முதல்வருக்கு உருக்கமான கடிதம்... ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளித்த கலைப்புலி தாணு
சென்னை : தனது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்தவர் கலைப்புலி எஸ்.தாணு. சக்தி கண்ணன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த யார் என்ற படம் தான் தாணு முதலில் தயாரித்த படம்.
அதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் தாணு. லேட்டஸ்ட்டாக தனுஷ் நடித்த கர்ணன் படத்தை தயாரித்தார். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து 2 படங்களை தயாரிக்க போகிறார் தாணு.

முதல்வருக்கு தாணு கடிதம்
இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மிக உருக்கமான கடிதம் ஒன்றை தாணு எழுதி உள்ளார். அதில் அவர், இந்த இக்கட்டான, நெருக்கடியான சூழலில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல உதவிகளை செய்ய முயற்சிகள் எடுத்து வரும் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சம் நிவாரண நிதி
அத்துடன் தனது சிறிய பங்களிப்பாக, தமிழக மக்களுக்கு உதவ ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் இணைத்து அனுப்பி உள்ளார். தமிழக முதல்வரின் பணிக்கு தாணு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

தேசம் திரும்பி பார்க்கிறது
தாணு தனது கடிதத்தில், பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓய்விலா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
Recommended Video

முதல்வருக்கு புகழாரம்
தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்புநிலை மக்களுக்காக நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும், சந்ததிகளையும் தேகபலம், மனோபலத்துடன் நீண்ட ஆயுளை அள்ளித் தரும்.

சிறிய பங்களிப்பு
உங்கள் தர்ம சிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக ரூ.10 லட்சத்திற்கு வரவோலையை இணைத்துள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு பட தயாரிப்பில் தாணு
கர்ணன் படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெங்கடேஷ், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள நாரப்பா படத்தையும் தற்போது தாணு தான் தயாரித்து வருகிறார். அதைத் தொடர்ந்து நந்தமுரி பாலகிருஷ்ணா - ராம் சரண் இணையும் படத்தையும் தாணு தயாரிக்க உள்ளார். இந்த படத்தை ஹரி டைரக்ட் செய்ய உள்ளார்.


Click it and Unblock the Notifications











