»   »  ஏ டிசம்பர் மாதமே... எத்தனை இரங்கல் எழுதுவது!!

ஏ டிசம்பர் மாதமே... எத்தனை இரங்கல் எழுதுவது!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் வைரமுத்து

ஓரெழுத்தில் ஒரு வாக்கியம் சோ. வழக்கறிஞர் - கலைஞர் - பத்திரிகையாளர் - அரசியல் விமர்சகர் - நாடக ஆசிரியர் - சொற்பொழிவாளர் என்ற ஆறுமுகம் கொண்டவர்.

அறிவாளிகளில் சிலர் கோமாளிகளைப்போல் தோன்றும்போது, கோமாளிபோல் தோன்றிய அறிவாளி அவர். அவர் யாரை எதிர்க்கிறாரோ அவரையே தனக்கு ரசிகராக்கிவிடும் ரசவாதம் அறிந்தவர்.

Poet Vairamuthu's tribute to Cho

தமிழ்நாட்டில் இன்று புலனாய்வு இதழியல் என்பது விரிந்து வளர்ந்திருப்பதற்கு வித்திட்டவர் அவர்தான். அவருடைய கேள்வி பதில்களுக்காக ஒரு கணிசமான கூட்டத்தைக் காத்திருக்கச் செய்த சொல்லாடல் மிக்கவர் சோ.

எல்லாரையும் விமர்சித்துவிட்டு எல்லாரையும் தன்னை நேசிக்கச் செய்த ஞானவித்தைதான் அவர் செய்த சாதனை. "நான் பாதிப்புலி. பதுங்குவேன்; ஆனால் பாயமாட்டேன்" என்று 'நீலகிரி எக்ஸ்பிரஸி'ல் அவர் பேசும் வசனம்தான் அவரது எழுத்துக் கொள்கையும்கூட. அவர் எழுத்தால் யாருக்கும் தீங்கு நேர்ந்ததில்லை. தன் நெஞ்சுக்குச் சரியென்று பட்டதை அவர் ஒருபோதும் சொல்லத் தயங்கியதில்லை. எதிரி என்பதற்காக இகழ்ந்ததுமில்லை; நண்பர் என்பதற்காக வளைந்ததுமில்லை.

'முகமது பின் துக்ளக், சம்பவாமி யுகே யுகே' போன்ற நாடகங்கள் அவரை மேடை வரலாற்றில் உயர்த்திப் பிடிக்கும். அவர் எழுதிய மகாபாரதம் காலத்தை வென்று கட்டியங்கூறும். இப்படி ஒரு பல்துறை வித்தகர் இன்னொருவர் தோன்ற முடியுமா என்ற கேள்விதான் அவரது கீர்த்தி. அவரை இழந்து வாடும் அனைவர்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால் ஏ டிசம்பர் மாதமே!

எத்தனை இரங்கல் செய்தி எழுதுவது என்று இதயம் துடிக்கிறது. தமிழ்நாட்டின் மனித வளத்தைக் குறைக்காதே. இரங்கல் செய்தி எழுதி எழுதி என் கண்ணீரைக் கறுக்க வைக்காதே. இனிவரும் காலமெல்லாம் நலம் வரும் காலமாகத் திகழவேண்டுமென்று காலத்தின் காலடிகளில் மண்டியிடுகிறேன்.

English summary
Poet Vairamuthu's condolence to the death of Cho Ramaswamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil