முதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு!
சென்னை : டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பல்துறை வித்தகரான பிரபுதேவா பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ஹீரோவாக நடித்தார்.
'தேவி' படத்தைத் தொடர்ந்து 'குலேபகாவலி', 'மெர்க்குரி' ஆகிய படங்கள் ரிலீஸாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இதனையடுத்து 'லஷ்மி', 'யங் மங் சங்', 'சார்லி சாப்ளின் 2' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், சல்மான் கானை வைத்து இந்தியில் 'தபாங் 3' படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில், பிரபுதேவா தனது சிஷ்யர் ஏ.சி.முகில் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக போலீஸாக நடிக்கவிருக்கிறார் பிரபுதேவா. இந்தப் படத்தை ஜெபக் புரொடக்ஷன்ஸ் நேமிசந்த் ஜெபக் தயாரிக்க்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் ஏ.சி.முகில் 'போக்கிரி', 'வில்லு' ஆகிய படங்களில் பிரபுதேவாவுடன் எழுத்தாளராக பணிபுரிந்தவர். இவர் இதற்கு முன் சாந்தனு நடிப்பில் வெளிவந்த 'கண்டேன்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
முதல் படம் வெற்றியடையாததால் வாய்ப்பின்றி இருந்துவந்த தனது சிஷ்யனுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா. இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











