ரஜினி நலமாக உள்ளார்...லதா ரஜினிகாந்த் விளக்கம்
சென்னை : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு என்ன ஆயிற்று என ரஜினியின் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
70 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பஸ் கன்டெக்டராக தனது வாழ்க்கையை துவக்கிய சிவாஜி ராவ் என்னும் ரஜினிகாந்த், கே.பாலச்சந்தரால் அபூர்வராகங்கள் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

விருது பெற்ற ரஜினி
தற்போது வரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள ரஜினி, பல விருதுகளை வென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் ரஜினியின் கலை சேவையை பாராட்டி, இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அண்ணாத்த டிரைலர் ரிலீஸ்
ரஜினி சமீபத்தில் டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அண்ணாத்த படத்தில் முதல் ஆளாக தனது பகுதி காட்சிகளை நடித்து முடித்த ரஜினி, மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றார்.

அமெரிக்காவில் சிகிச்சை
சிகிச்சை முடித்து நாடு திரும்பிய ரஜினி அதிரடியாக தனது ரஜினி மக்கள் இயக்கத்தை கலைத்தார். தான் அரசியல் கட்சி துவக்க போவதில்லை என்றும், உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரும் முடிவை கை விடுவதாகவும் அறிவித்தார். தற்போது அடுத்த படமான தலைவர் 169 படத்திற்கான வேலைகளை கவனித்து வந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் தாதா சாகேப் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு, இரண்டாவது மகள் செளந்தர்யா உருவாக்கிய வாய்ஸ் அடிப்படையிலான சோஷியல் மீடியா ஆப்பை அறிமுகம் செய்து வைத்தார். நேற்று சென்னை திரும்பி ரஜினிக்கு இன்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் கவலை
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். இந்நிலையில் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

ரஜினி நலமாக உள்ளார்
இதனையடுத்து லதா ரஜினிகாந்த் அளித்துள்ள விளக்கத்தில், ரஜினிகாந்த் நலமாக உள்ளார். இது ஆண்டு முழுவதும் நடைபெறும் வழக்கமாக உடல் பரிசோதனை மட்டுமே என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











