»   »  பெரியாரைத் தொடரும் சர்ச்சைகள்

பெரியாரைத் தொடரும் சர்ச்சைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்தை முதல்வர் கருணாநிதி ரசித்துப் பார்த்து படத்தில் நடித்துள்ளவர்களை வாயாரப் பாராட்டியுள்ளார். ஆனால் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த பல சம்பவங்கள், குறிப்பாக திமுக தலைவர்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சை விஷயங்கள் படத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பெரியார் என்ற பெயரில் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஞான ராஜசேகரன். இப்படத்துக்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. சத்யராஜ் பெரியாராக நடித்துள்ளார். நாகம்மையாக ஜோதிர்மயி, மணியம்மையாக குஷ்பு நடித்துள்ளார்.

இப்படத்தின் பிரவியூ காட்சி முதல்வருக்காக தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் திரையிடப்பட்டது. மகள் கனிமொழியுடன் வந்து படத்தைப் பார்த்தார் கருணாநிதி.

பெரியாரின் சீடர்களில் ஒருவரான கருணாநிதி, படத்தைப் பார்த்து விட்டு சத்யராஜ், குஷ்பு உள்ளிட்டோரின் நடிப்பைப் பாராட்டினார். சிறப்பாக இயக்கியிருப்பதாக ஞானராஜசேகரனுக்கும் பாராட்டு கிடைத்தது.

ஆனால் படத்தில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. பெரியாருடன் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த பல நிகழ்வுகளை, பிரபலங்களை, சர்ச்சைகளை சரியாக சித்தரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கருணாநிதி குறித்து பெரியார் கூறிய பல கடுமையான விமர்சனங்கள் படத்தில் இல்லையாம். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் பெரியாரை சந்திக்க கருணாநிதி சென்றபோது, அவரை சந்திக்க பெரியார் மறுத்து விட்டாராம். இந்தக் காட்சியை படத்தில் வைக்க ஞான ராஜசேகரன் விரும்பியுள்ளார்.

ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல திமுக தலைவர்கள் குறித்து பெரியார் தெரிவித்த விமர்சனங்கள், கடுமையான கருத்துக்களும் படத்தில் இடம் பெறுவதை ஒரு தரப்பு விரும்பவில்லையாம்.

தி.க இதழ்களான குடியரசு, விடுதலை ஆகியவற்றில் திமுக தலைவர்கள் குறித்து பெரியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிலவற்றை படத்தில் சேர்க்கவும் ஞானராஜசேகரன் விரும்பியபோது அதற்கும் அனுமதி கிடைக்கவில்லையாம்.

தனது கடைசி மூச்சு வரை திமுக தலைவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாலேயே வாழ்ந்து மறைந்தவர் பெரியார். ஆனால் திமுக சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகள் படத்தில் இடம்பெறவில்லையாம்.

படத்தின் திரைக்கதையை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி, அவர் ஓ.கே. சொன்ன பகுதிகளை மட்டுமே படமாக்கியுள்ளாராம் ராஜசேகரன்.

பெரியார் படம் அவரது முழுமையான வரலாற்றைக் காட்டுவது போல இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு தலைவரை மட்டும் பாராட்டி, புகழ்வது போல படம் வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும், எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதிகம் இல்லை என்று கூறப்படுகிறது. மொத்தமே 2 சீன்தான் என்றும் கூறுகிறார்கள்.

ஏற்கனவே பெரியாரின் முதல் மனைவியான நாகம்மை குறித்த காட்சிகள் அதிகம் இல்லை, நாகம்மைைய சரிவர படத்தில் காட்டவில்லை என்று பெரியாரின் பேரனும், மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இளங்கோவன் கூறுகையில், மணியம்மை கேரக்டருக்கு மட்டுமே இயக்குநர் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது போலத் தெரிகிறது. ஆனால் நாகம்மைதான், பெரியாரின் பல சமூக சேவைகளில் உறுதுணையாக இருந்தவர்.

வைக்கம் போராாட்டத்தில், நாகம்மை தீவிரமாக ஈடுபட்டார். கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். ஆனால் இவை குறித்து படத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை.

பெரியாரின் படத்தை வீரமணிக்காக எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே பெரியாரின் வாழ்க்கை வரலாற்ைற இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்க வீரமணி விரும்பினால், பெரியாரின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் படமாக்க இயக்குநரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருக்க வேண்டும்.

ஆனால் இந்தப் படத்தை வேறு யாரையோ திருப்திப்படுத்த வீரமணி எடுத்திருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். இந்தப் படத்துக்கு அரசு 95 லட்சம் மானியம் வழங்கியுள்ளது. ஆனால் வீரமணி பெருமளவு பணம் திரட்டியுள்ளார். இது எதற்கு?

இந்தப் படத்திற்காக வசூலிக்கப்பட்ட பணம், செலவுக்கணக்கு உள்ளிட்டவற்றை வீரமணி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த விஷயத்தில் நான் தலையிட வேண்டி வரும். பெரியார் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட எனக்கு முழு உரிமையும் உள்ளது என்றார்.

இதேபோல, பெரியாரின் பிரதம சீடர்களில் முக்கியமானவரான எம்.ஆர். ராதா குறித்து படத்தில் ஒரு காட்சியும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே ராதாவின் மகனும், பிரபல நடிகருமான ராதாரவி புலம்பியுள்ளார்.

பெரியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த எம்.ஆர். ராதா குறித்து படத்தில் ஒரு காட்சியும் இல்லாதது மிகவும் அநியாயமானது என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.

படத்தைப் பார்க்க வந்திருந்த ஒரு முக்கிய தலைவர் படம் குறித்துக் கூறுகையில், 95 லட்சம் மானியத்தை வாங்கி எடுத்துள்ளார்கள். அதற்கு நன்றிக்கடனாக, வரலாற்றில் இடம்பெற்ற பல சம்பவங்களை வசதியாக புறக்கணித்து விட்டு, மறைத்து விட்டு படத்ைத எடுத்துள்ளார்கள் என்றார்.

படத்தின் ரிலீஸ் தேதி 3 முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு இப்போது மார்ச் 30ம் தேதி படம் திரைக்குவரும் என்று கூறப்பட்டுள்ளது.

படம் வந்தபிறகு மேலும் பல சர்ச்சைகள் வெடிக்கும், அணல் அறிக்கைகள் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil