வெங்கட் பிரபு – நாக சைதன்யா கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்… அடுத்தடுத்து வெளியான அதிரடி அறிவிப்பு
சென்னை: மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.
நாக சைதன்யாவின் 22வது படமாக உருவாகும் NC 22 படத்திற்கு இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இசையமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் NC 22 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெங்கட்பிரபுவின் NC 22
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய 'மாநாடு' திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி வசூலை கடந்தது. அதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடித்த 'மன்மத லீலை' படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. இந்நிலையில், அடுத்ததாக தெலுங்கு முன்னனி நடிகர் நாக சைதன்யாவின் படத்தை இயக்கி வருகிறார். நாக சைதன்யாவின் 22வது படமான இது 'NC 22' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. இது வெங்கட் பிரபுவின் 11வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளையராஜா, யுவன் சங்கர் ராஜா
நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து NC 22 படத்திற்கு இசையமைத்து வருகின்றனர். முதன்முதலாக வெங்கட் பிரபு படத்திற்கு இளையராஜா இசையமைப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் டெக்னிக்கல் டீம் குறித்து படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில், தற்போது நடிகர், நடிகைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரியாமணி, பிரேம்ஜி
NC 22 படத்தில் பிரியாமணி முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது வென்ற பிரியாமணி, தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், முதன்முறையாக வெங்கட் பிரபுவுடன் பிரியாமணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜியும் இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளார். வெங்கட் பிரபுவின் படங்களில் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

சம்பத் ராஜ், வெண்ணிலா கிஷோர்
இவர்களைத் தொடர்ந்து சம்பத் ராஜ், தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் இருவரும் NC 22 படத்தில் கமிட் ஆகியுள்ளனர். சென்னை 28, சரோஜா, கோவா என வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் சம்பத் ராஜ் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது NC 22 படத்திலும் அவர் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளாராம். அதேபோல், தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோரும் NC 22 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். NC 22 படம் குறித்த மேலும் சில அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











