பொன்னியின் செல்வன் ரஜினி, கமலுக்கு ஸ்பெஷல் ஷோ இல்லையா?..தாமதமாகும் இரு ஆளுமைகளின் பாராட்டு
பொன்னியின் செல்வன் படத்தை உலகமே கொண்டாடி பாரட்டி வருகிறது. இந்தப்படத்தை சிலாகித்து பேசிய ரஜினி, கமல் இரு ஆளுமைகளின் பாராட்டு இன்னும் வரவில்லை.
ரஜினிகாந்தையும் பொன்னியின் செல்வனையும் பிரித்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அதில் வரும் பாத்திரங்களை சிலாகித்து பேசியவர்.
கமல் படத்தை எடுக்க முயற்சித்த ஆளுமை. இவர்கள் இருவருக்கும் படம் திரையிடப்படவில்லையா? இருவர் பாராட்டும் இதுவரை வரவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றி
பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிகின்றனர். மறுபுறம் திரையுலகினரும், முன்னணி இயக்குநர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். திரையுலகின் மகுடம் என கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார். இந்தியா முழுவதும் மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும், பொன்னியின் செல்வனும் மிகப்பிரபலம் என்பதால் பாராட்டுகள் அனைத்து திசையிலிருந்தும் வருகிறது.

கமல் இல்லாமல் பொன்னியின் செல்வனா?
இந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகள் ரஜினி கமல் படம் பற்றி இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளது குறித்து ஆங்காங்கே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஜினிக்கும், கமலுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் அப்படி என்ன பந்தம் இருக்கிறது என்றால் அதை சொல்லிக்கொண்டே போகலாம். பொன்னியின் செல்வனை எடுக்கும் முயற்சியை எம்ஜிஆர் கைவிட்டப்பின் 1986 ஆ ஆண்டு தனது விக்ரம் பட வெற்றிக்குப்பின் கமல் கையிலெடுத்தார். திரைக்கதை உருவாக்கம் குறித்து மணிரத்னத்துடன் விவாதித்தார்., படத்துக்கான பட்ஜெட் 2 கோடி முதல் 6 கோடி வரை என முடிவு செய்யப்பட்டது. கதாபாத்திரங்கள் பேசப்பட்டது.

ரஜினிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் உள்ள பந்தம்
இதேபோல் கதாபாத்திரம் பற்றி சிவாஜி கணேசனிடம் ஆலோசித்தபோது வந்திய தேவன் பாத்திரத்தில் ரஜினியை போடு என சொன்னாராம், இதை கமல்ஹாசனே பொன்னியின் செல்வன் விழா மேடையில் சொன்னார். ரஜினிகாந்துக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இருக்கும் பந்தம் பெரியது. நாவல் பற்றி பேசச்சொன்னால் ரஜினி உற்சாகமாகிவிடுவார். மணிக்கணக்கில் பேசுவார். நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரம் அதன் குணநலன்கள் பற்றி அலசி ஆராய்ந்து பேசுவார். பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் முடிப்பார் என்று அன்றே சொன்னவர் ரஜினிகாந்த்.

பொன்னியின் செல்வன் நாவல் மீது தீரா காதல் கொண்ட ரஜினிகாந்த்
பொன்னியின் செல்வன் நாவலின் மீது எந்த அளவுக்கு ரஜினிக்கு காதல் இருந்தது என்றால் அய்யா எனக்கு பெரிய பழுவேட்டரையர் வேடத்தையாவது கொடுங்க என தான் மணிரத்னத்திடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார் என மேடையில் செல்லமாக புகார் சொன்னார். நந்தினி வேடம் தனக்கு பிடித்தமான வேடம் அதுதான் படையப்பா படத்தின் நீலாம்பரி ரோல் என ஒப்பீடு செய்தது, ரஜினியின் அனுபவத்தை காட்டியது. இப்படி ஆசைப்பட்டு சிலாகித்து பேசிய ரஜினி, எடுக்க முயன்ற கமல் இவர்களிடமிருந்து இதுவரை பாராட்டி வரவில்லை என்பது நெட்டிசன்களின் ஆதங்கமாக உள்ளது.

ஸ்பெஷல் ஷோ எதும் இரண்டு ஆளுமைகளுக்கும் இல்லையா?
ஏன் ரஜினி, கமலுக்கு ஸ்பெஷல் ஷோ இல்லையா? தமிழகத்தின் 2 ஆளுமைகளின் பாராட்டு வாழ்த்துகளை நாங்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை ரஜினி கமல் இருவரும் படம் பார்த்தது போல் எந்த தகவலும் இல்லை, படம் பார்க்காத அவர்களிடம் எப்படி வாழ்த்தை எதிர்ப்பார்க்க முடியும். அதே நேரம் விரைவில் ஒரு ஸ்பெஷல் ஷோ இவர்களுக்காகவும் முக்கிய விஐபிக்களுக்காகவும் இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











