twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா... பஞ்சு அருணாச்சலத்தின் பன்முகம்!

    By Shankar
    |

    'அடுத்து வரும் பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாச்சலம்.... இசை... ' என்று விவித் பாரதியோ பாண்டிச்சேரி வானொலியோ அறிவிக்கும்போதே, அந்த இசை யாராக இருக்கும் என யூகித்து, இளையராஜா என்று கோரஸாய் சொல்வோம்.

    வானொலியும் அதையேதான் சொல்லும். பஞ்சு அருணாச்சலம் பாடல் என்றால், அதற்கு இசை இளையராஜாதான் எனும் அளவுக்கு அத்தனை பிரபலமான இணை இந்த இருவரும்.

    "பாடல் எழுதுவதில் அண்ணன் கண்ணதாசன் எப்படியோ, பஞ்சு அண்ணனும் அப்படித்தான். ட்யூன் சொன்ன மாத்திரத்தில் அத்தனை அழகான பாடல் வரிகள் வந்து விழும் அவரிடம்..," என்பார் இளையராஜா.

    Panchu Arunachalam, a multi faceted film personality

    பாடலாசிரியராகத்தான் பஞ்சு அருணாச்சலம் இந்த திரையுலகுக்குள் வந்தார். 16 ஆண்டுகள் கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தார். அந்த காலகட்டங்களில் இவருக்கு தனியாகப் பாட்டெழுத எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் கவிஞரின் உதவியாளராகவே தொடர்ந்தார்.

    அன்னக்கிளி படத்தை தயாரிக்க ஆரம்பித்ததுமே, அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் கவிஞர்தான் எழுத வேண்டும் என்று முடிவானதாம். ஆனால் அப்போது கவிஞரால் எழுத வர முடியாத சூழல். என்ன செய்யலாம் என கைப் பிசைந்த நின்றபோது, 'நானே எழுதிடறேன் ராஜா' என்று கூறி மொத்தப் பாடல்களையும் எழுதிவிட்டாராம்.

    ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் இடம்பெற்ற வாழ்க்கையே வேஷம்.. பாடலைக் கேட்டு கவியரசரே வியந்து பாராட்டினாராம்.

    ஒரு பாடலாசிரியராக நூறு சதவீதம் வெற்றிப் பாடல்களைத் தந்தவர் பஞ்சு அருணாச்சலம்தான். அவருக்கு மட்டும் எப்படி வெற்றிப் பாடல்களுக்கான மெட்டுக்களையே இளையராஜா தருகிறார்? என சக கவிஞர்கள் கேட்கும் அளவுக்கு இளையராஜா - பஞ்சு அருணாச்சலத்தின் புரிதல் இருந்தது.

    விழியிலே மலர்ந்தது...
    ராஜா என்பார் மந்திரி என்பார்...
    பொதுவாக என் மனசு தங்கம்...
    காதலின் தீபம் ஒன்று...
    ஒரு பூவனத்தில்...
    கண்மணியே காதல் என்பது...
    வாழ்க்கையே வேஷம்...
    ஆசை நூறு வகை...
    நம்ம முதலாளி...
    கொஞ்சி கொஞ்சி மலர்கள் ஆட..

    இப்படி ரஜினியின் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அருணாச்சலம்.

    கமல் ஹாஸனுக்கும் ஏராளமான அருமையான பாடல்கள் புனைந்தவர்.

    மண்வாசனை படத்தில் இடம்பெற்ற ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்... பாடல் காதுள்ள அத்தனை தமிழனையும் கிறங்கடித்தது என்றால் மிகையல்ல.

    பாடலாசிரியராக மட்டுமில்லாமல், மிகச் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தார் பஞ்சு அருணாச்சலம். ஏவிஎம் நிறுவனம் தான் எந்தப் படத்தை எடுத்தாலும் முதலில் ஆலோசனை செய்யும் திரை எழுத்தாளர்களில் முதலிடம் பஞ்சு அருணாச்சலத்துக்குத்தான். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முரட்டுக்காளை, போக்கிரிராஜா, சகலகலா வல்லவன், பாயும் புலி, தூங்காதே தம்பி தூங்காதே, மனிதன், உயர்ந்த உள்ளம், ராஜா சின்ன ரோஜா போன்ற பல படங்களின் கதை, திரைக்கதை, வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலம்தான்.

    ஒரு படத்தில் எங்கே தவறு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள பஞ்சு சாரிடம் போங்க என்றுதான் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் யோசனை சொல்லும்.

    தயாரிப்பாளராக அதிக வெற்றிப் படங்கள் தந்தவர் பஞ்சு அவர்கள்.

    1977 லேயே இயக்குநராகி சில படங்கள் இயக்கினாலும், அவர் பரவலாக இயக்குநராக அறியப்பட்ட படம் மணமகளே வா. சூப்பர் ஹிட் படம் இது. அடுத்து ராமராஜனை வைத்து புதுப் பாட்டு என்ற படத்தை இயக்கினார். பாடல்கள் அத்தனையும் ஹிட். ராமராஜனும் இவரைக் கைவிடவில்லை. தொடர்ந்து அவர் இயக்கிய கலிகாலம் படம் நெகிழ வைப்பதாய் இருந்தது. கடைசியாக தம்பி பொண்டாட்டி என்ற படத்தை இயக்கினார்.

    திரையுலகில் சகலகலா வல்லவனாகத் திகழ்ந்தாலும், எளிமை, யாரிடமும் கோபப்படாத பண்பாளராகத் திகழ்ந்தவர் பஞ்சு அருணாச்சலம். தான் எத்தனை பெரிய கலைஞன், திறமைசாலி என ஒருபோதும் அவர் சுயபெருமை கொண்டதே இல்லை.

    English summary
    Late legend Panchu Arunachalam was a real multi faceted man and tasted success in all department of cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X