»   »  பிரஷாந்த் குடும்பத்துக்கு முன்ஜாமீன்

பிரஷாந்த் குடும்பத்துக்கு முன்ஜாமீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், நடிகர் பிரஷாந்த், அவரது தந்தை தியாகராஜன், தாயார் சாந்தி, தங்கை ப்ரீத்தி ஆகியோருக்கு 3 மாதங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் பிரஷாந்த்துக்கும், மனைவி கிரகலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்து வசிக்கின்றனர். தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரஷாந்த் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து குடும்ப நல நீதிமன்றம் இருவரையும் அழைத்து பலமுறை சமரசப் பேச்சுக்கு உட்படுத்தியது. ஆனால் எந்தப் பலனும் இல்லை.

இந் நிலையில் திடீரென பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறி சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து புகார் கொடுத்தார் கிரகலட்சுமி.

இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். பிரஷாந்த் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரஷாந்த் குடும்பத்தினர் தலைமறைவாகினர். அவர்கள் சார்பில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பெரியகருப்பையா முன்னிலையில், பிரஷாந்த் மற்றும் கிரகலட்சுமியின் வக்கீல்கள் ஆஜராகினர்.

அவர்களிடம், கணவனும், மனைவியும் இணைந்து வாழ விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால் சேர்ந்து வாழ விடாமல் எது தடுக்கிறது என்று கேட்டார். பின்னர் இருவரையும் பிற்பகலில் தனது அறையில் வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி பிற்பகலில் பிரஷாந்த்தும், கிரகலட்சுமியும் நீதிபதி முன்பு ஆஜராகினர். அவர்களிடம் தனியாக சுமார் 2 மணி நேரம் கவுன்சிலிங் நடத்தினார் நீதிபதி பெரியகருப்பையா.

அப்போபாது வெளியில் கிரகலட்சுமியின் உறவினரிடம் இருந்த குழந்தையை கொண்டு வருமாறு உத்தரவிட்டார். பின்னர் குழந்தை உள்ளே கொண்டு வரப்பட்டு பிரஷாந்த்திடம் தரப்பட்டது. அதை அவர் வாங்கிக் கொஞ்சி மடியில் கிடத்திக் கொண்டார்.

பின்னர் கவுன்சிலிங் முடிந்து வெளியே வந்த பிரஷாந்திடம் என்ன நடந்தது என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

பிரச்சினைக்கு காரணம் எது என்பதை நீதிபதி கண்டுபிடித்துள்ளார், வேறு எதையும் வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.

இதைத் தொடர்ந்து கிரகலட்சுமி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எனது கணவருடன் சேர்ந்து வாழவே நான் ஆசைப்படுகிறேன். அதேபோல எனது மாமியார், மாமனாருடன் ஒரே குடும்பமாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இன்றைக்கே சேர்ந்து வசிக்க வேண்டும் என்று கூறினாலும் கூட நான் தயார்தான்.

ஆனால் எனது மாமனார் வீட்டில் என்னை எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக் கூடாது. வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்த மாட்டோம் என அவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பின்னர் நீதிபதி தனது உத்தரவைத் தெரிவித்தார். அதன்படி, ஜூன் 18ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் நடக்கவிருக்கிற சமரசக் கூட்டத்தில் இருவரும் கலந்து கொள்ள வேண்டும். அங்கு சுமூகத் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 3 மாதங்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜூன் 14ம் தேதிக்குள் சென்னை 6வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம்.

ரூ. 5 ஆயிரம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான தனி நபர் ஜாமீனும் அளிக்க வேண்டும். நெருங்கிய உறவினர் ஒருவரை ஜாமீன்தாரராக காட்ட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil