டியூட் படப்பிடிப்பில் சக நடிகரை அடித்த பிரதீப் ரங்கநாதன்.. இயக்குநருக்கு தெரியாமல் நடந்த சம்பவம்!
சென்னை: இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டியூட். இந்த படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதனும் கதாநாயகியாக மமிதா பைஜுவும் நடித்துள்ளார்கள். மேலும் படத்தில் சரத்குமார், டிராவிட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன் தனது சக நடிகரை படப்பிடிப்புத் தளத்தில் கடுமையாக அடித்தது குறித்து பகிர்ந்து கொண்டது பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
அவர் பேசும்போது, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மமிதா பைஜுவுடன் லவ் டுடே படத்திலேயே நடிக்கலாம் என்று முயற்சி எடுத்தேன். ஆனால் அது கை கூடவில்லை. ஆனால் இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. அதேபோல், படத்தில் நான் டிராவிட் உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒவ்வொரு படமும் பண்ணும் போது அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுப்பேன். ஆனால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தில் டிராவிட் உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சக நடிகரை அடித்த பிரதீப் ரங்கநாதன்: அதேபோல் படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகர் ரித்து. வழக்கமாக ஒரு படத்தில் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் போது, படம் முடியும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் ரித்துவுடன் அப்படி நடக்கவில்லை. ஒரு ஆக்ஷன் காட்சியில் நான் அவருக்கு வலிக்கும் அளவுக்கு அடித்துவிட்டேன். இது மட்டும் இல்லாமல், அவரை அடித்து விட்டு, அவருக்கு வலிக்கிறது என்று தெரியாமல் அவரைப் பார்த்து சிரித்தும் விட்டேன். அன்று முதல் மனதிற்குள் மிகவும் சங்கடமாகவும் குற்ற உணர்வாகவும் இருந்து கொண்டே இருந்தது. எப்போது அவரைப் பார்த்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.

ரசிகர்கள் கமெண்ட்: ஒருவரை தெரியாமல் காயப்படுத்திவிட்டால் மன்னித்து விடுவார்கள். ஆனால் வலியில் இருப்பவர்களைப் பார்த்து சிரித்தால் மன்னிக்க மாட்டார்கள். ரொம்ப சாரி ரித்து" என்று பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வழக்கமாகவே ஒரு ஆக்ஷன் காட்சியில் ஒரு நடிகர் நடிக்கிறார் என்றால், ஆக்ஷன் காட்சியின் ஷாட் முடிந்தவுடன் அவர்களுக்கு அடிபட்டுவிட்டதா? என்று பார்த்து மன்னிப்பு எல்லாம் கேட்பார்கள். இப்படியான பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் பிரதீப் ரங்கநாதன் சக நடிகரை அடித்து விட்டு அவருக்கு வலிக்கிறதா என்பது குறித்து கேட்காமல், அவரைப் பார்த்து சிரித்தது தவறு என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











