நாயகன் படத்தில் நடிக்க வேண்டிய ரகுவரன்.. கடைசி நேரத்தில் மிஸ் ஆக என்ன காரணம்?
சென்னை: கமல்ஹாசன் உடன் மறைந்த நடிகர் ரகுவரன் ஒருமுறை கூட நடிக்கவில்லை. அதற்கான காரணம் என ஏகப்பட்ட கதைகள் கோடம்பாக்கத்தில் பல காலங்களாக பரவி வருகின்றன.
ஆனால், உண்மையான காரணம் என்ன? என்பதும் நாயகன் படத்தில் நடிக்க வேண்டிய ரகுவரன் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது ஏன் என்பது குறித்தும் ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகிணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்ர நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களை வெளிப்படுத்திய ரகுவரனுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இன்னமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு ராட்சசன்
ஆறடி உயரத்துக்கு வளர்ந்த நடிப்பு ராட்சசன் தான் ரகுவரன். பாட்ஷா படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரத்தை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். தனுஷுக்கு அப்பாவாக யாரடி நீ மோகினி படத்தில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிவாஜி படத்தில் டாக்டராக கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

ரஜினியுடன் பல படங்கள்
சிவா, ஊர்க்காவலன், மிஸ்டர் பாரத், மனிதன், முத்து, பாட்ஷா, அருணாச்சலம் மற்றும் சிவாஜி என ஏகப்பட்ட படங்களில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருப்பார் நடிகர் ரகுவரன். ஆனால், ஒரு படத்தில் கூட கமல்ஹாசன் உடன் ரகுவரன் இணைந்து நடித்ததே இல்லை என்பது தான் தமிழ் சினிமாவின் ஆச்சர்யமான விஷயம்.

இருவருக்கும் ஆகாது
கமல்ஹாசனை போலவே ரகுவரனும் பர்ஃபக்ஷன் பார்த்து நடிப்பவர் என்றும் ரகுவரன் உடன் இணைந்து நடித்தால் கமல் பெயர் டல் அடித்து விடும் அதனால் தான் ரகுவரன் இணைந்து நடிக்கவில்லை என ஏகப்பட்ட கட்டுக் கதைகள் சினிமா வட்டாரத்திலேயே பேசப்பட்டு வந்தன. ஆனால், அதெல்லாம் கிடையாது என்றும் நாயகன் படத்திலேயே ரகுவரன் நடிக்க வேண்டியது என ரகுவரனின் மனைவி ரோகிணி பேட்டி ஒன்றில் தெரிவித்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நாயகன் படத்தில் ரகுவரன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் நடிகர் ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். ஆனால், அதே சமயம் இன்னொரு படத்தில் நடிப்பதற்காக நீண்ட முடியை வளர்த்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் நடிக்க விருந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நாசர் நடித்தார் எனக் கூறியுள்ளார் ரோகிணி.

வருத்தப்பட்ட ரகுவரன்
கமல்ஹாசன் உடன் கடைசி வரை நடிக்க முடியவில்லையே என நடிகர் ரகுவரனே ஒரு முறை வருத்தப்பட்டு பேசியதாகவும் ரோகிணி அந்த பேட்டியில் கூறியுள்ளார். சினிமாவில் சில சமயங்களில் சில காம்பினேஷன்கள் மிஸ் ஆவது வழக்கம் தான். ஆனால், சிறந்த நடிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்காதது ரசிகர்களையும் ரொம்பவே வருத்தமடையத்தான் செய்கிறது.

ரோகிணிக்கு வாய்ப்பு
ஆனால், கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ரோகிணிக்கு சில படங்களில் சூப்பராகவே கிடைத்தது. மகளிர் மட்டும் மற்றும் விருமாண்டி உள்ளிட்ட படங்களில் கமல் உடன் இணைந்து ரோகிணி தனது நடிப்புத் திறமையை வேறலெவலில் வெளிக்காட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











