For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரே ஒரு ரஜினிதான்! - மூத்த பத்திரிகையாளர் மீரான்

  By Shankar
  |

  அப்போதெல்லாம் நான் தீவிர கமல் ரசிகன். அதற்கு ஒரே காரணம், அவரது நடிப்போ ேதாற்றமோ அல்ல. எனது தோற்றம்தான் காரணம். மொத்த முடியையும் இழுத்து பின்ேனாக்கி வாரிவிடுவது எனது பதின்ம வயது ஹேர் ஸ்டைல்.

  "நீ கமல் மாதிரியே இருக்கடே," என்று நண்பர்கள் போட்ட பிட்டுகள்தான் நான் கமல் ரசிகனாவதற்கு முக்கிய காரணமே தவிர வேறெதுவும் இல்லை.

  One and Only Rajinikanth - Journalist Meeran

  ரஜினி ரசிகர்கள் மாதிரி சிலிப்பி விடுகிற மாதிரியான ஹேர் ஸ்டைல் அமையாததுதான் ரஜினி ரசிகனாகாததற்கு காரணம். கமல் ரசிகனாக இருந்தாலும், ரஜினி ரசிகர்கள் மீது பெரிய பொறாமை உண்டு. அவர்கள் விதவிதமா ஸ்டைல் பண்ணுவார்கள், நடப்பார்கள், பஞ்ச் டயலாக் பேசுவார்கள். ஆனால் கமல் ரசிகனுக்கு அப்படியான வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் கமல் ரசிகன்னு ஒரு திமிர் மட்டும் இருக்கும்.

  எங்கள் ஊரை சுற்றித்தான் 'முரட்டுக்காளை' படப்பிடிப்பு நடந்தது. அதிலும் குறிப்பாக இன்றைக்கும் பேசப்படுகிற ரெயில் சண்டை காட்சி செங்கோட்டைக்கும், புணலூருக்கும்் இடையிலான ரெயில் பாதையில் எடுக்கப்பட்டது. மலையை குடைந்து போடப்பட்ட ஆரியங்காவு குகை ரெயில் பாதையும் பிரபலம். பத்து பதினைந்து நாட்களாக சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். செங்கோட்டையிலிருந்து புணலூர் செல்லும் பஸ்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது ஷூட்டிங் பார்ப்பதற்காக. எங்கள் ஊர் ரஜினி ரசிகர்கள் ஒரு நாள் ஷூட்டிங் பார்க்க கிளம்பினார்கள். எனக்கும் அவர்களுடன் செல்ல ஆசை. ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. என்றாலும் நானும் உங்க கூட வர்றண்டே என்றேன்.

  One and Only Rajinikanth - Journalist Meeran

  ஒத்துக் கொண்ட அவர்கள் ஒரு கண்டிஷன் போட்டார்கள். "நீ ரஜினி ரசிகனா மாறணும்," என்றார்கள். எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஷூட்டிங் பார்க்கும் ஆசையிலும், ரஜினியை பார்க்கும் ஆசையிலும் சரிடே என்றேன். அழைத்துக் கொண்டு போனார்கள். ஆரியங்கா வரை பஸ்சில் சென்று அங்கிருந்து ரயில் பாதை வழியாக நடந்தே ஷூட்டிங் நடந்த இடத்துக்குச் சென்றோம்.

  படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தை சுற்றி பாறையிலும், காட்டு மேட்டிலும், நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து ரஜினியை குடைபிடித்து அழைத்து வந்தார்கள். அன்றுதான் சூப்பர் ஸ்டாரை முதலில் நேரில் பார்த்தேன். ஆனால் சினிமாவிலோ, அல்லது பத்திரிகைகளில் வந்த படங்களிலோ இருப்பது போன்று அவர் இல்லை. தலையை சிலிப்பி விட்டு கையால் கோதிவிடும் ஹேர்ஸ்டைல் இல்லை. ஒரு புதுவிதமான ஹேர் ஸ்ைடலில் இருந்தார். எங்கள் ஊரில் ரொம்ப சேட்டை செய்யும் பசங்களுக்கு அப்படித்தான் தலைமுடியை வெட்டி விடுவார்கள். அப்படித்தான் இருந்தார் ரஜினி. அவரை நேரில் பார்த்த சந்தோஷம் அதிகமாக இருந்தாலும் இனி ரஜினி ரசிகர்கள் அவ்ளோதான் இந்த மாதிரிதான் முடிவெட்டி திரிவானுங்க ஊரே கேலி பேசும் என்கிற நினைப்பு சந்தோஷத்தை கொடுத்தது.

  "சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க...," கோஷம் காடு முழுக்க எதிரொலித்தது. 'கமல் வாழ்க' என்று எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நான் கோஷம் போட்டுக் கொண்டேன். ரஜினியை ஒரு ரெயில் பெட்டியின் மீது ஏற்றினார்கள். கம்புகளை கொண்டு சிலர் அவரைத் தாக்க... அவர் அதை தடுத்து அவர்களை அடித்து கீழே தள்ளினார். இதே காட்சியைதான் அன்று முழுக்க எடுத்தார்கள். ஒரு முறை ரஜினி தடுமாறி கீழே விழுந்தார். மொத்த கூட்டமும் ரெயில் கூறை மீது ஏறியது. ஒயிட் ஒயிட்டில் கீழே நின்று கொண்டிருந்த ஒருவர் (எஸ்பி முத்துராமன்) மளமளவெ ஏறி ரெயிலின் மேல் கூரையில் ஏறி. ரஜினியை கட்டிப்பிடித்துக் கொண்டு கலங்கினார். சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதே காட்சி படமானது. ரஜினியை நேரில் பார்த்தாகிவிட்டது. ஷூட்டிங்கும் போரடித்து விட்டது. ஊருக்கு கிளம்பி விட்டோம்.
  அன்று முழுவதும் படுத்துக் கொண்டே யோசித்தேன். கமல் ரசிகனாக இருப்பதால் ஏதோ நாம் அவரைப்போ அழகாக இருப்பதாக நினைத்துக் ெகாள்ள முடிகிறது. ஆனால் ரஜினி ரசிகனாக இருந்தால் ஸ்டைல் காட்டலாம், பஞ்ச் டயலாக் பேசலாம். அவர் பாணியில் அநீதியை தட்டிக் கேட்கலாம் என்பதால் ரஜினி ரசிகனாக மாற முடிவெடுத்தேன். பின்னோக்கி வாரிய தலைமுடியை பக்க வாட்டில் வாரி ரஜினி ரசிகனாக ஞானஸ்தானம் பெற்றேன். பெயருக்கு முன்னால் ரஜினி என்று சேர்த்துக் கொண்டேன்.

  25 வருடங்களுக்கு பிறகு....

  One and Only Rajinikanth - Journalist Meeran

  பணி மாறுதலாகி சென்னையில் 'தினகரன்' நாளிதழுக்கு வந்தேன். பத்திரிகையாளர் என்ற முறையில் ரஜினியை விழாக்களிலும், பேட்டிகளிலும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், தனியாக சந்தித்ததில்லை. நான் வந்த புதிதில் அவர் பத்திரிகையாளர்களிடமிருந்து கொஞ்சம் விலகி இருந்தார். ரஜினி நடித்த படங்கள் அணைத்தும் வெறும் பொழுதுபோக்கு படங்களாகத்தான் பார்க்கப்படுகிறது. பிற்காலத்தில் அவரின் படங்கள் உரிய கவனம் பெறாமல் போய்விடுமோ என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. அவர் நடித்த கவிக்குயில், ஆடுபுலி ஆட்டம், ஆறு புஷ்பங்கள், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களின் நெகட்டிவ்கள்கூட இப்போது இல்லை. இதனால் அவரது படங்களை எழுத்து வடிவில் ஆவணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.
  அவரது அனைத்து படங்களையும் ஏற்கெனவே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை அவற்றை பார்த்து. அதன் நிறை குறைகளோடு ஆவணமாக்கினேன். அபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரையிலான படங்களை ஆவணப்படுத்தினேன். இந்த ஆவணம் புத்தகமாக வெளிவந்தது. இந்த புத்தகம் ரஜினியின் கவனத்துக்கு சென்றால் போதும் என்று நினைத்தேன். மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மூலம் அந்த புத்தகம் ரஜினியின் கரங்களுக்கு சென்று சேர்ந்தது.

  சேர்ந்த மறுவாரம் ரஜினி அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "சார் உங்களை பார்க்கணும்னு விரும்புறாங்க. நாளை காலையில ஆபீஸ் வந்துடுங்க. முடிஞ்சா பேமிலியோட வாங்க," என்றார்கள். மறுநாள் நானும், என் மனைவியும் கிளம்பினோம். 12 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. 11.30 மணிக்கு போன் வந்தது ரஜினி ஆபீசிலிருந்து. "ஹாய் மீரான்... எப்டி இருக்கீங்க நான் ரஜினி காந்த் பேசுறேன்," என்றது அந்தக் குரல். எனது சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. "சொல்லுங்க சார்...," என்று மட்டும்தான் சொன்னேன். "சாரி மீரான். இன்னி்க்கு நம்ம மலேசியா வாசுதேவன் சார் தவறிட்டாரு... எனக்காக நிறைய பாடினவர்... அவர் குரலால்தான் நான் வளர்ந்தேன்... நீங்க பத்திரிகைகாரர் உங்ககிட்ட போயி இதையெல்லாம் சொல்றேன் பாருங்க. இன்னிக்கு கொஞ்சம் அப்செட்டா இருக்கேன்.... நாளைக்கு மீட் பண்ணலாமா... உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லையே," என்றார். "அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், நாளைக்கு மீட் பண்ணலாம்," என்றேன்.

  One and Only Rajinikanth - Journalist Meeran

  மறுநாள் காலை 11 மணிக்கு அவரை நானும், என் மனைவியும் சந்தித்தோம். அறைக்குள் நுழைந்ததும் அமர்ந்திருந்த ஷோபாவிலிருந்து எழுந்து வந்து கையை பிடித்து சில அடிகள் அழைத்துச் சென்று "உட்காருங்க ப்ளீஸ்," என்றபடி அமரவைத்துவிட்டு பின்னர் அவர் அமர்ந்தார். அறையில் இருந்த அவரது நண்பர்களை கொஞ்சம் வெளியில இருங்க கூப்பிடுறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டு எங்களோடு பேசினார்.

  "புக் படிச்சேன் ரொம்ப சூப்பர்... எக்ஸ்லண்ட்... எந்த புக்கையும் நான் ஓரே மூச்சில் படிச்சதில்லை. இதை ஒரே மூச்சில் இரண்டு முறை படிச்சிட்டேன். என்னோட புல் லைஃபையும் திரும்பி பார்த்த மாதிரி இருந்திச்சு. எப்டி உங்களுக்கு மைண்ட்ல இப்படி தோணிச்சு. வெரி நைஸ் ஜாப். ரொம்ப பெருமையா இருக்கு...," அவரே பேசிக் கொண்டிருந்தார்.

  "பீவி என்ன பண்றாங்க?" என்று என் மனைவியைப் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே கேட்டார். "ஹவுஸ் ஒய்ஃப்தான்" என்றேன். "என்னங்க ஹவுஸ் ஒய்ஃப்தான்னு ஈசியா சொல்றீங்க. உலகத்திலேயே கஷ்டமானது ஹவுஸ் ஒய்ஃபா இருக்கிறதுதான். என்ன பீவீம்மா நான் சொல்றது சரிதானே?..." என்று அவர் கேட்க, "ஆமாங்க சார்" என்று என் மனவைி சொல்ல அந்த அறையே குலுங்குற அளவுக்கு ஹா... ஹா... ஹா...ன்னு அவருடைய டிரேட்மார்க்கில் சிரித்தார்.

  35 நிமிடங்கள் அவருடன் பேசிகொண்டிருந்தோம். 'பாபா' முதல் குடும்பம் வரை மனம் விட்டு பேசினார். கடைசியாக, "எனக்கு எத்தனையோ ஃபேன் இருக்கலாம் நீங்கதான் அஃபிஷியல் ஃபேன். ஏன்னா எல்லாப் படத்தையும் பார்த்த ஆதாரம் உங்ககிட்டதான் இருக்கு," என்று சொல்லி சிரித்தார். "இனி அடிக்கடி பேசுவோம்," என்றார்.

  கிளம்பும் போது தன் மேஜை டிராயரை திறந்து பளபளவென ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து அணிவித்தார். அணியும்போது அது என் மூக்கு கண்ணாடிக்குள் சிக்கிக் கொண்டது. "இன்னும் கொஞ்சம் பெருசா வாங்கியிருக்கலாம்," என்றபடியே அணிவித்து மகிழ்ந்தார். பொன்னாடை போர்த்தினார். 'உன் வாழ்க்கை உன் கையில்' என்று பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசு ஒன்றை அளித்தார். 30 விநாடிகள் வரை அப்படியே கட்டிபிடித்தபடி நின்று அனுப்பி வைத்தார். எல்லோரும் அந்த அறையை விட்டு வெளியில் வந்தோம்.

  கிளம்ப முற்பட்டபோது அறைக்கு வெளியில் வந்து மீண்டும் என்னை மட்டும் அழைத்தார். படபடப்புடன் உள்ளே சென்றேன். "எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்கு... ஆட்டோபயாகிராபி எழுதணும்னு நினைச்சேன். கொஞ்சம் எழுதவும் ஆரம்பிச்சேன். ஆனால் அதை எழுதினா சில உண்மையை மறைக்க வேண்டியதிருக்கும். சில பேருக்கு அதனால் மனகஷ்டம் வரும். பொய்யா எழுதுறதும் பிடிக்கல. அதனால் அதை டிராப் பண்ணிட்டேன். ஆனா ஒரு ஆர்ட்டிஸ்டா 'எந்திரன்' பட எக்ஸ்ப்பீரியன்சை எழுதணும்னு ஆசை. நமக்கு எழுத்துன்னா அது ைகயெழுத்து போடுறது மட்டும்தான். அதனால நான் சொல்றேன். நீங்க எழுதிக்கொடுங்க. யார் கண்ணுலேயும் படாம எங்காவது ஒரு பத்துநாள் போய் உட்கார்ந்து எழுதிட்டு வந்திடுவோம். பேசாம ஹிமாலயாஸ் போயிடுவோம். அதுதான் சரியா இடம்," என்றார்.

  "இது என் பாக்கியம் சார் நீங்க எப்ப கூப்பிடுறீங்களோ அப்போ வந்து நிப்பேன் சார்," என்றேன். சீக்கிரமே கூப்பிடுறேன் என்றார். வீடு வந்து சேர்ந்தோம். அன்று மாலை எனக்கு ஒரு சிறிய விபத்து அதில் எனது செல்போன் தொலைந்து விட்டது.

  மறுநாள் ரஜினி என்னோடு பேச பலவாறு முயன்றிருக்கிறார். ஒரு வழியாக உடன் பணிபுரியம் தேவராஜை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர் போனுடன் வீட்டுக்கு ஒடிவந்தார். போனை கையில் தந்தார். ரஜினி பேசினார். "ஏன் என்னாச்சு.. உங்களை பிடிக்க முடியலை?" என்றார். விபரம் சொன்னேன்.

  "ஹெல்த் பாத்துக்குங்க. அதுதான் முக்கியம். என்னோட இன்வைட்டை மதிச்சு வந்ததுக்கு ரொம்ப தேங்கஸ். பீவிகிட்டேயும் சொல்லிடுங்க. போன் வேணும்னா சொல்லுங்க கொடுத்து அனுப்புறேன்" என்றார். "பரவாயி்ல்ல சார் உங்க அன்பே போதும்," என்றேன்.

  ரஜினி, சூப்பர்ஸ்டாராக ஆனதற்கு அவரது நடிப்பு மட்டுமே காரணமல்ல.

  நன்றி: வண்ணத்திரை

  English summary
  Senior Journalist Mohammad Meeran's experience with Rajinikanth
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X