For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடுத்து தமிழ் நாட்டைப் பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர் விஷால்?

  By Shankar
  |

  அடுத்த குறி தயாரிப்பாளர் சங்கம்தான் என சமீபத்தில் விஷால் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது தயாரிப்பாளர் சங்கத்தை கடுங்கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

  தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விஷாலைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  அந்த அறிக்கை:

  நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே...

  சமீப காலமாக உங்களது பேச்சுகள் - தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வெளியிலும் சரி - மிகுந்த சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்துள்ளது. சந்தேகங்கள் மட்டுமல்ல, ஆபத்தானவையாகவும் கூட உள்ளன.

  Producers Council blasts Vishal

  நடிகர் சங்கத்தைப் பிடித்தாயிற்று. அடுத்தது தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுவேன் என்று சமீபத்தில் நீங்கள் பேட்டி அளித்துள்ளீர்கள். மேலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளீர்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் உங்களுக்கு சில கேள்விகள்...

  நீங்கள் வெறும் நடிகர் மட்டுமல்ல... நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர். என்னென்னவோ வாக்குறுதிகளை அள்ளி வீசி, தினமும் மீடியாவின் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு, கடைசி நேர வாக்குப்பதிவின்போது நடக்காத ஒரு அடிதடியை நடந்ததாக சீன் கிரியேட் செய்து, ஓட்டுக்களைப் பெற்று ஜெயித்தவர். ஒரு அமைப்பின் வலிமையான பொறுப்பில் உள்ள நீங்கள், சினிமாவுக்கு அடிப்படையாக விளங்கும் தயாரிப்பாளர்களைப் பற்றி, அவர்களுக்கான சங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசலாமா? அந்த அதிகாரத்தை உங்களுக்குத் தந்தது யார்? தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவே இருந்தாலும், இப்படிப் பேசுவது சரிதானா?

  நடிகர் சங்க நிர்வாகம் சரியில்லை என்று பிரச்சாரம் செய்து, அந்த சங்கத்தில் போய் உட்கார்ந்துவிட்டீர்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம் சரியில்லை... அதனால் அதையும் கைப்பற்றுவேன் என்கிறீர்கள்.

  அடுத்து? தமிழ்நாட்டு நிர்வாகம் சரியில்லை. எனவே அந்த அதிகாரத்தையும் கைப்பற்றுவேன் என்று கூறுவீர்களோ? யார் கண்டது... உங்கள் நோக்கம் அதுவாகவும் கூட இருக்கலாம். அதற்காகத்தானே தேவி அறக்கட்டளை மூலம் கல்வி உதவிகள், நலிந்தவர்களுக்கான உதவிகள், ரசிகர் மன்றங்களை உசுப்பேற்றுதல் போன்றவை நடக்கிறதோ என்ற ஆழமான சந்தேகத்தைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.

  Producers Council blasts Vishal

  தமிழ்நாட்டில் உள்ள தமிழ் நடிகர் சங்கத்தை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை, ஏன் தமிழ் நாட்டையே ஆளும் ஆசை உங்களுக்கு இருக்கலாம். தப்பில்லை. ஆனால் இம்மியளவுக்காக தமிழ் உணர்வு இருக்கிறதா உங்களுக்கு?

  தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்ததை இப்போது 'சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்' என்று மாற்றியிருக்கிறீர்கள். அட, அந்த சீல் கூட 'சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்' என்றே இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.

  நீங்கள் பதவிக்கு வரும்போது என்ன கூறி வந்தீர்கள்? பல கோடி பேர் மதிக்கும், போற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன கூறினார் உங்களிடம்? 12 கோடி மக்களின் ஏகப் பிரதிநிதி தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா என்ன விரும்பினார்?

  நடிகர் சங்கத்தில் யார் பதவிக்கு வந்தாலும் முதல்வேலையாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை 'தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்' என்று மாற்ற வேண்டும் என்றுதானே கூறினார்கள்.

  நீங்கள் செய்திருப்பதென்ன? 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற தமிழ்ப் பெயர் கூட இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தீர்மானித்து அதை 'சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்' என்று மாற்றியிருக்கிறீர்களே... இது எத்தனை பெரிய தமிழர் விரோதப் போக்கு... அயோக்கியத்தனம்!

  திருட்டு வீடியோவை நீங்களே ஒழித்துவிடுவேன் என்று முழங்கி களமிறங்கினீர்களே... அது ஒவ்வொரு முறையும் உங்கள் படங்கள் ரிலீசாகும் முன்பு, பின்பு மட்டும்தானா? மற்றவர்களின் படங்களின் திருட்டு வீடியோ எங்கு ஓடினாலும் கவலையில்லையா?

  சரி, நீங்க திருட்டு வீடியோவைத் தடுக்க வேணாம்... அதை தயாரிப்பாளர் சங்கம் பார்த்துக் கொள்ளும். ஆனால் அப்படி தயாரிப்பாளர் சங்கம் உருப்படியாக மேற்கொண்ட திருட்டு வீடியோ ஒழிப்புக்கு உங்கள் பங்களிப்பு என்ன?

  பல லட்சம் செலவழித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு எஸ் தாணு திருட்டு வீடியோவை ஒழிக்க உயர்நீதிமன்ற ஆணைப் பெற்று, டெல்லி வரை போனார். அவர் தனியாகத்தான் போராட வேண்டியிருந்தது. கேட்டால் அது அவர் படம் என்று ஒதுங்கினீர்கள். அவரோடு கைகோர்த்து அத்தனைப் பேரும் களமிறங்கியிருந்தால் இன்று திருட்டு வீடியோ திருடர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியிருப்பார்கள். ஆனால் உங்கள் குறி, தயாரிப்பாளர் சங்கப் பதவிதானே!

  எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது விஷால். மீடியா வெளிச்சம் நடிகர்கள் கண்களை மறைத்ததால் நீங்கள் நடிகர் சங்கத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம்... உங்கள் கபடத்தை வேரறுத்துவிடும். எச்சரிக்கிறேன்.

  தயாரிப்பாளர் சங்கத்தை குறை சொல்ற நீங்க தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையில் பயனுள்ளவராய் இருந்திருக்கிறீர்கள்?

  சாடிலைட் ரைட்ஸ் ரூ 10 கோடி போன காலகட்டத்தில் நீங்கள் 7 கோடி சம்பளம் கேட்டீர்கள். ஆனால் இப்போது... எந்தப் படத்துக்கு சாட்டிலைட் பிஸினஸ் ஆகிறது? 2 கோடி, 3 கோடி என்கிறார்கள். ஆனால் நீங்களோ இன்னும் அதே 7 கோடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

  பாலிவுட்டில் இப்போது ஹீரோக்கள் பர்சன்டேஜ் அடிப்படையில் படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது தயாரிப்பாளரின் லாப நஷ்டத்தில் பங்கேற்க வந்துவிட்டார்கள். நீங்களும் இதற்குத் தயாரா?

  படம் ஹிட்டடித்தாலும் ப்ளாப் ஆனாலும் உங்களுக்குப் படம் கிடைத்துவிடுகிறது. ஆனால் தயாரிப்பாளர் நிலை, அதோ கதிதானே.

  வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள். இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் தமிழ் ரசிகர்களும், தமிழக மக்களும். தமிழக அரசு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளது!

  -இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சுரேஷ் காமாட்சி.

  English summary
  Producer Suresh Kamatchi has blasted actor Vishal for his comments against Tamil Film Producers Council
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X