»   »  இந்தாங்க... கமல் ஹாஸன் கவிதைக்கு ஒரு கவிஞரின் தெளிவுரை!

இந்தாங்க... கமல் ஹாஸன் கவிதைக்கு ஒரு கவிஞரின் தெளிவுரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அண்ணா, இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா ?

ஹிம்சாபுரி (2001)

போதியின் நிழலில் ஏற்றிய விளக்கு
ஆத்திக வெயிலில் வியர்த்துக் கருத்தது

தச்சன் ஒருவன் அறிவைச் சீவி
தானே அறைபடச் சிலுவை செய்தனன்

'Poet' Kamal Hassan

(Z)ஜாரின் கோலிற் செம்மை இலையெனச்
சினந்து சிவந்த குடியொன்றுயர்ந்தது

யூதப் பெருமான் அணுவை விண்டதில்
ஆயுதம் கண்டனர் அமெரிக்கச் சித்தர்

ஒற்றைக் கழியோன் அஹிம்சையில் பெற்றது
உற்றது இன்று ஹிம்சா புரியாய்.

அன்புடன்
கமல்ஹாசன்.
***

கமலின் இந்தக் கவிதைக்கு கவிஞர் மகுடேஸ்வரன் இன்று அளித்துள்ள தெளிவுரை இது. தெளிவுரைக்குப் பிறகு, கமல் ஹாஸன் கவிஞர்களின் கவிஞர் என்று புகழ்ந்துள்ளார் கவிஞர் மகுடேஸ்வரன்.

அந்த தெளிவுரை:

ஹிம்சை என்றால் துன்பம். புரி என்றால் தலைநகரம். "துன்பத்தின் தலைநகரம்" என்பது தலைப்பு.

போதியின் நிழலில் ஏற்றிய விளக்கு ஆத்திக வெயிலில் வியர்த்துக் கருத்தது = போதி மரத்தடி நிழலில் புத்தன் பெற்ற ஞானத்தால் ஏற்றி வைத்த ஞான விளக்கு, ஆத்திகப் பரவலின் வெய்யிலின் வெப்பம் தாங்காமல் வியர்த்தது. அதன் ஒளிமங்கிக் கறுத்தும்போனது. புத்தர் ஏற்றிவைத்த பகுத்தறிவுக் கருத்துகளின் ஒளி ஆத்திகத்தால் இங்கே நிலைமங்கியது. (கறுத்தது என்பது சரியான பயன்பாடு).

தச்சன் ஒருவன் அறிவைச் சீவித் தானே அறைபடச் சிலுவை செய்தனன் = தச்சனாய்ப் பிறந்த ஒருவன் தன் அறிவைக் கூர்மைப்படுத்தித் தானே அறைபட்டுச் சாவதற்குச் சிலுவைக் கருத்துகளைச் செய்தான். இயேசுவின் அன்புவழிக் கருத்துகள் அவரையே கொன்றன. (சீவித் தானே என்று வலிமிகவேண்டும்).

ஜாரின் கோலிற் செம்மை இலையெனச் சினந்து சிவந்த குடியொன்றுயர்ந்தது = ஜார் மன்னனின் ஆட்சியில் செங்கோல் தவறியது, செம்மை இல்லை என்று சினந்த இரசியாவில் சிவப்புப் புரட்சி நிகழ்ந்து குடிகளின் வாழ்வு உயர்ந்தது.

யூதப் பெருமான் அணுவை விண்டதில் ஆயுதம் கண்டனர் அமெரிக்கச் சித்தர் = ஐன்ஸ்டீன் என்கின்ற யூதர் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு அணுவைப் பற்றிக் கூறினார். அதையே பின்பற்றி அணு ஆயுதம் செய்துவிட்டனர் தற்கால அமெரிக்கச் சித்தர்கள். இங்கே சித்தர் என்பது அழிவுக்கொள்கையுடைய சித்தமுடையோர் என்று ஏளனமாய்க் குறிப்பது.

ஒற்றைக் கழியோன் அஹிம்சையில் பெற்றது உற்றது இன்று ஹிம்சாபுரியாய் = கழி என்றால் ஊன்றுகோல். ஒற்றை ஊன்றுகோலை ஊன்றி நடந்தவராகிய காந்தி அன்புவழியால் ஆக்கிப் பெற்றெடுத்த நிலம் இன்று துன்பத்தின் தலைநகரம் ஆகிவிட்டது.

ஹிம்சாபுரி (2001) என்ற தலைப்பும் காந்தியைப் பற்றிய இறுதி இரண்டு அடிகளும் இக்கவிதை நாட்டின் தற்கால வன்முறைப் போக்கு பற்றியது என்பதற்கான தடயங்கள்.
கமல்ஹாசன் கவிஞர்களின் கவிஞர். ஐயமில்லை.

English summary
Poet Magudeswaran has gave an explanation to Kamal Hassan's poem Himsapuri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil