நான் சாதி வெறியனா? அமுக்கிட்டாங்க..பிதுக்கிட்டாங்க.. எவ்வளவு மோசமான வார்த்தைகள்.. பா.ரஞ்சித் பேச்சு!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய 'பைசன்' திரைப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 17ந் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பா ரஞ்சித், பைசன் திரைப்படத்தின் வெற்றியை நான் மிக முக்கியமான வெற்றியாக பார்க்கிறேன். இதற்காக துணை நின்ற பட குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி என்பது அவ்வளவு எளிதாக கிடைக்காது, அதற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்தால்தான் அந்த வெற்றியை கிடைக்கும். அந்த வெற்றியை கொண்டாடும் போது அது ஒரு தனி அனுபவமாக இருக்கும்.

பா ரஞ்சித்: நான் சினிமாவிற்கு வருவதற்கு முன் என்னுடைய வாழ்க்கை கதையை பேசி சினிமாவில் ஜெயிக்க முடியுமா? என்கிற யோசனை என்னுள் இருந்தது. ஆனால், துணிந்து படம் எடுத்து பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் சினிமாவிற்கு வந்தேன். ஆனால், என்ன படம் எடுக்கப் போகிறீர்க என்று யாராவது கேட்டால், என் மனதிற்குள் ஒரு பதற்றம் வரும், என் கதையை சொன்னால் இவர்கள் கேட்பார்களா... என்னுடைய படத்தை இவர்கள் ரசிப்பார்களா? ஆனால், இந்த சமூகத்தில் 75 ஆண்டு காலம் சினிமா வரலாற்றில் பேசப்படாத மக்களை பற்றி பேசுவதற்கு எனக்குள் ஏன் பயம் வருகிறது என்று யோசித்தேன்.
நான் சாதி வெறியனா: ஆட்டகத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு மெட்ராஸ் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ந்த படம் அரசியல் ரீதியாக பலரும் கொண்டாடினாலும், சில சாதி சாயங்கள் என் மீது பூசப்பட்டன. அதன் பிறகு என்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியான பிறகு பா.ரஞ்சித் ஒரு சாதி வெறியன் என்று முத்திரை குத்தினார்கள். இதுவரையில் என்னுடைய திரைப்படங்களில் என்னுடைய சாதியை உயர்த்தி ஒரு வசனமும் இடம்பெற்று இருக்கிறதா? என்னுடைய திரைப்படங்களில் எந்த மனிதரையும் நான் இழிவாக விமர்சித்தது இல்லை. ஆனால், பா ரஞ்சித் தமிழ் சினிமாவை சீரழிக்கிறார்கள் என்று என் போட்டோவை போட்டு தான் திட்டுவார்கள். இப்போதேல்லாம் மாரி செல்வராஜ் போட்டோ, வெற்றிமாறன் சார் போட்டோவையும் சேர்த்துவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் எங்கள் மூன்று பேரின் போட்டோக்கள் இருக்கின்றன.
மோசமான வார்த்தைகள்: தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் 300 - 400 படங்கள் வெளியாகன்றன. நான் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் தான் இயக்குகிறேன். மாரி செல்வராஜ் இதுவரை ஐந்த படங்கள் தான் இயக்கி உள்ளார். ஆனால், எங்கள் மூன்று பேரைத்தான் அழுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க... என்று மோசமான வார்த்தைகளால் எங்களை திட்டுகிறார்கள். இந்திய சமூகத்தில், இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும், இன்றைக்கு தீபாவளி கொண்டாட்டத்தில் ஒரு ஊருக்குள் என் சகோதரர்களை அடித்திருக்கிறார்கள். அனைவரும் ஊருக்கு தீபாவளி கொண்டாடத்தானே சென்றீர்கள்,உங்கள் ஊரில் சாதியால் பிரிந்து இருக்கும் இரண்டு சமூகத்தை பார்க்கவே இல்லையா... இதை நாம் எப்போது சரி செய்ய போகிறோம் என்கிற கேள்விக்கு யாரிடமும் பதிலே இல்லை. இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்கான முயற்சிதான் எங்களது சினிமா. நாங்கள் மக்களிடமிருந்து விலகும் சினிமாவை எடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்களை நெருங்கதான் சினிமா எடுக்கிறோம். மக்கள் விரும்பும் சினிமாவை எடுக்க முயற்சிக்கிறோம் என்று பா ரஞ்சித் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











