பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
சென்னை : யூடியூப் மூலம் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர்கள் கோபி மற்றும் சுதாகர்.
இவர்கள் இருவரும் வெளியிடும் வீடியோக்களின் பல காட்சிகள் மீம் டெம்ப்லேட் ஆகியுள்ளது.
இவர்கள் இருவரும் இணைந்து தற்போது சினிமாவிலும் நுழையவுள்ளனர். இவர்கள் இணைந்து கலக்கவுள்ள புதிய படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

கோபி -சுதாகர்
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்களின் பல வீடியோக்கள் ஏராளமான ரசிகர்களை இவர்களுக்கு பெற்றுத் தந்துள்ளன. சமூக வலைதளங்களில் இவர்கள் மிகவும் பிரபலமாக உள்ளனர். இவர்களின் வீடியோக்கள் மீம் கிரியேட்டர்களின் டெம்ப்லேட்டாக அமைந்துள்ளன.

பரிதாபங்கள் யூடியூப் சேனல்
மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனல் மூலம் சமகால அரசியலை காமெடி செய்து அதன்மூலம் புகழ்பெற்ற கோபி மற்றும் சுதாகர், அதிலிருந்து விலகி பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை துவக்கி பல விஷயங்களை காமெடியாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்தனர். தற்போது இந்த சேனலை 4 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

க்ரவுட் பண்டிங் முறையில் நிதி
சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் கோபி மற்றும் சுதாகர் இருவரும் க்ரவுட் பண்டிங் முறையில் அதற்காக தற்போது நிதி திரட்டியுள்ளனர். இதையடுத்து தற்போது புதிய படத்திற்கான வேலைகளையும் துவக்கியுள்ளனர். இன்றைய தினம் இவர்கள் நடிக்கவுள்ள படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

டைட்டில் லுக்
முன்னதாக ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக்கையும் வெளியிட்டுள்ள கோபி மற்றும் சுதாகர், இன்றைய தினம் படத்தின் பூஜையை பிரசாத் லேப்பில் போட்டுள்ளனர். இந்தப் படத்தை விஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ. 6 கோடி நிதி
இந்தப் படத்தை தயாரிப்பதற்காக க்ரவுட் பண்டிங் முறையில் இவர்கள் நிதி திரட்டிய நிலையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அளித்த நிதி மூலம் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே கிரவுட் பண்டிங் மூலம் அதிகமான நிதியை இவர்கள்தான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதமான தயாரிப்பு பணிகள்
ரசிகர்களின் இந்த அன்பிற்கு நன்றி தெரிவித்து இவர்கள் இருவரும் வீடியோவும் வெளியிட்டிருந்தனர். இதனிடையே, இவர்கள் பண மோசடி செய்ததாக மற்றொரு யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து கொரோனா காரணமாகவே தங்களது படத்தயாரிப்பு பணிகள் தாமதமானதாக இவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.

பூஜையுடன் துவங்கிய படம்
இந்நிலையில் இன்றைய தினம் இவர்கள் படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இவர்கள் மீதான மோசடிக்கு பதில் கொடுக்கும்வகையில் தங்களது படத்தின் பூஜையை இவர்கள் தற்போது துவங்கியுள்ளனர். விரைவில் படத்தின் டீசரை வெளியிட உள்ளதாகவும் கோபி மற்றும் சுதாகர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











