Dude Day 6 Box Office - பிரதீப் ரங்கநாதன் 10,000 வாலாதான்.. டியூட் 6வது நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் இந்த தீபாவளி வின்னராக மாறியிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட அந்தப் படம் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இதுவரை உலக அளவில் 95 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கும் நிலையில் ஆறாவது நாளான நேற்று இந்தியாவில் அந்தப் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
கீர்த்திஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் டியூட் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக மூன்றாவது படம். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். சரத்குமார் முக்கியமான ரோலை ஏற்று கலக்கியிருக்கிறார். இவர்கள் தவிர்த்து பரிதாபங்கள் டிராவிட், ரோகிணி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இயக்குநரின் வெற்றி: கீர்த்திஸ்வரனுக்கு அவரது முதல் படமே பாராட்டை பெற்றுக்கொடுத்திருக்கிறது. கமர்ஷியல் ரூட்டில் சென்று சமூகத்துக்கு தேவையான மெசேஜை சொல்லும் ஃபார்முலாவை அவர் லாவகமாக கையாண்டிருக்கிறார். இந்தக் கால தலைமுறையினருக்கு ஆணவ கொலை போன்ற விஷயத்தை போர் அடிக்காமல், பிரசார தொனியில்லாமல் சொல்லியதை பார்த்து பலரும் அவரை பாராட்டிவருகிறார்கள்.

அந்த பெரியவர் சொன்னது: அதுமட்டுமின்றி நேற்று நடந்த வெற்றி விழாவில் பேசிய இயக்குநர், "டியூட் படத்துடைய கதை இன்று விவாத பொருளாக மாறியிருக்கிறது. இந்தப் படத்தில் சொல்லாத விஷயத்தை சொல்லியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இது தமிழ்நாடு. இங்கு பெரியவர் இருந்திருக்கிறார். அவர்கள் வழியில் வந்துதான் நாங்கள் இதை பேசியிருக்கிறோம். அதனால் இந்தப் படத்தில் பேசியிருக்கும் விஷயங்கள் தமிழ்நாட்டில் இதுவரை பேசாத கருத்துக்கள் இல்லை.
நாங்களும் பேசுவோம்: எங்களுக்கு முன்பு நிறைய பேர் இதை பேசியிருக்கிறார்கள். அடுத்த தலைமுறையான நாங்களும் அதை பேசுவோம். ஆனால் அதை முடிந்த அளவுக்கு சினிமாவுக்கான மொழியில் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்னும் பெரிய அளவில் பேச வேண்டும் என்பது எனது ஆசை. என்னுடைய அடுத்தடுத்த படைப்புகளில் இது மாதிரி பேசுவேன். ஆணவ கொலை தொடர்பான வசனம் முதலில் படத்தில் இல்லை. அப்போதுதான் கவின் படுகொலை நடந்தது. அந்த சமயத்தி இது பற்றி ஒரு வசனம் வைக்க வேண்டும் என்று பிரதீப் ரங்கநாதன்தான் சொன்னார்" என்றார்.
விரைவில் நூறு கோடி கிளப்: இது ஒருபக்கம் இருக்க வசூலில் படம் அணையாத பட்டாசாக வெடிக்கிறது. இதுவரை ஐந்து நாட்களில் உலக அளவில் படமானது 95 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனால் விரைவில் இப்படமும் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைவது உறுதியாகிவிட்டது.
ஆறாவது நாள் வசூல்: பிரதீப் ரங்கநாதன் வரிசையாக மூன்று முறை நூறு கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெருமையை பெறவிருக்கிறார். இந்நிலையில் இந்தியாவில் அந்தப் படம் நேற்று செய்த வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 3.75 கோடி ரூபாய் கலெக்ட் செய்து இந்தியாவில் மொத்தம் 54.05 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











