பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை.. நான் கூப்பிட தான் செய்வேன்.. அருவருப்பாக பேசிய RK அன்புசெல்வன்!
சென்னை: பாலியல் தொல்லை என்பது வீட்டில் தொடங்கி வேலை செய்யும் இடங்கள் வரை நடைபெற்று வருகிறது என்ற அவலச் செய்திகளை நாள்தோறும் கடந்து கொண்டுதான் இருக்கிறோம். இதில் திரைத்துறையில் தான் பெண்களுக்கு அதிகப்படியான பாலியல் தொல்லைகள் என்பது நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாடு சிறு பட முதலீட்டாளர்கள் சங்கத் தலைவர் RK அன்புசெல்வன் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து மிகவும் அருவருப்பாக பேசியது பெரும் பரபரப்பாக மாறி உள்ளது.
சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளதே, தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லைகள் அளிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கேள்விப்படுகிறோம். ஒருசில தயாரிப்பாளர்கள் மீது இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்கள்.

அபத்தப் பேச்சு: அதற்கு அவர் அளித்த பதில் தான் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. அதாவது, " தயாரிப்பாளர்கள் கூப்பிடத் தான் செய்வார்கள், நானும் தான் கூப்பிடுவேன், அழைத்தால் ஏன் வருகிறார்கள். வேறு தொழிலை பார்த்துக் கொள்ளலாமே? இதுதான் தொழில் என்று வரும்போது, ஒரு தயாரிப்பாளரை நோக்கி ஏன் இப்படி செய்கிறாய் என்று நான் கேள்வி எழுப்ப முடியுமா? " என்று பொறுப்பற்ற பதிலை அளித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இணையவாசிகளின் கண்டனங்கள்: இவரது இந்த பேச்சுக்கு இணையவாசிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, இவ்வளவு மோசமான சிந்தனை கொண்ட நபர்கள் எடுக்கும் படங்களில் என்ன மாதிரியான கதை அம்சங்கள் இருந்துவிடப் போகிறது? இவ்வளவு பொறுப்பற்ற பதில்களை தைரியமாக பேச கூடியவர்களுக்கு எப்படி ஒரு அமைப்பின் தலைவர் பொறுப்பு அளிக்கப்படுகிறது என்று எல்லாம் கேள்வி எழுப்புவதைப் பார்க்க முடிகிறது. திரைத்துறையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டறிய, அரசே தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும், கேரளாவில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா அவர்களின் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க பட்டதோ, அதேபோல் தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும் என்றும் இணையவாசிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











