இதுக்கு LIK படமே தீபாவளிக்கு வந்திருக்கலாம்.. Dude ரொம்ப மோசம்.. புலம்பும் ஃபேன்ஸ்!
சென்னை: கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அந்த படத்திலேயே ஆட்டோ டிரைவராக கேமியோ ரோலில் நடித்திருப்பார். அதன் பின்னர் அவர் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
லவ் டுடே படத்திற்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட எல்ஐகே படத்தை முந்திக் கொண்டு இந்த ஆண்டு வெளியாகி 150 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது.

இந்த ஆண்டு வெளியான தனுஷின் இட்லி கடை, விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி மற்றும் சிவகார்த்திகேயனின் மதராஸி உள்ளிட்ட படங்கள் கூட டிராகன் வசூலை முறியடிக்கவில்லை. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக தொடங்கப்பட்ட டியூட் படமும் எல்ஐகே படத்தை முந்திக்கொண்டு தீபாவளி ரிலீஸ் ஆனது.
ஓபனிங் வசூலை அள்ளியாச்சு: டிராகன் படத்தின் வெற்றியை அறுவடை செய்யும் முனைப்பிலேயே விக்னேஷ் சிவனின் எல்ஐகே மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த டியூட் என இரு படங்களும் தீபாவளி ரிலீஸை திட்டமிட்டன. ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஸ்ட்ராங்காக விட்டுத் தரமாட்டோம் முடிந்தால் ஒரே தேதியில் ரிலீஸ் பண்ணிக்கோங்க என்று சொன்ன நிலையில், எல்ஐகே படக்குழு பிரதீப் ரங்கநாதனுக்காக பார்த்து பின் வாங்கினர். அதன் காரணமாக முதல் நாளில் அதிகப்படியாக தனுஷ், சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு 10 கோடி வசூலை பிரதீப் ரங்கநாதன் அள்ளியுள்ளார். மேலும், தீபாவளி வரை டியூட் படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அடையும் என்கின்றனர்.
விமர்சன ரீதியாக அடி: ஆனால், விமர்சன ரீதியாக லவ் டுடே மற்றும் டிராகன் படங்களுக்கு கிடைத்தது போல டியூட் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் பிளாக்பஸ்டர் டாக்குகள் வரவில்லை. அதற்கு காரணம் இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கதையும் திரைக்கதையும் தான். மமிதா பைஜுவை படுமோசமாக சித்தரித்து பறக்கும் மீம்களுக்கும் அவர் தான் காரணம் என்கின்றனர். தீபாவளி விடுமுறை முடிந்தவுடன் டியூட் மக்களை கவர்ந்தால் மட்டுமே லவ் டுடே, டிராகன் போல வெற்றியை கொடுக்கும் என்கின்றனர்.
எல்ஐகே வந்திருக்கலாம்: டியூட் படத்தின் டிரைலர் வெளியாகும் போதே கதையின் முக்கிய கருவை ரசிகர்கள் கண்டறிந்து விட்டனர். சாய் அபயங்கரின் இசையில் வெளியான பாடல்களும் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டன. டியூட் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த தீபாவளிக்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமே வந்திருக்கலாம் என்றும் டிசம்பர் மாதத்தில் சரவெடி கன்ஃபார்ம் என்றும் கூறுகின்றனர். டியூட் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டால் அடுத்த மாதம் எல்ஐகே படத்துக்கும் அது பெரும் சிக்கலை உருவாக்கும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











