»   »  பருத்தி பாக்கி-அமீர் புலம்பல்

பருத்தி பாக்கி-அமீர் புலம்பல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் மெகா ஹிட் படமாகி வசூலைக் குவித்துள்ள நிலையில், அப்படத்துக்காக தனக்கு தர வேண்டிய 2 கோடி ரூபாய் பாக்கித் தொகையை வசூலிக்க முடியாமல் வருத்தத்தில் உள்ளாராம் இயக்குநர் அமீர்.

கார்த்தியை வைத்து அமீர் பருத்தி வீரனை ஆரம்பித்தபோது வேறு ஒருவர்தான் தயாரிப்பாளராக இருந்தார். படத்தின் பட்ஜெட் எகிற ஆரம்பித்ததால் படத்தை பாதியில் விட்டு விட முடிவு செய்தார்.

ஆனால் படத்தை கைவிட அமீருக்கு உடன்பாடில்லை. இதையடுத்து அவரே சொந்தக் காசைப் போட்டு படத்தை எடுத்து முடித்தார். ஆனால் படத்தை அதிக விலைக்கு அவர் விற்க நினைத்தபோது யாரும் வாங்க முன்வரவில்லை.

இதனால் பருத்தி வீரன் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில், படத்தை சிவக்குமார் பார்த்து விட்டு தனது உறவினர் ஞானவேல் ராஜாவிடம் விற்று விடுமாறு அமீரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் கூறிய விலையில் அமீருக்குத் திருப்தி வரவில்லை.

ஆனால் அரசியல் குறுக்கீடு ஏற்பட்டு படத்தை ஞானவேல்ராஜாவிடம் அமீர் விற்கும் நிலை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்ன விலைக்கு படத்தை விற்று விட்டு ஒதுங்கிக் கொண்டார் அமீர்.

அதேசமயம், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகாரும் கொடுத்தார். பஞ்சாயத்துக் கூட்டிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், படத்தை ரிலீஸ் செய்ய வழி விடுமாறும், படம் ரிலீஸான பின்னர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் அமீருக்கு அறிவுறுத்தினார்.

அமீரும் ஒத்துக் கொள்ள படமும் ரிலீஸானது, வரலாறு படைத்தது, வசூலையும் அள்ளி விட்டது. 100வது நாளையும் நெருங்கி விட்டது. ஆனால் சிவக்குமார் தரப்பு சொன்னபடி தனக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையை (ரூ.2 கோடி என்கிறார்கள்) இன்னும் தராமல் இருப்பதால் அமீர் வருத்தத்தில் இருக்கிறாராம்.

பாக்கித் தொகையை தரும்படி பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லையாம். தயாரிப்பாளர் கவுன்சிலும் இதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருக்கிறதாம்.

பருத்தியை கொள்முதல் செய்தவர்கள் உரிய தொகையை தராமல் இருப்பது நியாயமா என்று நெருங்கியவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் உற்பத்தி செய்த அமீர்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil