பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு... 2ம் பாகத்தை உடனே ரிலீஸ் பண்ண முடிவு?
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சாதித்துக் காட்டிய மணிரத்னம்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர், கமல்ஹாசன் இருவரும் படமாக எடுக்க முயன்றனர். ஆனால், அவர்களால் முடியாததை இப்போது மணிரத்னம் சாதித்துக் காட்டியுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை மணிரத்னத்தின் முயற்சிகள் தோல்வியடைந்த போதும் விடாமல் போராடிய அவர் இப்போது சொன்னபடி படத்தை எடுத்து முடித்துவிட்டார். கடந்த ஒரு வருடமாக சினிமா ரசிகர்களிடம் பொன்னியின் செல்வன் ஃபீவர் தான் கொளுந்துவிட்டு எரிந்தது. இந்நிலையில், தற்போது முதல் பாகம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இரண்டாம் பாகம்
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமா என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவான இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. கொரோனா போன்ற பல சிக்கல்களையும் கடந்து இந்தப் படம் உருவாகியுள்ளதால், முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டையும் சேர்த்தே படப்பிடிப்பிடிப்பை முடித்துவிட்டார் மணிரத்னம். இரண்டாம் பாகத்தை தனியாக எடுத்தால் நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதில் பிரச்சினைகள் வரும் என்பதால், மணிரத்னம் சரியக ப்ளான் செய்து இரண்டு பாகங்களையும் எடுத்துவிட்டார்.

120 நாட்களில் ஷூட்டிங்
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் 120 நாட்களில் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொன்னி நதி பாடல் வெளியீட்டின் போது நடிகர் கார்த்தி இந்த தகவலை சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். இவ்வளவு பிரம்மாண்டமான படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 120 நாட்களில் மணிரத்னம் முடித்துள்ளது திரையுலகையும் மிரள வைத்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால், இரண்டாம் பாகத்தையும் உடனே வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

கோடை விடுமுறைக்கு ரிலீஸ்
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மணிரத்னமிடம், இரண்டாம் பாகம் ரிலீஸ் பத்தி கேட்கப்பட்டது. அப்போது முதல் பாகம் வெளியாகி 9 மாதங்களுக்குப் பிறகு செகண்ட் பார்ட் ரிலீஸாகும் என கூறியிருந்தார். இந்நிலையில், பின்னணி இசை, எடிட்டிங் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், இரண்டாம் பாகத்தை சூட்டோடு சூட்டாக அடுத்தாண்டு ஏப்ரலில் சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸ் பண்ண மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











