நீ தாலி கட்டு.. நான் கூட்டிட்டு போறேன்.. வடிவேலு காமெடியை போட்டு டியூட் படத்தை கலாய்க்கிறாங்களே!
சென்னை: தாலி முக்கியம் இல்லை.. தாலிக்கு பின்னாடி இருக்குற பெண்ணோட ஃபீலிங்ஸ் தான் முக்கியம் என பன்ச் வசனம் எல்லாம் பேசி பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படத்தை பார்த்த ஃபேமிலி ஆடியன்ஸ் தீபாவளி அதுவுமா இப்படியொரு படத்துக்கா வந்திருக்கோம் என ரொம்பவே மன வருத்தத்துடன் தியேட்டர்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தாலிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏகப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. தாலிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை, அதை கட்டிக் கொண்டிருக்கும் பெண்ணின் ஃபீலிங்ஸ் முக்கியம் என்பதை தாலி சென்டிமென்ட் தாண்டி அக்செப்ட் செய்தாலும், அந்த தாலியை கட்டும் மணமகனின் ஃபீலிங்ஸ் முக்கியமில்லையா பாஸ் என்று ஆதங்கப்பட்டு எல்லாம் கேட்காமல் இயக்குநர் கீர்த்தீஸ்வரனை அசிங்க அசிங்கமாக சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன், மமிதா பைஜுவை டோட்டல் டேமேஜ் செய்து மீம்ஸ் போட்டு வரும் நிலையில், பிரதீப் ரங்கநாதன் பெரிய தியாகி என்று அவரையும் அசிங்கப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சத்யராஜ் - வடிவேலு நடிப்பில் வெளியான படத்தின் காமெடியை போட்டு பங்கமாக கலாய்த்து வருவதும் வைரலாகி வருகிறது.
கள்ளக் கல்யாணம்: கள்ளக் காதலை வைத்து ஏகப்பட்ட படங்களை பார்த்துவிட்டோம். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்த புரட்சிகரமான டியூட் திரைப்படம் கள்ளக் கல்யாணத்தை ஊக்குவிக்கும் படமாக உருவாகியுள்ளது. தாலி சென்டிமென்ட்டை மட்டுமின்றி தமிழர்களின் திருமண கலாச்சாரத்தையே அசிங்கப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது என்றும் ஆணவக் கொலைகளை செய்பவர்களுக்கு ஆப்பு அடிக்க உங்களுக்கு வேறு கதையே இல்லையா என்றும் தமிழர் பண்பாட்டை பேணிக்காத்துக் கொண்டிருக்கும் மக்களின் மனங்களை ஏன் வேதனையில் ஆழ்த்துகிறீர்கள் என படத்தை பார்த்த ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
தீபாவளிக்கு தலைவலி: லவ் டுடே படத்தில் மொபைல் போனையும், டிராகன் படத்தில் படிப்பின் முக்கியத்துவத்தையும் சொன்ன பிரதீப் ரங்கநாதன் படமாச்சே என குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தீபாவளியை முன்னிட்டு டியூட் படம் பார்க்கப் போனது ஒரு குத்தமா ஒரே தலைவலியுடன் வந்தது தான் மிச்சம் என பெரியவர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.
நீ தாலி கட்டு.. நான் கூட்டிட்டு போறேன்: சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ், வடிவேலு, நமீதா நடிப்பில் வெளியான இங்கிலிஷ்காரன் படத்தில் "எனக்கு ஓம குண்டம் புகையெல்லாம் செட்டாகாது, நீ தாலி கட்டு.. நான் கூட்டிட்டுப் போறேன்" என சத்யராஜ் வடிவேலுவிடம் காமெடியாக பேசுவதை மொத்த படமாக எடுத்து வைத்திருக்கின்றனர் என டியூட் படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இனிமேல் இப்படித்தானா?: தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் பான் இந்தியாவே ஆச்சர்யப்படும் அளவுக்கு பட்ங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், தமிழ் சினிமாவில் இனிமேல் இப்படித்தான் ஜென் ஸி கிட்ஸ் படங்கள் என சுமாரான கதைகளும் அரைவேக்காடு படங்களும் தான் வெளியாகுமா? என்று கோலிவுட் ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர். பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் போலத்தான் தமிழ் சினிமாவின் புதிய படங்களும் மாறிவிடுமா என்கிற அச்சமும் எழுவதாக பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











