Coolie: ஸ்குவிட் கேம் சீரிஸ் பார்க்கலயா லோகி? கூலியில் நண்பன் வைரஸை இறக்கி காமெடி பண்ணிட்டீங்களே!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் 'ஏ' சான்றிதழ் உடன் வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்றாலே ரத்தம் தெறிக்க தெறிக்க தான் இருக்கும் என ஏற்கனவே, ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும், படத்திற்கு, 'ஏ' சான்றிதழ் கொடுக்க முக்கிய காரணமே, சத்யராஜ் உருவாக்கிய பிணங்களை நொடியில் சாம்பலாக்கும் இயந்திரம் தான்.
இந்த இயந்திரம் ஒரு மனித உடலை நொடியில் சாம்பலாக்கி விடும் வேலையை செய்யக்கூடியது. காட்சியாக பார்க்கும்போது கொஞ்சம் டர்ர் வாங்கியதுதான் என்றாலும், கதையில் இந்த இயந்திரத்திற்கும், அதன் தேவையையும் பார்க்கும்போது குபீர் சிரிப்பு வருகிறது.
வில்லன் சௌபின் சாஹிருக்கு வில்லாதி வில்லனாக இருக்கிறார் நாகர்ஜுனா. சட்டத்திற்குப் புறம்பான தொழில்கள் செய்வது மட்டும் இல்லாமல், உடல் உறுப்புகளை கடத்துவதையும் தொழிலாக சட்டவிரோதமாக செய்து வருகிறார். இதற்காக அவர் கொல்லும் மனிதர்களின் உடலை என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் சத்யராஜ் கண்டுபிடித்த மெஷினை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஸ்குவிட் கேம்: இந்த திரைக்கதை நகர்வு தான் குபீர் சிரிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, உலக அளவில் வில்லாதி வில்லனாக இருக்கக் கூடிய நாகர்ஜுனாவுக்கு அவர்கள் கொலை செய்யும் உடலை என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இந்த திரைக்கதையைப் பார்க்கும்போது, லோகேஷ் கனகராஜ் ஸ்குவிட் கேம் வெப் சீரிஸ் பார்க்கவில்லையா என்று கூட சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு காவல் துறையைப் பார்த்து பயம் என்பது போல ஒரு காட்சி வைத்திருக்கும் லோகேஷ், படத்தில் காவல்துறைக்கு பெரிய முக்கியத்துவமே கொடுக்காததும் விமர்சகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது.
கலாய்: இது மட்டும் இல்லாமல், ஃப்ளாஷ் பேக்கில் கூலியாக இருக்கும் சத்யராஜ் இரண்டாம் பாதியில் எப்படி இப்படி ஒரு இயந்திரத்தைக் கண்டு பிடிப்பவராக மாறினார் என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்தது. அதற்கு இணையவாசிகள் பலரும் இந்த மெஷின் நண்பன் படத்தில் வரும் வைரஸ் கண்டுபிடித்த சேர் என்று கிண்டல் அடுத்து வருகிறார்கள்.

தயக்கம்: மொத்தத்தில் கூலி படம் லோகேஷ் கனகராஜ் படமாகவே இல்லை. மாறாக பல படங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவி படம் எடுக்கும் புகழ்பெற்ற அந்த இயக்குநரின் படமோ என பலரையும் யோசிக்க வைத்துவிட்டார். ரஜினி, சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர்கான் என பெரிய நட்சத்திரங்கள் இருந்ததால் அவர்களிடம் ரீ டேக் கேட்க லோகேஷ் தயங்கி இருப்பாரோ என்று கூட சிலர் விமர்சிக்கிறார்கள்.
ரஜினி தலையீடு: அதே நேரத்தில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜை அவரது போக்கில் விடாமல் ஏதாவது தலையீடு செய்திருக்கலாம். அதனால்தான் படம் இந்த அளவுக்கு லாஜிக் இல்லாமல் இருக்கிறது என ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 151 கோடிகள் வசூல் செய்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இந்த வார இறுதிக்குள் படம் ரூபாய் 400 கோடிகளுக்கு மேல் வசூலிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











