பிரதாப் போத்தன்..வித்தியாசமான வேடங்களில் கலக்கியவர்..80 களில் மனதோடு பேசிய நாயகன்
சென்னை: பிரதாப் போத்தன் 80 களில் ஹீரோவாக அறிமுகமானவர். மலையாளம், தமிழ் படங்களில் முத்திரைப்பதித்தவர். தனது 69 வது வயதில் இன்று காலமானார்.
Recommended Video
எப்போதும் வித்தியாசமான வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரதாப் போத்தன். கடந்த 40 ஆண்டு காலமாக சினிமா உலகில் பிரபலமாக இருந்து வருகிறார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கியும் இருக்கிறார், இவர் கடைசியாக நடிகர் மோஹன்லால் இயக்கத்தில் நடித்துள்ளார்.

பக்கத்து வீட்டு படித்த இளைஞர் போன்ற தோற்றம் கொண்ட பிரதாப்
தமிழ் திரையுலகில் 80 களின் ஆரம்பம் மிக வித்தியாசமானது. பாரதிராஜா, ஆர்.சி.சக்தி, மகேந்திரன், பாலுமகேந்திரா உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களனை படைக்கக்கூடிய இயக்குநர்கள் திரைக்கு வந்தனர். அதற்கு ஏற்ப கதாநாயகர்களும், நடிகர்களும் வந்தனர். அப்படி வந்தவர்தான் பிரதாப் போத்தன். அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமானார். கமல், ரஜினி போல் நாயகர்களுக்குரிய உடல்மொழியோ, தோற்றமோ இல்லாமல் பக்கத்து வீட்டு இளைஞர்போல் இருப்பார்.

80- களில் அழியாத கோலங்களில் அறிமுகமான இளைஞர் போத்தன்
யார் இவர் தமிழை வித்தியாசமாக உபயோகிக்கிறாரே, நடிப்பிலும் வழக்கமான தமிழ் நாயகர்கள் போல் அல்லாமல் இருக்கிறாரே என ரசிகர்கள் அவரை கவனிக்கத்தொடங்கினர். வழக்கமான கதாநாயகர்களிலிருந்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரதாப். 80 களில் அவர் அறிமுகமான அழியாத கோலங்கள் படம் அவருக்கு சிறப்பான பெயரை வாங்கித்தந்தது.

80-களில் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்த பிரதாப் போத்தன்
மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற வித்தியாசமான இயக்குநர்கள் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் பெரிதும் பேசப்பட்டது. 1980-களில் அவர் நடித்து வெளிவந்த மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே, வறுமையின் நிறம் சிகப்பு உள்ளிட்ட படங்கள் அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது. மூடுபனி படத்தில் என் இனிய பொன் நிலாவே என்கிற கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கிதார் இசைத்தப்படி பாடிய பாடல் அந்தக்கால இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

காதல் சைக்கோவாக மூடுபனியில் வித்தியாச வேடம்
காதல் சைக்கோ கில்லராக வரும் பிரதாப்பின் நடிப்பும் மனபிறழ்வால் பாதிக்கப்பட்ட இளைஞராக தாயின் எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு மாமா அம்மா மாமா என நடிக்கும் அவர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் படத்திலும் வித்தியாசமான ஹீரோவுக்கு நிகரான வேடம் அதில் சிறப்பாக செய்து அவர் பேசப்பட்டார். வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் நாடக ஆசிரியராக ஸ்ரீதேவியை ஒரு தலையாக காதலிக்கும் நடிப்பு. கமல் இடையில் வர அவருடன் மோதலில் ஈடுபடும் காமெடியான வேடம் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.

சினிமாவில் அத்தனை வித்தைகளையும் கற்றவர்
பிரதாப் போத்தன் நடிகர் மட்டுமல்ல திரைத்துறையை தெளிவாக அறிந்தவர். நடிகராக மட்டுமல்லாமல் பல துறைகளில் கால் பதித்துள்ளார். திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பங்களிப்பை செலுத்தியுள்ளார். பிரதாப் போத்தன் மலையாளத்தில் மலையாளத்தில் டெய்சி, ரிதுபீடம், ஒரு யாத்ராமொழி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, வெற்றிவிழா, ஜீவா, மைடியர் மார்த்தாண்டன், ஆத்மா, மகுடம், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார், தெலுங்கில் சைதன்யா என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

வெற்றிவிழா படத்தின் வெற்றி இயக்குநர்
பிரதாப் போத்தன் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகை, வெற்றிவிழா படத்தில் முதன் முறையாக ஸ்டெடிகேம் இயக்கப்பட்டது. இந்தப்படத்தில் கமல், பிரபு நடித்திருப்பார்கள். பாடல்களுக்காகவும் திரைக்கதைக்காகவும் பேசப்பட்ட படம். கவுதம் மேனன் போன்றோர் வருவதற்கு முன்னரே 80 களின் மத்தியில் பல அவர் எடுத்த படங்கள் பேசப்பட்டது. மைடியர் மார்த்தாண்டன் என்கிற படம் நகைச்சுவைக்காக பார்க்கப்பட்டது.

சீவலப்பேரி பாண்டியை இயக்கிய போத்தன்
சீவலப்பேரி பாண்டி என்கிற ஆயுள் தண்டனைக் கைதியின் கதையை எடுத்தார். நெப்போலியன் சீவலப்பேரி பாண்டியாக நடித்தார். தென் மாவட்ட வட்டார மொழி வாழ்வியல் கலந்த சினிமா, ஒருவரின் வாழ்க்கை சம்பவத்தை, அதுவும் சிக்கலான கதையை மிக அழகாக படமாக்கியிருப்பார். நெப்போலியன் சீவலப்பெரி பாண்டியாகவே வாழ்ந்திருப்பார். வாழ்க்க நாடகமா என்கிற பாடல் பெரிதாக ரசிக்கப்பட்டது. ஒரு மலையாள மொழி பேசும் நடிகர், இயக்குநர் இவ்வளவு சிறப்பாக தமிழில் எடுக்கப்படுமா என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பிரதாப் போத்தனால் மட்டுமே அது சாத்தியமானது.

ஏற்ற பாத்திரங்கள் அனைத்திலும் ஜொலித்தவர்
பிரதாப் போத்தன் ஏற்று நடித்த பாத்திரங்கள் அனைத்திலும் அவர் தனியாக தெரிவார் அதுதான் அவரது சிறப்பு. பன்னீர் புஷ்பங்கள் படத்தில் பால்ய பருவக்காதலால் ஈர்க்கப்பட்ட மாணவர் சுரேஷ், ஆசிரியராக வரும் பிரதாப் தனது காதலியை காதலிப்பதாக எண்ணி கோபப்படுவார். பள்ளி ஆசிரியராக வரும் பிரதாப் அதில் சிறப்பாக நடித்திருப்பார். சிந்துபைரவியில் சுஹாசினியை துரத்தும் காதலராக, வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவியை காதலிக்கும் குடும்ப நண்பராக, ராம் திரைப்படத்தில் வரும் சைக்கிரியாட்டிஸ்ட், குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் வரும் கணவன் பாத்திரம் என அவர் அந்தப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்.

விசுவுக்கு போட்டியாக நகைச்சுவையில் கலக்கியவர்
பெண்மணி அவள் கண்மணி படத்தில் விசுவின் அப்பாவி மகனாக வரும் வேடம் அவருக்கு. விசு நல்லது செய்கிறேன் என ஊரெல்லாம் வம்பிழுக்க அதற்கு முட்டுக்கொடுக்கும் மகனாக அப்பா மேல் உள்ள பாசத்தால் கண்டிக்கவும் முடியாமல் இருக்கும் பாத்திரம். ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாமல் அப்பா விசுவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு அழுதபடி நிற்க விசு போடான்னு விரட்ட இவர் போகமல் நிற்க விசு கல்லை எடுத்து அடிக்க அந்தக்காட்சியில் விசுவுக்கு போட்டியாக பிரதாப்பின் காமெடி நடிப்பு பிரமாதமாக இருக்கும்.

44 ஆண்டு சினிமா வாழ்க்கை கடைசிப்படம்
பிரதாப் போத்தன் ஒரு கோடீஸ்வரராக சினிமாவுக்குள் வந்தார். சினிமாவில் நுணுக்கமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர். அவரது ஆழமான சினிமா அறிவு அவருக்கு பல நண்பர்களை தந்தது. வித்தியாசமான வேடங்களில் நடித்தார். பல படங்களை எழுதி இயக்கினார். 44 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எவ்வித சர்ச்சையிலும் சிக்காதவர் தமிழ் மலையாளப்படங்களின் முன்னணி நடிகர்களின் அன்பைப்பெற்றவர். கடைசியாக மம்முட்டியுடன் சிபிஐ டைரிக்குறிப்பு 5 ம் பாகத்தில் நடித்தார், மோகன்லாலின் இயக்கத்தில் பர்ரோஸ் படத்தில் நடித்துவந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

திருமண வாழ்க்கை
தமிழ், மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரதாப் போத்தன் மலையாளத்தில் இயக்கிய கடைசி படம் 1997 இல் வெளியான யாத்ரா மொழி. அதன் பின்னர் பின்னர் நடிப்பில் தீவிரமாக இறங்கினார். பிரதாப் முதலில் நடிகை ராதிகாவை மணந்தார். ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் அமலா சத்யநாத்தை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கேயா என்ற மகள் உள்ளார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உறவும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று காலை பிரதாப் போத்தான் சென்னை இல்லத்தில் காலமானார். காலங்கள் மாறினாலும் பிரதாப் போத்தன் போன்ற அரிதாக வரும் கலைஞர்களை திரைத்துறை எந்நாளும் மறக்காது.


Click it and Unblock the Notifications











