»   »  கலைஞர் டிவிக்கு தொடர்கள் தயாரிப்பதைசன் டிவியால் தடுக்க முடியாது - ராதிகா

கலைஞர் டிவிக்கு தொடர்கள் தயாரிப்பதைசன் டிவியால் தடுக்க முடியாது - ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னைகலைஞர் டிவிக்கு எனது ராடன் நிறுவனம் தொடர்கள், நிகழ்ச்சிகள் தயாரித்துத் தருவதை சன் டிவியால் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்று நடிகை ராதிகா கூறியுள்ளார்.

திமுக சார்பில் கலைஞர் டிவி தொடங்கப்படவுள்ளதாக செய்தி வெளியான அடுத்த நிமிடமே முதல்வர் கருணாநிதியின் வீட்டில் இருந்தார் நடிகை ராதிகா. இது பெரும் வியப்பலைகளை ஏற்படுத்தியது.

மாறன் சகோதரர்களுக்கும், நடிகர் சரத்குமாருக்கும் ஏற்பட்ட சச்சரவுகள், ராதிகாவுக்கு, மாறன் சகோதரர்கள் கொடுத்த நெருக்கடி ஆகியவை தமிழகம் அறிந்த பழைய செய்தி. இதன் காரணமாகவே சரத்குமார் திமுகவை விட்டு விலகினார். கூடவே ராதிகாவும் சரத்துடன் சென்றார்.

அதன் பின்னரும் கூட சன் டிவியில் ராதிகாவின் தொடர்கள், நிகழ்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. இந்த நிலையில்தான் வந்தது கலைஞர் டிவி அறிவிப்பு. உடனடியாக கருணாநிதியை சந்தித்துப் பேசினார் ராதிகா.

இந்த சந்திப்பின்போது கலைஞர் டிவி குறித்துப் பேசப்பட்டதாகவும், முதல்வர் விரும்பினால், கலைஞர் டிவிக்காக தொடர்கள் தயாரித்துக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் ராதிகா கூறியுள்ளார்.

இதுகுறித்து ராதிகாவைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது ராதிகா, ஆம், நான் சொன்னது உண்மைதான். முதல்வர் என்னைக் கேட்டுக் கொண்டால் நிச்சயம் கலைஞர் டிவிக்கு தொடர்கள் தயாரித்துக் கொடுப்பேன். அதற்குத் தயாராக உள்ளேன்.

ராடன் நிறுவனம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம். எந்த சேனலுக்கும் நிகழ்ச்சிகள், தொடர்களைத் தயாரித்துக் கொடுக்கும் உரிமை ராடனுக்கு உள்ளது.

விரைவில் கலாநிதி மாறனை நான் சந்திக்கவுள்ளேன். அப்போது இதுகுறித்து நான் தெளிவாக விளக்குவேன் என்றார் ராதிகா.

சன் குழுமத்திலிருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

இப்போது இதுமாதிரியான கேள்விக்கு அவசியம் இல்லை. எங்களுக்கும், சன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.

எங்களை வெளியேறுமாறு அவர்கள் கூறினால், அப்போது அதுகுறித்து நான் முடிவெடுப்பேன். அதேசமயம், எங்களது நிறுவனங்களின் செயல்பாடுகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை என்றார் ராதிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil