»   »  பத்மாவதி: என்ன எதிர்ப்பு இது... கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே! - பட்டுக்கோட்டை பிரபாகர்

பத்மாவதி: என்ன எதிர்ப்பு இது... கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே! - பட்டுக்கோட்டை பிரபாகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராணி பத்மினி என்கிற பத்மாவதியின் வரலாறு நம்பகத்தனமை அதிகமற்றது என்று சில சரித்திர ஆய்வாளர்கள் புறக்கணித்தாலும்.. பெரும்பான்மையான மக்கள் நம்பும், ஏற்றுக்கொள்ளும் வரலாறு இதுதான்:

ராணி பத்மினி (பத்மாவதி) பேரழகி. இலங்கையைச் சேர்ந்தவர். சித்தூரின் ராஜ்புத் அரசர் ரத்தன் சென் ஒரு பேசும் கிளி மூலமாக அவரின் அழகால் ஈர்க்கப்பட்டு மிகவும் பிரயத்தனங்கள் செய்து அவரை அடைகிறார்.

Pattukottai Prabhakar on Padmavati agitations

டெல்லியில் அரசாண்ட அலாவுதீன் கில்ஜியும் பத்மாவதியின் அழகைப் பற்றி அறிந்து அவரை அடைவதற்காகவே சித்தூர் மீது படையெடுத்துச் செல்ல திட்டமிடுகிறார்.

தவிர சித்தூருக்கு அருகில் உள்ள இன்னொரு அரசரான தேவ்பாலுக்கும் பத்மாவதியின் மீது விருப்பம். அவர் பத்மாவதியை அடைய அநாகரிகமாக தூதனுப்புகிறார். அதனால் ஆத்திரமடையும் கணவர் ரத்தன் சென் தேவ்பால் மீது போர்த் தொடுக்க... அந்தப் போரில் இருவரும் மாண்டு விடுகிறார்கள்.
கணவர் மரணமடைந்த சூழ்நிலையில் தன்னை அடைய தன் நாட்டின் மீது படையெடுத்து வரும் அலாவுதீன் கில்ஜியிடமிருந்து தன் மானத்தைக் காக்க.. அப்போதிருந்த வழக்கத்தின்படி பத்மாவதி அக்னியில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பிறகு ராஜ்புத்ர வீரர்கள் கில்ஜியின் படையெடுப்பைச் சந்தித்து கடைசி வரைப் போராடித் தோற்றார்கள்.

பத்மாவதி இந்தி திரைப்படத்தில் பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் காதலிப்பதாக ஒரு கனவுப் பாடல் இடம் பெற்றிருப்பதாக எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள். நம்புகிறார்கள்.

Pattukottai Prabhakar on Padmavati agitations

ஆனால் இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி பல பேட்டிகளில்,"அது எதிர்ப்பாளர்களின் யூகமே. அப்படி எந்தக் காட்சியும் படத்தில் இடம் பெறவில்லை'' என்கிறார். இதை எழுதியும் கொடுக்கிறார்.

வெளியிடப்பட்டிருக்கும் ட்ரைலரிலும் ராஜ்புத் வீரர்களின் வீரத்தைப் புகழ்ந்துதான் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. படமோ இன்னும் வெளிவரவில்லை. இன்னும் சென்சார் சான்றிதழே பெறப்படவில்லை.

வரலாற்றுக்குப் புறம்பாகவோ, கலாச்சாரத்தைக் கெடுக்கும் விதமாகவோ, அல்லது படத்தால் சட்டம் ஒழுங்கு கெடும் சூழ்நிலை உருவாகும் என்றோ தணிக்கையாளர்கள் கருதினால் நிச்சயம் அப்படிப்பட்டக் காட்சிகளை அனுமதிக்கப் போவதில்லை.

தணிக்கைக்குச் செல்லும் முன்பே ஒரு படத்தையோ, காட்சிகளையோ தடை செய்ய உத்தரவிட இயலாது என்று உச்ச நீதி மன்றமும் தெரிவித்துவிட்டது.

படத்தில் இந்துக்களின் மனம் புண்படும்படியாகவும், ராஜபுத்திர வம்சத்தினரை இழிவுபடுத்தும்படியாகவும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பாளர்கள் எந்த ஆதாரங்களை வைத்து நம்புகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

இதில் சில முக்கிய தலைவர்களே வன்முறையைத் தூண்டும் விதமாக தலைகளுக்கு பரிசுத் தொகைகள் அறிவித்திருப்பதும், அரசு அதைக் கண்டிக்காமல் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
அந்தப் படத்தில் ஒரு நடிகையாக மட்டுமே தன் பங்கைச் செய்திருக்கும் தீபிகாவைக் கண்டிப்பதன் லாஜிக்கும் புரியவில்லை.

- பட்டுக்கோட்டை பிரபாகர்

English summary
Writer Pattukottai Prabhakar says that there is no logic in agitations against Padmavati Hindi movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil