»   »  பழனிக்குப் போகும் பேரரசு!

பழனிக்குப் போகும் பேரரசு!

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி என்ற மாபெரும் தோல்விப்படத்தைக் கொடுத்த பேரரசு, சின்ன இடைவெளிக்குப் பிறகு பழனி என்ற புதிய படத்தை இயக்கத் தயாராகியுள்ளார். 10ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.

திருப்பாச்சி, சிவகாசி என அதிரடியாக கோலிவுட்டில் கால் பதித்தவர் பேரரசு. ஆனால் போகப் போக பேரரசு, சிற்றரசானார். சொதப்பலான படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார்.

திருப்பதியில் அஜீத்தை கவிழ்த்த பேரரசு, தர்மபுரியில் விஜயகாந்தைத தடம்புரள வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய படங்கள் கிடைக்காமல் ஓய்வுக்குத் தள்ளப்பட்டார் பேரரசு.

இந்த நிலையில் ஷக்தி சிதம்பரம் தயாரிக்கும் பழனி பட வாய்ப்பு பேரரசுவைத் தேடி வந்தது. பரத், காஜல் அகர்வால் இணையில் உருவாகும் பழனியை தனது பாணியில் பிரமாண்டமாகவும், அதிரடியாகவும் கொடுக்கிறார் பேரரசு.

பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் 10ம் தேதி நடக்கிறது. பட பூஜை அழைப்பிதழை படு வித்தியாசமாக விநியோகித்துள்ளார் பேரரசு. அழைப்பிதழுடன் பழனி பஞ்சாமிர்தம், விபூதியையும் சேர்த்துக் கொடுத்து கலக்கியுள்ளார்.

பரத், காஜல் தவிர குஷ்புவும், இயக்குநர் பி.வாசுவும் முக்கியமான ரோல்களில் நடிக்கிறார்கள். பரத்தின் அக்கா வேடத்தில் குஷ்பு வருகிறாராம்.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் நாயகிதான் காஜல் அகர்வால். இப்போது பரத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். அக்கா, தம்பி பாசத்தை கதையைப் பின்னியுள்ளாராம் பழனியில், பேரரசு.

சென்டிமென்ட்டோடு சிறப்பான காமெடியும் படத்தில் இருக்கிறதாம். பழனி குறித்து பேரரசுவிடம் கேட்டபோது,

இது ஒரு கமர்ஷியல் படம். அதேசமயம் சென்டிமென்ட்டும் படத்தில் சிதறிக் கிடக்கும். படத்தின் முக்கால்வாசிப் பகுதியை பழனியில் வைத்து ஷூட் செய்யவுள்ளோம்.

மேலும் காரைக்குடி, பொள்ளாச்சி, ஊட்டி ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்கும். பாடல்கள் வழக்கம் போல வெளிநாடுகளில் படமாக்கப்படும் என்றார் பேரரசு.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சேகர் ஜோசப் கேமராவைக் கையாளுகிறார். பேரரசுவே படத்தின் அனைத்துப் பாடல்களையும் வழக்கம் போல எழுதியுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தமாக இனிக்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil