»   »  ஒவ்வோர் இசைக்கருவியிலும் உயிர்த்த இசை - இளையராஜாவுக்கு விருது!

ஒவ்வோர் இசைக்கருவியிலும் உயிர்த்த இசை - இளையராஜாவுக்கு விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இளையராஜாவை வாழ்த்திய பார்த்திபன், எஸ்.வி. சேகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

- கவிஞர் மகுடேசுவரன்

இளையராஜாவுக்குப் 'பத்ம விபூஷணம்' விருது கிடைத்திருக்கிறது. நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான அது அவர்க்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதும் பொருத்தமானதும் ஆகும். பத்மம் என்றால் தாமரை. ஒரு மலர் அதன் முழுமலர்ச்சியை அடைந்துவிட்டபோது பேரழகாக இருக்கும். கொடிமலர்களை விடவும் நீர்மலர்களின் செழிப்பும் மலர்ச்சியும் பன்மடங்கு மேம்பட்டிருக்கும். அதனால்தான் குடிகளில் சிறந்து விளங்குவோர்க்குத் தாமரையின் பெயரால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்மஸ்ரீ என்றால் தாமரைச்செல்வர். பத்மபூஷணம் என்றால் தாமரைமாலை. பத்மவிபூஷணம் என்றால் தாமரைச்செம்மாலை. மாலைகளில் உயர்ந்தது என்று பொருள். விருதினால் இளையராஜாவுக்குப் பெருமை என்னும் காலகட்டத்தை அவர் எப்போதோ கடந்துவிட்டார் என்றாலும் பாரெங்கும் உள்ள அவருடைய கோடானு கோடி அன்பர்களுக்கு இது உவப்பூட்டும் செய்தி.

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இளையராஜாவின் இசைப் பங்களிப்பு நிறைவாய் இருந்திருக்கிறது. அவர் விரும்பி ஏற்றால் இன்னும் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது அவருடைய தேர்வுதான். நாற்பதாண்டுகளாய்த் தொடர்ந்து அவர்மீதான இசைப்பற்றோடு இருந்தும்கூட, இன்றும் ஏதேனும் ஒரு பழைய படத்தில் அவருடைய பின்னணியிசையின் சிறு நுட்பத்தை அறிந்து வியக்கின்றவர்களாகவே இருக்கிறோம். அண்மையில் நான் பார்த்த ஆனந்த ராகத்தில் அத்தகைய விடுபாடுகள் சிலவற்றைக் கேட்டேன். அள்ள அள்ளக் குறையாத இசைக்கடலாய் விரிந்திருக்கிறது அவருடைய திரையிசைப் பங்களிப்பு.

Padma Vibhushan Ilaiyaraaja

இளையராஜா இசையமைக்கத் தொடங்கிய எழுபதுகளின் நடுப்பகுதியில் எண்ணற்ற மேதைகள் களத்தில் இருந்தனர். கே.வி. மகாதேவன் என்னும் மாமேதை ஒருபக்கம். எம். எஸ். விசுவநாதன், இராமமூர்த்தி, சங்கர் கணேஷ், ஜி.கே. வெங்கடேஷ், குமார் போன்றோர் மறுபக்கம். இவர்களுக்கிடையில் ஒரு வெற்றியை ஈட்டிக்காட்டுவது எளிதான செயலில்லை. இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம் அப்போது பெரும்பொருட் செலவுள்ள படங்களை எடுத்தவரும் அல்லர். அக்காலத்தில் அவர் ஒரு சிறிய தயாரிப்பாளர். நல்ல கதையை நம்பி, ஓரளவு அறிமுகமுள்ள வளர்நிலை நடிகர்களைப் பயன்படுத்தி, பரபரப்பில்லாத இயக்குநரைப் பணிக்கமர்த்தி, திட்டமிட்ட வரம்புக்குள் படமெடுத்து வெளியிடுபவர் அவர். அவருடைய படங்களுக்குக் கதைக்கு வேண்டிய இசையமைப்பு இருந்தால் போதும்தான்.

"ஒரு படத்தை எடுக்க ஐம்பதாயிரம் முதல் போடுவோம். மேலும் ஐம்பதாயிரத்தை அந்த படத்தின்மீதே கடன் வாங்குவோம். ஒரு இலட்சம் அல்லது ஒன்றே கால் இலட்சத்துக்குள் படத்தை எடுத்து முடிப்போம். அந்தப் படம் ஓரளவு சரியாகப் போனால் நாற்பதாயிரம் இலாபம் கிடைக்கும்...," என்று பஞ்சு அருணாசலம் கூறியிருக்கிறார். இதுதான் எழுபதுகளின் சிறிய தயாரிப்புப் படங்களின் நிலவரம். எழுபதுகளில் எம்ஜிஆர், சிவாஜி படங்களே பெரிய படங்கள். அவற்றோடு வெளியான சிறு படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றன. அப்படி வெற்றி பெற்ற படம்தான் அன்னக்கிளி. பிற்பாடு ஓர் இயக்குநராகவோ, எழுத்தாளராகவோ, தயாரிப்பாளராகவோ, பாடலாசிரியராகவோ பஞ்சு அருணாசலம் பங்கேற்ற படங்களில் இளையராஜாவின் இசையானது நன்றிப் பெருக்கில் நயங்கூடி இருந்ததைக் காணலாம். மற்றபடி அவர் எல்லார்க்கும் பாகுபாடில்லாமல் தம் இசையை வழங்கினார் என்றாலும் மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றோர் தம் படைப்பாற்றலால் அவருடைய இசைக்கு வேறொரு உயர்தளத்தை அமைத்துக் காட்டினர்.

Padma Vibhushan Ilaiyaraaja

இன்றைய திரையிசைப் போக்கு இளையராஜா பாடல்களுடைய தரத்திலோ தளத்திலோ இருக்கவில்லை. அது வெற்றொலிகளால் நிரம்பியிருக்கிறது. அவ்வாறுள்ள பாடல்களைக்கொண்ட படங்களே வெளியாகின்றன. அந்நிலையில் எங்கெங்கும் இன்றைய புதிய பாடல்கள்தாமே ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும்? புதிய பாடல்கள் குறைவாகவும் இளையராஜாவின் பாடல்கள் மிகுதியாகவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றனவே. பச்சை விளக்குக்காகக் காத்திருக்கையில் பக்கத்தில் நிற்கும் தானிழுனியில் "பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம்ஜம் ஜம்..." என்று ஒலிக்கிறது. தேநீர்க் கடைப்பக்கம் ஒதுங்கினால், "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ ?" என்று கேட்கிறது. பண்பலைகளிலும் இசை வாய்க்கால்களிலும் இளையராஜாவுக்கென்றே தனித்த தொகுப்பு நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. கைப்பேசிகளில் எடுப்பொலிகள் அவர் பாடல்களாக இருக்கின்றன. எப்படி அவருடைய இசை இந்தத் தலைமுறையினரையும் ஈர்த்தது?

இளையராஜாவின் இசையொலிகள் பெருங்கலைஞர்களால் மீட்டப்பட்ட இசைக்கருவிகளிலிருந்து எழுந்தன. தாளத்திற்குத் தோற்கருவிகளே முதன்மையாக இடம்பெற்றன. இடைவெட்டுகள் இல்லாத நீள்ஒலிகள் துளைக்கருவிகளாலும் நரம்புக் கருவிகளாலும் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு இசைக்கருவிகளையும் நன்கு அறிந்தவராக இளையராஜா இருந்தார். அவற்றிலிருந்து எதைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதில் அவர் மேதை. கோரஸ் எனப்படும் குழுவோசையை இளையராஜா பயன்படுத்தியதற்கும் பிறர் பயன்படுத்தியதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தாலே போதும். நெப்போலியனின் புல்லாங்குழலும் பாலேஷின் செனாயும் அவருடைய இசையில் மகுடமாய் மிளிர்ந்தன. வயலின் கிதார் பியானோ என்று அவர் ஒவ்வோர் இசைப்பொருளையும் உயிர்ப்பொருளாக்கினார். இளையராஜாவின் இசைக்குறிப்புகள் நூறு கலைஞர்களின் படைப்புகளாய்த் திரண்டெழுந்து பாடல்களாய் மாறின. அந்தப் பேரிசைக்கு முன்னர் ஒற்றையாளாய்க் கணினியில் ஒலி கோக்கும் இன்றைய இசையமைப்பாளர் எப்படி நிலைத்திருப்பார் ?

Padma Vibhushan Ilaiyaraaja

ஒரு திரைப்படத்தைப் பார்த்தவுடனே அதற்கு வேண்டிய இசைமொழி எது என்பது அவர்க்குத் தெரிந்துவிடுகிறது. அவர் இசைத்தவற்றில் பொழுதுபோக்குப் படங்களே மிகுதி என்றாலும் அவற்றின் ஐந்தாறு பாடல்களோடு அவருடைய கவனம் கலைவதில்லை. பின்னணி இசையால் அப்படத்தைத் தூக்கி நிறுத்துவார். ஒரு படத்தைக் கேட்கும் தரத்திலானதாக மாற்றுவதில் விற்பன்னர். இன்றைக்குள்ள ஒலிப்பதிவு மற்றும் ஒலிக்கட்டு வாய்ப்புகள் அவர் காலத்தில் இருக்கவில்லை. "எடிட்டிங்கும் சவுண்டும் இன்றைய அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி எங்கோ போய்விட்டன...," என்கின்றனர் திரையுலக நண்பர்கள். ஒரேயொரு மடிக்கணினியும் ஒலிவாங்கியும் உள்ள அறையில் பவன்கல்யாணைப் பாடவைத்துப் பதிகிறார்கள். குளியலறைக்குள் குரல்பதிவு நடந்தது என்கிறார்கள். இளையராஜா தம் சாதனைகளை நிகழ்த்தியபோது இன்றைய ஒலிப்பதிவு வளர்ச்சிகள் எவையுமில்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

இன்று கிடைத்துள்ள "தாமரைச்செம்மாலை விருது" அவர்க்கு எண்பதுகளின் இறுதியில் அன்றேல் தொண்ணூறுகளிலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஒரு படைப்பாளியை ஊக்குவதில் இத்தகைய பாராட்டுகளுக்குப் பெரும்பங்கு உண்டு. காலத்தினால் செய்த உதவி எப்படி ஞாலத்தின் மாணப்பெரிதோ அவ்வாறே காலத்தினால் கிடைக்கும் பரிசுகளும் பாராட்டுகளும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும். சரி, போகட்டும். இது மகிழ்வதற்கான நேரம்.

English summary
Poet Magudeswaran's article on Padma Vibhushan award for Ilaiyaraaja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil