தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தும் நடிகர்களின் பெயர்களை வெளியிடுவேன்...எச்சரித்த கே.ராஜன்
சென்னை : தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தும் நடிகர்களின் பெயர்களை வெளியிடுவேன் என கம்பெனி பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் எச்சரித்துள்ளார். தயாரிப்பாளரிடம் சம்பள பாக்கியை கேட்டு நெருக்கடி கொடுக்கும் நடிகரின் பெயரை அடுத்த மேடையில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் 'கம்பெனி'. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

எந்த நேரமும் இச்சு...இச்சு தானா
நிகழ்ச்சியில் பேசிய கே.ராஜன் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், "பாடல் காட்சியில் நாயகன், நாயகி முத்தம் கொடுப்பது போல் நெருங்கி வருகிறார்கள். ஆனால் கொடுக்கவில்லை. அப்படி தான் இருக்க வேண்டும். ஆனால், சில ஹீரோக்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் வேண்டும் தான். ஆனால் அளவாக இருக்க வேண்டும். எந்த நேரமும் இச்சி....இச்சி....என்று கொடுக்க கூடாது. பிறகு போடா எச்ச பயலே, என்று சொல்லி விடுவார்கள். இதெல்லாம் சினிமாவுக்கு தேவை தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நம் பண்பாடு, கலாச்சாரம் கெடாமல் அளவாக வைக்க வேண்டும்.

கலாச்சாரம் கெடாமல் படம் எடுக்கணும்
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி காலங்களில் இதுபோன்ற காட்சிகள் வைத்தார்கள். ஆனால், நெருங்கி வரும்போது, இரண்டு கிளிகளை காட்டிவார்கள் அல்லது மலர்கள் மோதிக்கொள்வது போல் காட்டுவார்கள். ஏன், பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜ் படங்களில் இல்லாததா. ஆனால் அதை அவர் நகைச்சுவையாக செய்வார். அதனால் அதில் எந்த பாதிப்பும் இருக்காது. அதுபோல தான் வைக்க வேண்டும். என் தங்கை, தாய், பாட்டி, அக்கா என அனைவரும் பார்க்க வேண்டும். கலாச்சாரம் கெடாமல் படம் எடுக்க வேண்டும். அப்படி தான் இவர்கள் எடுத்திருக்கிறார்கள். அதற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.

தயாரிப்பாளருக்கு யாரும் உதவுவதில்லை
தயாரிப்பாளர் முருகேசன் பட்டபாட்டை அப்படியே சொன்னாரு. தமிழ் செல்வன் கஷ்டப்பட்டதை சொன்னாரு. அவர் சொன்னாரு, டேபிள் தொடைத்து, வண்டி கடை வைத்து இப்போது 28 கிளைகள் வைத்திருப்பதாக சொன்னாரு. உண்மை தான் தம்பி, ஆனால், இங்கு அதுபோல் வளர முடியாது. தயாரிப்பாளரை க்ளோஸ் பண்ணிட்ராங்க தம்பி. உங்கள போல் வளர்ந்து வர முடியாது. நீங்க 28 கடை இருக்குனு சொல்லும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், என் தயாரிப்பாளர் 28 படம் எடுத்தேன் என்று சொல்ல சொல்லுங்க முடியாது. பாரதிராஜா காலத்தில் இருந்தது, அப்போது உதவி செய்தார்கள். ஆனால், இப்போது யாரும் தயாரிப்பாளருக்கு உதவி செய்வதில்லை.

தயாரிப்பாளருக்கு தான் நஷ்டம்
பாரதிராஜா சாரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். கடந்த 10 வருடங்களாக சுமார் 1000 படங்கள் எடுத்தார்களே அந்த தயாரிப்பாளர்கள் இப்போது எங்கே, ஏன் அவர்கள் படம் எடுக்கவில்லை? அனைவரும் நலிந்து போய்விட்டார்கள். சினிமா நல்ல தொழில், ஆனால் யாரும் உதவி செய்வதில்லை. குறிப்பாக நடிகர்கள் எந்தவித உதவியும் செய்வதில்லை. டப்பிங் முன்பாக முழு சம்பளத்தையும் கேட்டு நிற்கிறார்கள், அப்போது என் தயாரிப்பாளர் என்ன செய்வார், எங்கு போவார். நீங்க சம்பாதித்து வீடு வாங்கிட்டு போகணும், என் தயாரிப்பாளர் வீட்டை வித்துட்டு ரோட்டுக்கு வரணுமா. ஒரு மளிகை கடை வைத்து நஷ்டம் அடைந்தால் கூட, அதில் போட்ட தொகையில் 70 சதவீதம் திரும்ப வருகிறது. ஆனால், என் தயாரிப்பாளர் செய்யும் முதலீடுக்கு என்ன வருகிறது. முழுவதுமாக நஷ்டம் தான் அடைகிறார்.

அடுத்த மேடையில் வெளியிடுவேன்
டிவியில் இருந்து ஒரு நடிகர் சினிமாவுக்கு நடிக்க வந்திருக்கிறார். அவருக்கு ஒரு தயாரிப்பாளர் 12 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்திருக்கிறார். அதற்கு அந்த நடிகர் படப்பிடிப்பு துவங்கும் முன்பு 8 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிந்த பிறகு மீதியுள்ள 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படப்பிடிப்பு முடிய நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அந்த நடிகர் பாக்கி தொகையை கொடுத்தால் தான் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார். இது நியாயமா. அந்த நடிகர் யார் என்பதை அடுத்த மேடையில் நிச்சயம் சொல்வேன். நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன், அனைவரையும் தட்டி கேட்பேன், என்னை யாராலும் தடுக்க முடியாது. அப்படி இங்கு பேசுவதை தடுத்தால், ரோட்டில் மீட்டிங் போட்டு பேசுவேன், இனி இவர்களை விடுவதாக இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











