For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வரவுக்குக் குறைவைக்காத சிவாஜியின் படங்கள் - கவரிமானை முன்வைத்து...!

  By Magudeswaran G
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  புகழ்மிகுந்தும் உடுமதிப்பு வலிமையாயும் இருந்த நேரத்தில் மனைவியை மாற்றானுடன் மஞ்சத்தில் காணும் வேடத்தில் நடிப்பதற்குத் தனித்துணிச்சல் வேண்டும். இன்றைக்குள்ள நடிகர்கள் தம் வாய்ப்புக்குரிய வேடத்தில் இறங்கி வந்து நடிக்கிறார்கள்தாம். ஆனால், நாற்பதாண்டுகளுக்கு முன்பு புகழ்க்கொடுமுடியில் விளங்கியவர், தமக்கென்று பல்லாயிரக்கணக்கான சுவைஞர்களைக் கொண்டிருந்தவர் அத்தகைய வேடத்தில் நடிப்பதற்கு இசைந்தது பாராட்டத்தக்கதுதான். 'கவரிமான்’ திரைப்படத்திற்காகச் சிவாஜி கணேசன் ஏற்று நடித்த தியாகு என்னும் வேடம் அத்தகையதுதான்.

  profit making films of sivaji ganesan

  தம்முடைய பெங்களூரு நண்பர் இராஜண்ணா என்பவரின் விருப்பப்படி பெரிய நடிகரை வைத்து பெரிய படம் எடுக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட படம் 'கவரிமான்’ என்று பஞ்சு அருணாசலம் கூறுகிறார். அன்னக்கிளி வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக உடுமதிப்புடைய கலைஞர்களைப் பயன்படுத்தியவரான பஞ்சு அருணாசலம் சிவாஜி கணேசனை நாடுவதற்கு அப்படம் பயன்பட்டது. அவருடைய கதைகளுக்குப் பெரிய நடிகர்கள் வாய்த்தால் அவர்களைப் பற்றிய மக்கள் மனப்பதிவுகளோடு சற்றே விளையாடிப் பார்க்கும் காட்சிகளை அமைப்பார். அதுவரை முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக வலம்வந்திருந்த ஜெய்சங்கரை முரட்டுக் காளையில் தீங்கனாக நடிக்க வைத்தது அம்முறையால்தான். அடிதடிப் படங்களால் இரஜினிகாந்தின் சந்தை மதிப்பு ஏறு வரிசையில் அமைந்தபோது ’எங்கேயோ கேட்ட குரல்’ என்ற திரைப்படத்தில் அமைதியானவராக நடிக்க வைத்ததும் அவ்வகையால்தான். அதே வழியில் கவரிமான் திரைப்படத்தில் சிவாஜிக்குத் தரப்பட்டதும் அவருடைய உடுமதிப்போடும் மக்களின் உளப்பதிவோடும் விளையாடும் வேடம்தான்.

  அரசின் நிதித்துறைச் செயலாளர் என்ற உயர்பொறுப்பில் இருக்கும் தியாகராஜனின் குடும்பம் மிகப்பெரிது. தந்தையாரும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர். தாயார் புகழ்பெற்ற மேடைப்பாடகியார். தமையனார் பெரிய வழக்குரைஞர். தியாகராஜனின் மனைவி கலைச்செயல் வல்லவர். தம்பியும் சிறந்த விளையாட்டு வீரன். அடிக்கடி வெளியூர்ச் செலவு மேற்கொள்ள நேர்கிறது தியாகராஜனுக்கு.

  தியாகராஜனின் மனைவிக்கு மதுவிருந்தொன்றில் குடிப்பழக்கம் தொற்றிவிடுகிறது. அக்குடியைப் புகட்டியவன் அவளை வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுச் செல்கிறான். தியாகராஜன் வெளியூர் சென்றிருக்கையில் அவன் மனைவி மாற்றானுடன் வீட்டிலேயே மதுவருந்தி மஞ்சம் பயில்கிறாள். எதிர்பாரா வகையில் பயணத்திட்டம் வெட்டாகி வீடு திரும்பும் தியாகராஜன் தன் மனைவியை மாற்றானுடன் கலைந்த கோலத்தில் காண்கிறான். காட்சியின் அந்த வாய்ப்பில் சிவாஜி கணேசனை முப்பது நொடிகளுக்கு நடிக்கவிடுகிறார்கள். நடித்து முடித்ததும் கண்ணாடிப் புட்டியால் மனைவியின் தலையிலடித்து அவளைக் கொன்றுவிடுகிறான். அந்நேரத்தில் அறைக்கு வரும் மகள் உமா கொலையைப் பார்த்துவிடுகிறாள். காணாததைக் கண்டதால் அவளுக்கு வலிப்பு வந்துவிடுகிறது. தியாகு சிறைக்குச் சென்றுவிடுகிறான். வழக்குரைஞனாகிய தமையன் தம்மால் காப்பாற்ற முடியும் என்று வேண்டிக் கேட்ட பிறகும் நடந்தவற்றைக் கூறாமல் சிறை ஏகுகிறான் தியாகு. பெயர்பெற்ற குடும்பத்தில் நடந்த இக்கொடுஞ்செயல் அனைவரையும் தலைகுனிய வைக்கிறது.

  சிறைமீண்ட தியாகு தன் மகளைக் காண வருகிறான். மகள் உமாவோ தந்தையை முற்றாக வெறுக்கிறாள். கொலையொறுப்புக்கு ஆளான தியாகினை அவனுடைய குடும்பமும் ஏற்கவில்லை. தன் பள்ளித் தோழனின் வீட்டில் வாடகைக்குத் தங்கிக்கொள்கிறான். அங்கே தங்கியிருக்கும் கல்லூரி மாணவன் ஒருவன் தன் அறைக்குத் தோழிகளை அழைத்து வந்து துயில்கிறான். அதனைத் தட்டிக்கேட்டும் தவிர்க்கவில்லை. அவன் தியாகின் மகள் உமாவையும் தன் வலைக்குள் வீழ்த்துகிறான். இது தியாகுக்குத் தெரிந்து விட, மகளை மன்றாடி வேண்டுகிறான். அவளோ “நீ எதை வேண்டாவென்கிறாயோ அதனையே செய்ய வேண்டும் என்ற வேட்கை மிகுகிறது” என்கிறாள். மது விருந்துக்குச் செல்லும் உமா அவ்வஞ்சகனின் வலைக்குள் விழுந்து படுக்கையறைக்குள் தள்ளிச் செல்லப்படுகிறாள். அங்கே அவனுடைய முயற்சியின் விளிம்பில் விழிப்புற்று விடுபட முயன்றும் முடியாமல் போக அவனைக் கொன்றுவிடுகிறாள். மகளைப் பின்தொடர்ந்து வரும் தியாகு கொலைப்பொருளைத் தான் பெற்றுக்கொண்டு பழியேற்கிறான். “மானத்திற்குக் கேடு வந்தா ஒன்னு உயிரை விட்டுடணும்… இல்லன்னா உயிரை எடுத்துடணும்…” என்று கூறுகிறான். அக்கூற்றில் உமாவுக்குத் தன் தாய் கொல்லப்பட்டதன் காரணம் விளங்குகிறது. மகள் தந்தையின் உளக்கிடக்கையை உணர்கிறாள். தியாகு சிறைக்குச் செல்கிறான்.

  எழுபதுகளின் நடுப்பகுதி தொடங்கி முதல் மரியாதைக்கு முந்திய காலம்வரை சிவாஜி கணேசன் ஏற்று நடித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் தேர்ந்த எடுத்துக்காட்டு கவரிமான் திரைப்படம். அப்படங்களில் சிவாஜின் தம்பியாகவோ மகனாகவோ மகளாகவோ ஓர் இளைய நடிகர் இடம்பெறுவது கட்டாயம். அவர் சிவாஜி ஏற்று நடிக்கும் பாத்திரத்தோடு கடுமையாக மோதுவார். சிவாஜியின் அகவைக்கேற்ற கதைகளை எழுதுகிறோம் என்று அவ்வாறு ஆக்கினர். திரிசூலம் திரைப்படத்தில் சிவாஜியின் மகனாக சிவாஜியே நடித்தார். சிவாஜியோடு நாற்பது படங்களுக்கும் மேலாக பிரபு நடித்திருக்கிறார். எப்போதும் தந்தையாரோடு இணைந்து நடித்துக்கொண்டிருந்த பிரபுக்குத் தனித்து நடிக்கும் வாய்ப்பினை வழங்கியவர் கங்கை அமரன். கோழி கூவுது என்னும் திரைப்படத்தில்தான் பிரபு பிரிந்தார். தாம் சிவாஜிக்குப் பத்தொன்பது படங்களில் சோடியாக நடித்திருப்பதாக ஸ்ரீபிரியா கூறியபோது வியப்பாக இருந்தது. பாரதிராஜா, மகேந்திரன், பாக்கியராஜ் என்று எழுபதுகளின் பிற்பாதியில் தமிழ்த் திரைக்கதைகள் எளிமைக்கும் இயல்புக்கும் நகர்ந்தபோது அந்தப் போக்கிற்கேற்ப நம் இயக்குநர்கள் சிவாஜி கணேசனைப் பயன்படுத்திக்கொள்ளவே இல்லை என்று கூறலாம். 'பசி’ துரை இயக்கிய 'துணை’ என்ற திரைப்படத்தில்தான் அவர்க்கு இயற்கையான வேடம் வாய்த்தது என்று நினைக்கிறேன். பன்னிறப்படங்கள் இயல்பாகிப் போன பிறகு வெளிவந்த சிவாஜியின் படங்கள் யாவும் நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன. இழப்பு என்பது வருமானத்தில் இழப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த ஒற்றைக் காரணத்திற்காகவே சிவாஜி படங்களின் வாய்பாட்டினை மாற்றாமல் வைத்திருந்தனர் என்று கருதலாம். தோல்விப் படமாக அறியப்பட்டிருந்தாலும் 'கவரிமான்’ திரைப்படத்தால் தமக்கு நல்ல வருமானம் கிடைத்தது என்றுதான் பஞ்சு அருணாசலமும் கூறுகிறார். சிவாஜியின் எந்தப் படம் வந்தாலும் பெரிய நகரத்திலிருந்து உள்ளூர்க் கொட்டகை வரைக்கும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதையும் மறக்க முடியாது.

  English summary
  profit making films of sivaji ganesan

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more