For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளையராஜாவின் திருவாசகம்! நாளை வெளியீடு!

By Staff
|

இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடியுள்ள திருவாசகம், இசைத் தொகுப்பு சென்னையில் நாளை (வியாழக்கிழமை)வெளியிடப்படுகிறது.

சென்னை சாந்தோமில் உள்ள தமிழ் மையம் என்ற அமைப்பின் மூலமாக திருவாசகத்தை சிம்பொனி வடிவில் இளையராஜாஇசை வடிவில் கொண்டு வந்துள்ளார். மொத்தம் ஒரு மணி நேரத்திற்கும் சற்று அதிக நேரத்தில் ஓடக் கூடிய இந்த இசைத்தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களையும் ராஜாவே பாடியுள்ளார். ரூ. 1.10 கோடி செலவில் இந்த இசைத் தொகுப்பைதமிழ் மையம் உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து இந்த இசைத் தொகுப்பை வழங்கினார் இளையராஜா.அப்போது மதிமுகபொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மைய இயக்குனர் பாதிரியார் ஜெகத் காஸ்பர், பாதிரியார் வின்சென்ட்சின்னத்துரை ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரிடமும் இந்த இசைத் தொகுப்பு வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து முறைப்படி வியாழக்கிழமை சென்னையில் திருவாசகத்தின் வெளியீடு நடைபெறுகிறது.

சென்னை மியூசிக் அகாடமியில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சர்ஜெயபால் ரெட்டி திருவாசகம் சி.டி. தொகுப்பை வெளியிடுகிறார். முதல் சி.டியை கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பெற்றுக் கொள்கிறார்.

சி.டி.யில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் சி.டி. தயாரிப்புப் பணிகள் அடங்கிய புத்தகத்தை மத்திய அரசின் இணைச்செயலாளர் ஜெயக்குமார் வெளியிட அதை பெற்று தட்சிணாமூர்த்தி சுவாமிகளிடம் இளையராஜா வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம், நடிகர்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் திரையுலகினர், தமிழ் அமைப்பினர் உள்ளிட்ட பல்துறையினர் கலந்து கொள்கின்றனர்.

திருவாசக வரிகளுக்கு இளையராஜா கொடுத்திருக்கும் இசை வடிவத்திற்கு "சிம்பொனி ஓரட்டேயா" என்று பெயர். இதுபோன்றஇசை வடிவம் இந்தியாவில் உருவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

திருவாசகம் சி.டி. தொகுப்பின் வெளியீடு குறித்து இளையராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் பணியில் நான்மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். நமது இசை துறவிகள் தனிமையில் செய்யும் தவம் போன்றது.

இந்தப் பணியின்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அனுபவத்தை,இந்தப் பாடல்களைக் கேட்கும்போது நீங்களும் பெறுவீர்கள்.

அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக இளைஞர்களும் இந்தப் பாடல்களையும், இசையையும் விரும்புவார்கள். மற்றவர்களைவிட இளைஞர்கள் அதிக அளவில் இந்தப் பாடல்களைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்களையும் இதுகவரும் என்றார்.

தமிழ் மைய இயக்குனர் ஜெகத் காஸ்பர் கூறுகையில், கிறிஸ்துவ பாதிரியார்களான நாங்கள் திருவாசக சி.டி. தொகுப்பைஉருவாக்க மிகவும் பாடுபட்டோம். இதற்கான நிதியை சேகரிப்பதிலும் நாங்கள் தீவிரமாக ஈடுட்டோம். எங்களது கடினமானஉழைப்பின் பலனாக இப்போது திருவாசகம் வெளியீட்டை எட்டியுள்ளது.

மிகவும் உணர்வுப்பூர்வமாக இதில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ளார் இளையராஜா. மனதை உருக்கும் வகையில்அத்தனைப் பாடல்களும் அமைந்துள்ளன.

இந்த சி.டியைக் கேட்ட நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என அனைத்துத் தரப்பினரும்மிகவும் பாராட்டியுள்ளனர். சிவபெருமானே நேரடியாக வந்து பாடியது போல இருந்ததாக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாபாராட்டியுள்ளார். இது எங்களுக்கு பெரும் பெருமிதத்தைக் கொடுத்துள்ளது என்றார்.

திரைப் பாடல்களில் பல உச்சங்களைத் தொட்டுள்ள இளையராஜா, திருவாசகம் இசைத் தொகுப்பின் மூலம் இன்னொரு புகழுக்குவித்திட்டுள்ளார் என்றால் மிகையில்லை.

இது ராஜாவின் பேட்டை

1976ல் அன்னக்கிளி, 2005ல் சிம்பொனியில் திருவாசகம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இசைஞானிஇளையராஜாவின் சாதனைகளைச் சொல்ல பக்கங்கள் பத்தாது, காலங்கள் போதாது. தெரு விளையாடலாகிப் போய் விட்டதிரை இசையில், திருவிளையாடல்கள் பல புரிந்தவர் ராஜா.

ஒரு வாசகத்திற்கும் உருகாதவர்கள் கூட உருகிப் போய் விடும் திருவாசகத்திற்கு இசை வடிவம் கொடுத்து நம் முன் விஸ்வரூபம்எடுத்து நிற்கிறார் இளையராஜா.

திரை இசையில் உச்சத்தைத் தொட்ட இளையராஜா இப்போது இலக்கியங்களின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார்.பக்தி இலக்கியமான திருவாசகம் மூலம் அதற்கு அவர் அடிக்கல் நாட்டியுள்ளார். திருவாசகத்தை படிக்கட்டாக வைத்து இன்னும்பல தமிழ் இலக்கியங்களை தனது இன்னிசையில் வார்த்துக் கொடுக்கவுள்ளார்.

தனது இசை வாழ்க்கையில் இன்னும் ஒரு சாதனைக்கு வித்திட்டிருக்கும் இந்த தருணத்தில் ராஜாவின் சாதனைகளைப்பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

மதுரை மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில், வெகு சாதாரண குடும்பத்தில் 1943ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி பிறந்தவர்இளையராஜா. ராஜய்யா என்று அவருக்குப் பெற்றோர் பெயரிட்டனர். பிற்காலத்தில் இசையின் ராஜாவாக வருவார் என்றுகணித்துதானோ அவருக்கு ராஜய்யா என்று பெற்றோர்கள் பெயரிட்டார்களோ என்னவோ!

சிறு வயதிலேயே இசையின்பால் அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. காரணம் அவரது தாயாரின் வாயிலிருந்து உதிர்ந்தநாட்டுப்புற பாடல் முத்துக்கள். அவை அனைத்தும் வீணாய்ப் போய்விடவில்லை. ராஜாவின் இசை மூளையில் பதிந்துபின்னாளில், பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய பல நூறு பாடல்களாக நமக்குக் கிடைத்தன.

முன்னவர் பாவலர் வரதராஜன், பின்னவர் அமர்சிங் (கங்கை அமரன்) ஆகியோருடன் நம்மவர் இளையராஜாவும் இணைந்துஊர் ஊராக சென்று கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் கொள்கை விளக்கப் பாடல்களை இசைத்தும், பாடியும் வந்தனர். இவர்களதுபாடல்களைக் கேட்க அப்போது ரொம்பவே கூட்டம் வருமாம். இசையால் அப்போதே தமிழர்களை ஈர்க்க தொடங்கி விட்டார்ராஜா.

இப்படியாகப் போய்க் கொண்டிருந்த ராஜய்யாவின் வாழ்க்கையில் ஒரு நாள் திருப்பம் வந்தது. 1969ல்பண்ணைப்புரத்திலிருந்து சென்னைப் பட்டணத்திற்கு இடம் பெயர்ந்தார் ராஜா, தம்பி அமருடன். அப்போது ராஜாவுக்கு வயது29. தன்ராஜ் மாஸ்டர் என்ற இசைக் கலைஞரிடம் இசையைக் கற்றுக் கொண்டார் ராஜா. கிதார், பியானோ போன்ற இசைக்கருவிகளில் நிபுணத்துவம் பெற்றார்.

அதன் பிறகு லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் இசையில் டிப்ளமோ பெற்றார். அதன் பிறகு முழு வீச்சில் திரைத் துறையில்கவனம் செலுத்தினார். 1976ல் அன்னக்கிளி வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. பாடல் பதிவின் போது கரண்ட் கட் ஆகிராஜாவை அப்செட் செய்தாலும், அன்னக்கிளியின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டுத்தெறித்து ராஜாவை உலகுக்குஅடையாளம் காட்டியது.

நாட்டுப்புறப் பாடல்களை எளிய இசை வடிவில் தனது பாடல்களில் புகுத்திய ராஜா, அந்தப் புதுமையை மக்கள் ரசிக்கும்விதத்தில் கொடுத்தார். அதுவரை கேட்டு வந்த இசைக்கும், ராஜாவின் இசைக்கும் மிகப்பெரிய வித்தியாசம், அதேசமயம்இனிமையுடன் இருந்ததை மக்கள் பெரிதும் வரவேற்கவே செய்தார்கள்.

அன்னக்கிளியில் தொடங்கிய இசைஞானியின், இசை சாம்ராஜ்யம் இன்று வரை இடைவெளி இல்லாமல், தொய்வில்லாமல்கோலோச்சி நிற்கிறது.

இன்று வரை ராஜா இசையமைத்துள்ள படங்களின் எண்ணிக்கை 800க்கும் மேல். ஆயிரக்கணக்கான பாடல்களை தமிழ்திரையுலகுக்கு கொடுத்துள்ள ராஜா, என்றும் தனது இசை பாணியிலிருந்து விலகியதில்லை என்பது ஆச்சரியப்படக் கூடிய ஒருவிஷயம். இருந்தும் இன்றும் அவரது பாடல்கள் ரசிக்கப்படுகின்றன, விரும்பப்படுகின்றன.

ட்யூனை செலக்ட் செய்வதிலும், அதற்கு நோட்ஸ் கொடுப்பதிலும் ராஜாவின் வேகம் யாருக்கும் வராது என்பார்கள். ட்யூனைரெடி செய்வதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் அதிகபட்ச நேரம், சில விநாடிகள் தான்.

திரை இசைப் பாடல்களில் மட்டும் ராஜா சாதனை படைக்கவில்லை. ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் விண்ட் என இரண்டு இசைத்தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றவை இந்தஇரு ஆல்பங்களும்.

இதற்கெல்லாம் உச்சமாக லண்டன் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் இணைந்து சிம்பொனி இசையையும் படைத்துசாதனை நிகழ்த்தினார் ராஜா.

திரை இசையில் சாதனை ஞானியாக விளங்கிய ராஜா, கர்நாடக இசையிலும் நிபுணத்துவம் பெற்றவர். அவரது அத்தனைபாடல்களுமே ஏதாவது ஒரு கர்நாடக சங்கீத ராகத்தை அடிப்படையாகவே கொண்டு அமைந்தது.

ராஜாவின் சாதனைகளுக்கு தாயகத்திலும் வெளியிலும் அவருக்குக் கிடைத்த பாராட்டுக்கள், கெளரவங்கள் ஏராளம். தேசியஅளவில் 2 முறை சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ளார் ராஜா. கெளரவ டாக்டர் பட்டங்களும் அவரைத் தேடிஇரண்டு முறை ஓடி வந்தன.

1976 முதல் 1995 வரை இளையராஜாவின் வருடங்கள் என்றே சொல்லலாம். இந்தக் காலகட்டத்தில் ராஜா இசையமைக்காதபடங்களே இல்லை எனலாம். இந்தப் படங்களில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்!

மொத்தம் 883 படங்களுக்கு ராஜா இசையமைத்துள்ளார். 200 படங்களில் அவர் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அவரது இசையால் பரவசப்பட்ட இந்திய மொழிகள் ஏராளம்.

இன்று திருவாசகம் மூலம் இசைத் துறையில் மேலும் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் ராஜா.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more