OG Box Office Day 2: வெள்ளிக்கிழமை பெரிய சரிவு.. பவன் கல்யாணின் ஓஜி 2வது நாள் வசூல் எவ்வளவு?
சென்னை: பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் ப்ரீமியர் காட்சியில் வசூல் செய்ததை விட இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை குறைவான வசூலை பெற்றிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'தே கால் ஹிம் ஓஜி' படத்தை இயக்குநர் சுஜித் இயக்கியுள்ளார். பவன் கல்யாண் ஜோடியாக இந்த படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
வில்லனாக பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி ஸ்டைலிஷ்ஷாக வந்து செல்ல, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோருக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தமன் இசையில் பவன் கல்யாண் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டர் தெறிக்க மற்ற நேரங்களில் படத்தின் கதை ரசிகர்களை சோதித்து எடுக்கிறது.

வியாழக்கிழமை வெளியான ஓஜி திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 63.75 கோடி வசூலை ஈட்டிய நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று அதைவிட வசூல் அதிகரிக்காமல் புதன்கிழமை இரவு வெளியிட்ட ப்ரீமியர் ஷோவுக்கு கிடைத்த வசூலை விட குறைவாகவே வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஓஜி முதல் நாள் வசூல்: மாஸ் ஆக்ஷன் சீன்கள் மற்றும் ஓவர் பில்டப்புடன் பவன் கல்யாணின் ஓஜி படம் வெளியானது. கலவையான விமர்சனங்களே படத்துக்கு கிடைத்த நிலையில், பவன் கல்யாண் ரசிகர்களை தாண்டி மற்ற ரசிகர்கள் இன்னமும் படத்தின் மீது ஆர்வம் செலுத்தி தியேட்டருக்குச் செல்லவில்லை என்றே தெரிகிறது. ப்ரீமியர் ஷோவில் ஓஜி திரைப்படம் 21 கோடி வசூலை ஈட்டிய நிலையில், வியாழக்கிழமை 63.75 கோடி வசூலை ஈட்டியது.
2வது நாள் வசூல் குறைவு: வெள்ளிக்கிழமையான நேற்று பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19.25 கோடி வசூலை மட்டுமே ஈட்டியிருப்பதாக சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2 நாட்களில் ஓஜி திரைப்படம் 104 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு: எதிர்பார்த்தது போலவே பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் ரஜினிகாந்தின் கூலி படத்தின் வசூலை முதல் நாளில் முறியடித்து விட்டது. லியோ வசூலை கூலி முந்திய நிலையில், கூலி வசூலை பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் முந்தி 154 கோடி வசூலை உலகளவில் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று மாலை அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது.
சனி, ஞாயிறு கலெக்ஷன் எப்படி இருக்கும்?: வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதால் வசூலில் சரிவு ஏற்பட்டு இருக்கும் என்றும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓஜி படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் என்கின்றனர். 250 கோடி பட்ஜெட்டில் உருவான ஓஜி திரைப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை வசூல் உடன் சேர்த்தால் 300 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாற வேண்டுமென்றால் திங்கட்கிழமை தொடங்கி அடுத்த வாரமும் படம் ரசிகர்களை கவர்ந்து ஓடினால் தான் உண்டு என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











