ஜென்டில்மேன் 2 ஹீரோவை அறிமுகப்படுத்திய கே.டி. குஞ்சுமோன்... யார் இந்த சேதன் சீனு?
சென்னை: 1993ல் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
ஜென்டில்மேன் படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் கேடி குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.
இப்போது ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க கேடி குஞ்சுமோன் ரெடியாகவுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் அறிமுகம்
1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது, அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஷங்கர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தை கேடி குஞ்சுமோன் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருந்தார். ஜென்டில்மேன் திரைப்படம் வெற்றிப்பெற்றாலும் கல்வியில் இடஒதுக்கீடு குறித்த தவறான கருத்துகள் இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

ஜென்டில்மேன் 2
இந்நிலையில், ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க கேடி குஞ்சுமோன் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இசையமைத்துள்ள மரகதமணி இசையமைக்கிறார். அதேபோல், தோட்டா தரணியும் அவரது மகள் ரோகிணி தோட்டா தரணியும் கலை இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.

ஹீரோ அறிமுகம்
ஜென்டில்மேன் 2 படத்தின் நாயகியாக புதுமுக நடிகை நயன்தாரா நடிப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது ஹீரோ யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் இளம் ஹீரோவாக கலக்கிவரும் சேதன் சீனு, ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோவாகிறார். சேதன் ஹீரோவாக நடித்துள்ள இன்னும் பெயர் சூட்டப்படாத பான் இந்தியா படம், வித்யார்த்தி என்ற தெலுங்குப் படம் ஆகியவை விரைவில் வெளியாகிறது. அதேபோல், தமிழிலும் சில படங்களில் நடித்து வருகிறார் சேதன் சீனு..

எதற்கும் தயார்…!
இந்நிலையில், ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோவாக நடிப்பது குறித்து சேதன் சீனு கருத்து தெரிவித்துள்ளார். அதில், "குஞ்சுமோன் சார் மாதிரி ஒரு லெஜண்ட் தயாரிப்பாளர் படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன். அதுவும் தமிழ் சினிமாவின் முத்திரையை மாற்றி அமைத்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. இந்தப் படத்தின் ஆடிஷனுக்காக தாடியை ட்ரிம் செய்துவிட்டு வர சொன்னார் கேடி குஞ்சுமோன். அவர் சொல்லை மதித்து தாடியயை ட்ரிம் செய்தேன். இன்று நான்தான் ஹீரோ என்ற அறிவிப்பை பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். இந்தப் படத்துக்காக தாடி மட்டுமல்ல மொட்டை அடிக்க சொன்னால் அதையும் செய்வேன்" என்றார்.

விரைவில் ஷூட்டிங்
ஜென்டில்மேன் 2 படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்திய சினிமாவில் பிரபலங்களான நடிகர் நடிகைகள் தொழி்ல்நுட்ப கலைஞ்ர்கள் இந்த மெகா படத்தில் பணியாற்ற உள்ளதால், இப்போதே எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்போது ஹீரோவையும் அறிமுகப்படுத்திவிட்ட கேடி குஞ்சுமோன், விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











