இட்லி ஆறிப்போச்சு.. ஷோவெல்லம் பட்டினிதான்.. தனுஷின் இட்லி கடையை தயாரிப்பாளர் இப்படி கலாய்க்கிறாரே
சென்னை: தனுஷின் இட்லி கடை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனத்தைத்தான் பெரும்பாலானோரிடம் பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் முதல் நாளான நேற்று மட்டும் கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய்வரை இந்தியாவில் வசூலித்திருக்கிறதாம். இன்றும் விடுமுறை தினம் என்பதால் படத்துக்கு கூட்டம் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது.
தனுஷ் கடைசியாக ஹீரோவாக நடித்த ராயன், இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. அதுவும் அவரது 50ஆவது படமான ராயன் படத்தை கலாய்த்து தள்ளிவிட்டார்கள். அடுத்ததாக வந்த NEEK படமும் சொதப்பியதால்; தனுஷ் எதற்காக படம் இயக்க வேண்டும்; ஒழுங்காக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாமே என ஆளாளுக்கு ஃப்ரீ அட்வைஸை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
கம்பேக் கொடுத்த தனுஷ்?: தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு எல்லாம் வாயால் பதிலடி கொடுப்பதைவிடவும் ஒரு வெற்றியால் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார் தனுஷ். அதன்படி இட்லி கடை படத்தை இயக்கினார். இதில் அவருடன் நித்யா மேனன், பார்த்திபன், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரகனி என பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

படம் சூப்பர் ஹிட்: நேற்று இப்படமானது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. எப்படியாவது இந்தப் படத்தை அவர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. அந்த வேண்டுதலோடு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஆத்ம திருப்தி கிடைத்திருக்கிறது. படம் சூப்பராக இருக்கிறது என்றும்; தனுஷிடமிருந்து அட்டகாசமான ஒரு ஃபீல் குட் படம் வந்திருப்பதாகவும் புகழ்கிறார்கள்.
வசூலிலும் சூப்பர்: ஒவ்வொரு சீன், டயலாக் என அத்தனையிலும் தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை உணர்த்திவிட்டார் என்று கொண்டாடுகிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் படத்துக்கு அமோக ரெஸ்பான்ஸ். நேற்று வெளியான முதல் நாள் மட்டும் இந்தியாவில் 10.50 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படம் பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பாலாஜி பிரபு விமர்சனம்: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், "பொதுவாக ஒரு படம் நன்றாக இல்லை என்றால் இயக்குநர் வைத்து செய்துவிட்டார் என்று சொல்வார்கள். இங்கே தனுஷே இயக்கம் என்பதால் அவரே அவரை வைத்து செய்திருக்கிறார். தனுஷ் இந்தப் படத்தை சொல்வதை பார்த்தால் யாரும் வெளிநாடே போகக்கூடாதா?.. அப்படி வெளிநாடு சென்றுவிட்டு வந்தால் தாய் மறந்துவிடுவாரா?.. அப்பா செய்யும் தொழிலைத்தான் செய்ய வேண்டுமா? யாருமே அந்த கிராமத்தை விட்டு நகரக்கூடாதா?
யார்தான் மாவு ஆட்டவில்லை: கதை நடக்கும் ஊரில் 40 பேர்கூட இல்லை. ஆனால் எஞ்சாமி பாடலுக்கு 4,000 பேர் ஆடுகிறார்கள். கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் இப்போதெல்லாம் இந்தாப்பா என்று கொடுத்தால் நடித்துவிடுகிறார். அந்தப் படத்தில் வரும் கல்லில் சமுத்திரகனியை தவிர்த்து எல்லோருமே மாவு ஆட்டுகிறார்கள். மாவு ஆட்டாத ஆளே இல்லை. இட்லி ஆறி போய்விட்டது. ஷோவெல்லாம் பட்டினி கிடக்குது. படம் எப்படி இருக்கிறது என்று என்னை கேட்டால் இந்த இரண்டு இட்லிக்கு எதற்காக நான்கு வகை சட்னி" என்றார்.


Click it and Unblock the Notifications











