»   »  நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட்... பெருகும் எதிர்ப்பு!

நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட்... பெருகும் எதிர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி நடத்தவிருக்கும் நட்சத்திர கிரிகெட் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஏகத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகர்கள் ஒரு பொது நோக்கத்துக்காக இப்படி நிதி திரட்டினால் ஏற்கலாம்.. பார்க்கலாம். இவர்கள் நடத்தும் சங்கத்தின் நிதித் தேவைக்காகவும் மக்களிடம்தான் கையந்துவதா என கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

Public wrath against Nadigar Sangam's Star cricket

பொதுமக்கள் பாவிக்கும் சமூக வலைத் தளங்களில் ஏராளமானோர் இந்த நட்சத்திரக் கிரிக்கெட் நிதி திரட்டை கடுமையாகச் சாடியுள்ளனர்.

'சென்னைப் பெருவெள்ளம் அல்லது வேறு ஏதாவது இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. நடிகர் சங்கம் என்பது இவர்கள் வீட்டுச் சமாச்சாரம் போன்றது. சங்கத்துக்கு நிதி வேண்டும் என்றால், அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்துதான் தரவேண்டும். அதை விட்டுவிட்டு கலை நிகழ்ச்சி, கிரிக்கெட் என்று கூறி மக்களின் பாக்கெட்டில் கை வைக்கக் கூடாது. இவர்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளமே மக்கள் பணம்தானே' என்று பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

'மக்களிடம் பணம் வசூலித்து நடிகர் சங்கக் கட்டடத்தை கட்டுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்தக் கட்டடத்தில் சாமானிய மக்கள் நுழைய அனுமதிப்பார்களா? அங்கு அமையும் திருமண மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தருவார்களா? அங்கு அமையவிருக்கும் பெரிய அரங்கை பொதுமக்கள் நிகழ்ச்சிக்குத் தருவார்களா? தரமாட்டார்கள். சங்கத்தின் உறுப்பினர்களுக்குத்தான் என ஏற்கெனவே அறிவித்துள்ளனர். எனவே பொதுமக்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்துக்காக, அவர்களிடம் பண வசூல் செய்வது பெரும் துரோகம்' என்கிறார் ஒரு மூத்த சினிமா பத்திரிகையாளர்.

'நடிகர்கள் திரைக்குப் பின்னால் இருக்கும் வரைதான் மரியாதை. அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் இருக்கும். ரஜினியும் அஜீத்தும் இதை உணர்ந்தவர்கள். அதனால்தான் விளம்பரங்கள், நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஆனால் இவர்களோ சோப்பு, சீப்பு விளம்பரம் தொடங்கி, இந்த மாதிரி நட்சத்திரக் கிரிக்கெட் வரை அன்றாடம் பொதுவெளியில் மக்கள் முன் வந்தால், இவர்களை சினிமாவில் பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு எப்படி வரும்? ஏற்கெனவே தியேட்டர்கள் காத்தாடுகின்றன. எங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள்தான் இதனால் பாதிப்புக்குள்ளாகிறோம். குறிப்பாக நடிகர் சங்கக் கட்டடத்துக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை ஏற்க முடியாது,' என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

நடிகர்கள் தாராளமாக கிரிக்கெட் விளையாடட்டும். ஆனால் அதற்காக மக்களிடம் அவர்கள் பணம் வாங்கக் கூடாது. அதை இலவசமாக பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளுக்கு விற்று வேண்டுமானால் பணம் திரட்டிக் கொள்ளலாம். அதுவும் மக்கள் பணம்தான் என்றாலும் நேரடியாக பாதிப்பதில்லை என்பதால் இப்படிச் செய்யட்டும்! - இது இன்னொரு தரப்பினரின் கருத்து.

"மக்களுக்கு தேவையானது பொழுதுபோக்கு. அதற்கென ஒரு துறை இருக்கிறது. அது சினிமா. அதில் பொழுதுபோக்கு அம்சங்களை கொடுக்க நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சினிமா துறையில் இருக்கும் அனைவரும் இணைந்து ஒரு படமெடுக்கிறார்கள். மக்களுக்கு பொழுது போக்கிற்காக சென்று பார்க்கிறார்கள். அதற்கான கட்டணமாக டிக்கெட்டை வாங்க்குகிறார்கள். கிவ் அண்ட் டேக் பாலிசிதான். யாரும் சேவை செய்ய வில்லை. எனவே இவர்கள் தங்கள் சங்கத் தேவைக்காகவெல்லாம் மக்களிடம் வரக்கூடாது.

விவசாயிகள் தங்களது வறுமையைப் போக்க, அனைவரும் ஒன்று இணைந்து ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம். ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டம் இருக்கும். இதற்கு நட்சத்திரங்கள் வந்து டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டுமென்றால் அது சாத்தியமா? இவர்கள்தான் ஏற்பார்களா?" - இது சினிமா விமர்சகர் ரவிஷங்கரின் கேள்வி.

எதற்கெடுத்தாலும் பண வசூல் என்று மக்கள் முன் வந்து நிற்கும் திரைக் கலைஞர்கள் அத்தனை பேரும் யோசிக்க வேண்டிய கேள்வி அல்லவா?

ஆனால் இதற்கெல்லாம் நடிகர் சங்கத்தின் ரியாக்ஷன் வேறு மாதிரி இருக்கிறது. அதை இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் அடுத்த கட்டுரையில் பாருங்கள்!

English summary
Nadigar Sangam's proposed Star Cricket is getting strong objection from various section of people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil