கொடுப்பார்கள். "சென்ட்ரல் தியேட்டர்கிட்ட வந்து நில்லுங்க... நான் வந்து உங்களைக் கூட்டிக்கிட்டுப் போய்க்கறேன்..," என்று கூறிக் கொள்வார்கள்.

Old Theaters, memorial of a place!

எவ்வளவு பெரிய நகரமாக இருந்தாலும் அந்நகரின் பெருந்திரள் கூடம் திரையரங்கம்தான். அந்நகர மக்களில் பெரும்பான்மையர், ஏன் எல்லாருமே ஏதேனும் ஒரு நாளில் அத்திரையரங்கில் நுழைந்து வெளியேறியிருப்பார்கள். படிக்கத் தெரிந்தவர்களாயினும் சரி, பாமரர்களாயினும் சரி, அவர்களுக்கு அவ்வூரின் திரையரங்கப் பெயர்கள் அனைத்தும் தெரியும். ஓர் ஊரின் திரையரங்கம் அது கட்டப்பட்டிருக்கும் இடத்திற்குப் பொது அடையாளம்.

தமிழ்நாட்டில் இரண்டே இரண்டைத்தான் நிலக்குறிகளாக நம் மக்கள் தொடர்ந்து அடையாளப்படுத்துகின்றனர். அவ்விரண்டில் ஒன்று திரையரங்கம், இன்னொன்று என்ன தெரியுமா ? சிலைகள். ஒவ்வோர் ஊரிலும் முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் தவறாது எழுப்பப்பட்டிருப்பவை சிலைகளே. ஐம்பதாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சிலைகளே அதிகம் நிறுவப்பட்டன. இப்போதென்னவோ தெரியவில்லை, சிலைகளுக்கு நிகராகவே சிறு கோவில்கள் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் தோன்றியிருக்கின்றன. முன்புபோல் சிலைகளை இலட்சியக் குறியீடாகக் கருதுகின்றோம் என்று நம்ப வேண்டியதில்லை. வரலாற்றுத் தலைவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் என்பதைப்போல் அதைக் கருதத் தொடங்கிவிட்டோம். சிலைகளை நிறுவுவது, அகற்றுவது, உடைப்பது ஆகிய எல்லாச் செய்திகளுக்கும் பழகிவிட்டோம். அதனால் சிலைகளைப் பற்றிக் கூறுவதில் நமக்கே சலிப்பு தட்டிவிட்டது. "அங்கே போனீங்கன்னா ஒரு சிலை இருக்கும்," என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அங்கே சென்றால் இன்னார் சிலை இருக்கும் என்றெல்லாம் விளக்கிக் கூறுவதில்லை.

ஏறத்தாழ சிலைகள் எழுப்பப்பட்ட அதே காலகட்டத்தில்தான் அந்தந்த ஊரில் திரையரங்கங்களும் புதிது புதிதாகத் தோன்றலாயின. "எங்க ஊருக்கே தியேட்டர் வந்துருச்சு...," என்று ஊர்ப்புறச் சிறுவர்கள் மகிழ்ச்சியோடு கூறிக்கொள்வர். மேலும் மூன்று நான்காண்டுகளுக்கு உரிமம் பெற்று நடத்தப்படும் கொட்டாய்களும் நிறையவே தோன்றின. கொட்டாய்களில் தரை மண் மீதமர்ந்து படுத்துக்கொண்டே படம் பார்த்ததைப் போன்ற இன்பம் இனி எந்தப் பிறவியிலும் கிடைக்காது. நான் பார்த்த ஏராளமான திரைப்படங்கள் அதுபோன்ற ஒரு கொட்டாயில்தான். அந்தக் கொட்டாய் இருந்த இடத்தில் இப்போது மாபெரும் திரையரங்கம் இருக்கிறது. அது திரையரங்கமாகக் கட்டப்பட்டபின் அங்கே சென்று ஒரு படத்தைக் கூட நான் பார்க்கவில்லை. பீடிப்புகை மணத்தோடும் மண்கவிச்சையோடும் டி.எம். சௌந்தரராஜன் குரலில் "தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே... முருகையா... தீஞ்சுவை ஆகவில்லையே...," என்று ஒலிபெருக்கியில் பாடல்போட்டு ஊராரை அழைக்கும் அந்தக் கொட்டாய்க்கு நிகராக வானளாவிய அரங்கம் வந்து என்ன பயன்? என் நினைவுகளுக்கு அந்தப் புதுக்கட்டடத்தோடு தொடர்பில்லையே.

திரையரங்குகள் ஊருக்கு ஒன்றிரண்டாக இருந்தபோது அது அவ்வூரார்க்குப் பெருவியப்பைத் தரும் கட்டடமாக இருந்திருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களையும் கோவை போன்ற ஆலை நகரங்களையும் விட்டுவிடுங்கள். அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் ஒவ்வொரு நகரத்திலும் கட்டப்பட்ட தனிப் பெருங்கட்டடம் அவ்வூரின் திரையரங்கமே. உயரத்தில் அகலத்தில் நீளத்தில் திரையரங்கங்களே முதன்முதலில் பெரிதாய் எழுப்பப்பட்டன. அதற்கும் முன்பிருந்த பெருங்கட்டடமாக சில ஊர்களில் நகர மண்டபங்கள் இருந்திருக்கலாம். சில ஊர்களில் கல்விக்கூடக் கட்டடங்கள், அரசுக் கட்டடங்கள் இருந்திருக்கலாம். ஆனால், திரையரங்கம்தான் அவ்வூரார் அனைவர்க்கும் திறந்துவிடப்பட்ட தனிப் பெருங்கட்டடம் என்றால் மிகையில்லை. நம் நகரங்களின் முப்பதாண்டுகளுக்கு முந்திய கட்டடங்களோடு அப்போது தோன்றிய திரையரங்கங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். அதனால்தான் திரையரங்கம் தோன்றிய சாலை அத்திரையரங்கின் பெயராலே அழைக்கப்பட்டது. திரையரங்கம் உள்ள இடத்தில் பேருந்து நிறுத்தம் என்றால் அந்த நிறுத்தத்திற்குத் திரையரங்கப் பெயர்தான். சென்னை மலைச்சாலையில் புகழ்பெற்ற பேருந்து நிறுத்தம் 'சாந்தி'.

தமிழர்களுக்குத் திரையரங்குகள் மீது தோன்றிய பற்றுக்கும் பாசத்திற்கும் ஒரு நெகிழ்ச்சியான காரணம் இருக்கிறது. நம் வீடுகள் முற்காலத்தில் எப்படியிருந்தன? ஓலைக் குடிலாகவோ ஓட்டு வீடுகளாகவோ இருந்தன. இந்த வீடுகளின் நுழைவாயில்களைப் பார்த்திருக்கிறீர்களா? தலையைக் குனிந்து உள்ளே நுழையும்படிதான் இருக்கும். நான்கரையடி, ஐந்தடி உயரத்தில் தலைவாயிலை அமைத்திருப்பார்கள். தலையைக் குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும். தலையைக் குனிந்துதான் வெளியேற வேண்டும். நிமிர்ந்தாற்போல் சென்றால் நிலவு முட்டும். ஓட்டு வீடுகளிலேயே இப்படித்தான் இருக்கும். கூரை வீடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நன்கு குனிந்துதான் நுழைய வேண்டும். அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் கட்டிய கட்டடங்களில்தாம் ஏழடிக்கும் மேற்பட்ட உயரத்தில் கதவுகள் அமைத்திருப்பார்கள். ஆங்கிலேயரின் ஏழடிக் கதவும் குடிகளின் ஐந்தடிக் கதவும் ஆண்டான் அடிமைக்கேற்ற குறியீடுபோல் நம் முன்னோர் மனத்தில் தங்கிவிட்டது. அக்காலத்தில் ஓர் எளிய வீட்டினர் வானளாவிய ஒரு மாளிகைக்குள் நுழைவதற்கே வாய்ப்பில்லை. வெளியேயே நிறுத்தப்படுவர்.

நீங்கள் எண்ணிப் பாருங்கள், குனிந்து செல்லவேண்டிய தலைவாயில் வீடுள்ள ஒருவரை அந்நகரின் வானளாவிய கட்டடம் ஒன்று 'வருக வருக' என்று வரவேற்று, தன்னுடைய பெருங்கதவுகளைத் திறந்துவிட்டு உள்ளே வரச்சொல்லி, ஒரு நாற்காலியில் அமரவைத்து, மின்விசிறிக் காற்றோடு ஆடல்கள் பாடல்கள் மிகுந்த ஒரு திரைப்படத்தைத் திரையிட்டுக் காட்டினால் அவர் மெய்ம்மறந்து போவாரா மாட்டாரா? மனத்தைப் பறிகொடுப்பாரா மாட்டாரா? அதுதான் நடந்தது. அந்த மரியாதைக்கும் மதிப்புக்கும் மனத்தில் இடம் கொடுத்தார். மறக்க முடியாதவர் ஆனார். திரையரங்குகளை நம் முன்னோர் நேசிக்கத் தொடங்கிய காரணம் இதுதான். அதனால்தான் இன்றைக்குப் பாழடைந்து கிடக்கும் ஒரு திரையரங்கை எண்ணிப் பெருமூச்சு விடுகிறோம். ஒரு திரையரங்கம் பாடுபட்டுக் கட்டிய சொந்த வீடே இடிபடுவதுபோல் கலங்குகிறோம்.

திரைப்படங்கள் நம் உணர்வுகளுக்கு எப்படி நெருக்கமாயினவோ அதேயளவு நெருக்கமும் நினைவும் கொண்டிருப்பவை அத்திரைப்படங்களைக் கண்ணுற்ற திரையரங்கங்கள். நியாயமாகப் பார்த்தால், பழையது என்பதற்காகவோ படங்கள் ஓடவில்லை என்பதற்காகவோ திரையரங்கங்களை இடிக்கவே கூடாது. அந்தந்த ஊரின் முன்னைப் பழைய திரையரங்கங்கள் நினைவுச் சின்னங்களைப்போல் பராமரிக்கப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு யாருமில்லை. அப்படி நினைத்துப் பார்ப்பதற்குக்கூட இங்கே யார்க்கும் துணிவில்லை.

English summary
Old Theaters should be maintained as memorials instead of demolishing.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil