For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எதிரியான நண்பன்... குறி தவறிய வேட்டை... வெள்ளந்தியான கொள்ளைக்காரன்!

  By Shankar
  |

  இந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ் சினிமா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து கோடம்பாக்கத்தில் உலாவரும் லேட்டஸ்ட் பஞ்ச் இதுதான்!

  இந்தப் படங்கள் மூன்றுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் (கொள்ளைக்காரனை முன்னணி பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை என்ற குறை உண்டு!), வசூல் என்று பார்த்தால், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் புலம்பலில் உள்ளது தெரிய வந்துள்ளது.

  இனி வரும் நாட்களில் இந்தப் படங்களுக்கான பஞ்சாயத்து ஒன்று பெருமளவு வெடிக்கும், அல்லது கமுக்கமாக முடிக்கப்படும் என்கிறார்கள்.

  முதலில் நண்பன் பட வசூல் குறித்து தியேட்டர் நிலவரங்களைப் பார்க்கலாம்.

  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 12 நாட்களைக் கடந்த நிலையில், சத்யம், ஐநாக்ஸ், பிவிஆர், ஏஜிஎஸ், அபிராமி என குறிப்பிட்ட மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் மட்டும் இந்தப் படம் பரவாயில்லை எனும் அளவுக்குப் போகிறது. சிங்கிள் ஸ்கிரீன் எனப்படும் ஒற்றை பெரிய அரங்குகள் பரிதாபமாக காற்று வாங்குகின்றன.

  காரணம், மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் அதிகபட்ச சீட் எண்ணிக்கை 300. குறைந்தபட்சம் 100. எஸ்கேப் சினிமாவில் ஒரு தியேட்டரின் மொத்த சீட் எண்ணிக்கை 120. இந்த தியேட்டரிலேயே போனதும் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு எளிதாக நண்பன் டிக்கெட் கிடைக்கிறது. சில நேரங்களில் ஃபுல்லாகிறது.

  ஆனால் இது பெரிய விஷயமே அல்ல. சிங்கிள் ஸ்கிரீன் அரங்குகளான பிருந்தா, காசி, ஐட்ரீம் போன்றவற்றில் வார நாட்களில் மிகக் குறைந்த கூட்டமே.

  நகருக்குள்ளேயே இந்த நிலை என்றால் புறநகர்களில் கேட்கவே வேண்டாம்.

  நண்பன் வசூல் குறித்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை வெளியிடும் 'தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராமானுஜம் இப்படிக் கூறுகிறார்:

  நண்பன் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டது என்பது மிகப் பெரிய பொய். இந்தப் படம் இன்னும் 30 கோடியைக் கூட தாண்டவில்லை என்பதுதான் உண்மை.

  முதல் நாள் சுமாரான கூட்டத்துடன்தான் படம் வெளியானது. முதல் நான்கு நாட்களும் சராசரியாக ரூ 4 முதல் 4.5 கோடி வரை வசூலித்தது இந்தப் படம். அதன் பிறகு விழுந்துவிட்டது. நியாயமாக நல்ல விமர்சனம் வந்துள்ள நிலையில் இந்தப் படம் பெரிதாகப் போயிருக்க வேண்டும். ஆனால் நல்ல படம் என பாராட்டப்பட்டும், எதனால் கூட்டம் குறைந்தது என்பது ஆராய வேண்டிய சமாச்சாரம்.

  சென்னையில் படத்துக்கு சுமாராக கூட்டம் வந்துவிட்டால் படம் ஜெயித்துவிட்டது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் நண்பன் வெற்றி, ரெக்கார்டு பிரேக் என்று கூவலாம். அடிவாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் பஞ்சாயத்து வைக்கும்போதுதான் உண்மை புரியும்.

  நண்பன் படத்தின் பட்ஜெட் ரூ 65 கோடி. இதில் பாதிக்கு மேல் வசூலித்தாலே பெரிய விஷயம்தான் என்பது இன்றைய நிலவரம். அடுத்த வாரம் மொத்த வசூல் விவரமும் வந்துவிடும். எங்கள் பத்திரிகையிலேயே தியேட்டர்வாரியாக வசூலை வெளியிடவிருக்கிறோம்," என்றார்.

  நீண்ட நாள் ஓட்டத்தின் அடிப்படையில் நண்பன் படம், சூர்யா நடித்த ஏழாம் அறிவின் வசூலைத் தொட்டாலே பெரிய சாதனைதான் என்கிறார் ராமானுஜம்.

  எந்திரனுடன் ஒப்பீடு...

  எந்திரன் வசூலோடு நண்பனை ஒப்பிடப்படுவது குறித்து ஒரு விநியோகஸ்தரிடம் கேட்டதற்கு, "முதலில் எந்திரன் வசூல் பற்றி இவர்களுக்கு ஏதாவது தெரியுமா... அந்தப் படம் முதல் நாளே ரூ 50 கோடிக்குமேல் வசூலித்தது உலகெங்கும். அப்படியிருந்தும்கூட இங்கு சில தியேட்டர்கள் நஷ்டப்பட்டுவிட்டதாக புலம்பியதும் நடந்தது. அந்தப் படத்துக்கு அதுதான் நிலைமை என்றால்... மற்ற படங்களையெல்லாம் என்னவென்று சொல்வீர்கள்?" என்றார் நம்மிடம்.

  வேட்டை எப்படி?

  தமிழ் ரசிகர்கள் யோசிக்கத் தெரியாதவர்கள் என்ற மாபெரும் நம்பிக்கையில் எடுத்த படம் வேட்டை என்கிறார் ராமானுஜம். என்னதான் பொழுதுபோக்கு என்றாலும், குறைந்தபட்ச லாஜிக் கூடவா வேண்டாம் என கேட்கிறார் அவர்.

  இந்தப் படத்தின் வசூல் குறித்துக் கூறுகையில், "இந்தப் படத்தின் வியாபாரத்திலேயே நிறைய சந்தேகங்கள் உள்ளன. சரி, விற்றவர் - வாங்கியவரின் பிரச்சினை. படத்தைப் பொறுத்தவரை, இதற்கும் நண்பனுக்கு இணையான விமர்சனங்கள், ஆதரவு மீடியா உலகில் இருந்தது. குறிப்பாக இரண்டு பெரிய பத்திரிகைகள் இந்தப் படங்களை கிட்டத்தட்ட குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுபோல வரிந்து கட்டிக் கொண்டு தாங்களாகவே விளம்பரம் செய்து வந்தார்கள்.

  அதுகூட இப்போது கைகொடுக்கவில்லை. வேட்டையால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ 10 கோடி வரை நஷ்டம் வரும் வாய்ப்புள்ளது," என்றார் ராமானுஜம்.

  இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத முக்கிய திரையுலகப் புள்ளி நம்மிடம் கூறுகையில், "நண்பன் பட வசூல் ட்ராப் என்பது உண்மைதான். ஓரளவு நஷ்டம் வரவும் வாய்ப்புள்ளது. மற்றபடி வெளியான பொங்கல் படங்களில் நண்பன் பரவாயில்லை என்பதுமட்டும்தான் ஆறுதல். ஆனால் வேட்டையால் பெரிய நஷ்டம். கொள்ளைக்காரன் தப்பான நேரத்தில் வந்து மாட்டிக் கொண்டது," என்றார்.

  கொள்ளைக்காரன்...

  இந்தப் பொங்கலுக்கு வந்த கிராமியப் படம். ஓரளவு யதார்த்தமான படம் என்று பாராட்டப்பட்ட கொள்ளைக்காரனை பெரிய பத்திரிகைகள் கண்டுகொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

  "உண்மைதான். காரணம் வேட்டை, நண்பன் தயாரிப்பாளர்கள் இந்த கொள்ளைக்காரன் வெளியாவதை ரசிக்கவே இல்லை. அவர்களின் மனசுப்படியே பத்திரிகைகள் நடந்து கொண்டன. நியாயமாக இந்த இரு படங்களையும் விட கொள்ளைக்காரன் தரமான படமே. ஆனால் ஓடவில்லை. காரணம் பெரிய படங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தில் இந்த கொள்ளைக்காரன் காணாமல் போய்விட்டது. தனியாக வந்திருந்தால் ஓரளவு தப்பு பண்ணாமல் போயிருக்க வேண்டிய படம் அது," என்றார் ராமானுஜம்.

  இப்போது மீண்டும் தலைப்பை படியுங்கள்!

  திருந்துங்க தயாரிப்பாளர்களே..

  பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களைப் பகிர்ந்து கொண்ட கையோடு சில விநியோகஸ்தர்கள் சொன்ன இன்னொரு விஷயம், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் திரும்பத் திரும்ப இப்படி பொய் சொல்லி ஹீரோக்களைக் காப்பாற்றிவிடுகிறார்கள் என்பது. "இந்தப் படத்தால் இவ்வளவு நஷ்டம் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டால், ஹீரோவின் இமேஜும் உடையும், சம்பளமும் குறையும். ஆனால் அதைச் செய்யாமல் இப்படி தாங்கிப்பிடித்து மீண்டும் மீண்டும் குனிகிறார்கள்.. அப்புறம் புலம்புகிறார்கள்," என்றனர்!

  தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸிஸ் பரவலாக பேசிக்கொள்ளப்படும் இன்னொரு முக்கியமான விஷயம், மௌனகுரு படம். "இந்தப் பொங்கல் ரிலீஸில் காணாமல் போய்விடும் என்று பலரும் நம்பிய படம் அருள்நிதி நடித்து சாந்தகுமார் இயக்கத்தில் வந்த மௌன குரு. ஆனால் ஆச்சர்யம், இன்னும் ஓரளவு ஸ்டெடியாக இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது..!" என்கிறார்கள்.

  (சரி.. பொங்கலுக்கு மேதை என்றொரு படம் வந்ததே என்று கேட்டதற்கு... "விடுங்க நண்பா பாவம்... பிரஸ் ஷோவுக்கே 20 பேர்தான் வந்தாங்க. இதுல தியேட்டர் நிலவரத்தை கேட்டுக்கிட்டு.." என்றார் சக பத்திரிகை நண்பர் ஒருவர்!)

  English summary
  Here is the much awaited box office collection status of Pongal release Tamil movies Nanban, Vettai and Kollaikaran. According to trade source Ramanujam, none of these films have reached the break even point and in fact Nanban and Vettai forced the distrubutors and exhibitors for a big loss.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X