»   »  அரசியலுக்கு வர மாட்டார் ரஜினி - சத்யநாராயணன் அறிவிப்பு

அரசியலுக்கு வர மாட்டார் ரஜினி - சத்யநாராயணன் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rajini
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திடம் அரசியலுக்கு வரும் எண்ணமோ, விருப்பமோ இல்லை. அவர் அரசியலுக்கு வர மாட்டார். எனவே விஜயகாந்த் போல ரஜினியும் அரசியலுக்கு வருவார் ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம் என ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

"தலைவா, இன்று தமிழ்த் திரையுலகின் தன்னிகரற்ற முதல்வர் நீ. விரும்பினால் நாளையே நீ தமிழகத்தின் முதல்வர்"

-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 57வது பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனர்கள் கூறிய வாசகங்கள் இவை. கிட்டத்தட்ட 120 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த டிஜிட்டல் பேனர்களில் இடம்பெற்றிருந்த இந்த வாசகங்கள் ரசிகர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.

யார் யாரோ வந்து விட்டார்கள். ஆனால் எப்போதோ அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தங்களது தலைவர், அதிகாரத்தில் அமர்ந்திருக்க வேண்டிய தலைவர், இத்தனை காலம் அரசியலுக்கு வருவதை தள்ளிப் போட்டு வரும் தலைவர், இப்போதாவது அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தும் வகையில் இந்த டிஜிட்டல் பேனர்கள் சென்னையில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் ரசிகர்களின் ஆசைக்கும், எதிர்பார்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணனின் அறிக்கை வெளியாகியுள்ளது. ரஜினியிடம் அரசியலுக்கு வரும் ஆசையோ, எண்ணமோ இல்லை. விஜயகாந்த் போல ரஜினியும் அரசியலுக்கு வருவார் என எண்ண வேண்டாம் என சத்யநாராயணன் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ரசிகர் மன்றத்தின் வளர்ச்சியிலும், ரஜினியின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் ரசிகர்களின் உணர்வுகளை ரஜினி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார், மதிப்பு வைத்திருக்கிறார்.

ஆனால் நமது சூப்பர் ஸ்டாரின் விருப்பம் அரசியல் அல்ல. நமது எண்ணங்களை அவர் மீது திணிக்க முடியாது.

விஜயகாந்த் அல்லது பிற நடிகர்களின் அரசியல் கட்சிகளையும், வளர்ச்சியையும், சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். விஜயகாந்த் வளர்ச்சியைப் பார்த்து நாம் பொறாமைப்படுவதில் அர்த்தம் இல்லை.

விஜயகாநத்தின் கடும் உழைப்பு, அயராத முயற்சி ஆகியவை அவரது வளர்ச்சிக்குக் காரணம். ஆனால் நமது சூப்பர் ஸ்டாரிடம் அரசியல் எண்ணம் இல்லை. எனவே விஜயகாந்த் போல சூப்பர் ஸ்டாரும் அரசியலில் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பாரப்பது சரியாக இருக்காது.

மேலும் அரசியலில் நுழைந்தால் தேவையில்லாத மன அழுத்தங்களையும் சந்திக்க வேண்டி வரும், இப்போது விஜயகாந்த் சந்தித்து வருவதைப் போல. இதையல்லாம் கருத்தில் கொண்டே இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்ற கருத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் சத்யநாராயணன்.

ரசிகர்கள் ஏமாற்றம்:

சத்யநாராயணனின் அறிக்கை ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பிறந்த நாளையொட்டி சென்னை உள்பட உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்தனர்.

சிவாஜி படம் நிகழ்த்திய பெரும் சாதனையைத் தொடர்ந்து இந்த பிறந்த நாள் வந்த்தால், அதிக உற்சாகத்துடன் பிறந்த நாளைக் கொண்டாடினர் ரசிகர்கள். இனறு தமிழ்த் திரையுலகின் முதல்வர், நாளை தமிழகத்தின் முதல்வர் என்ற பேனர்கள், அவர்களின் அபிலாஷைகளை தங்களது தலைவருக்கு மீண்டும் உணர்த்தும் வகையிலேயே வைக்கப்பட்டிருந்த்து.

ஆரம்பத்தில் தங்களது தலைவரின் ஆதரவாலும், ஆசியாலும் ஆட்சியைப் பிடித்த கட்சிகள், வளர்ந்த கட்சிகள், பின்னர் தங்களது தலைவரை கறிவேப்பிலை போல தூக்கி எறிந்து விட்டதை ஜீரணிக்க முடியாத நிலையில் இருந்த ரசிகர்கள், நமக்கென்று ஒரு கட்சி, நமக்கென்று ஒரு ஆட்சி என்ற கனவில் நீண்ட நாட்களாகவே ரஜினிக்கு அரசியல் அழைப்பு விடுத்து வந்தனர்.

ஆனால் ரஜினி இதையெல்லாம் தனக்கே உரிய மெளனத்தோடு மறுதலித்து வந்தார். இநத நிலையில்தான் இந்த ஆண்டு பிறந்த நாளின்போது ரசிகர்கள் மனதில் தோன்றிய அரசியல் ஆசையை மீண்டும் மறுத்துள்ளார் தனது செயலாளர் சத்யநாராயணன் மூலம்.

இந்த முறையும் ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு வந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியும், அதிரச்சியும் அடைந்துள்ளனர்.

ரஜினியின் ரசிகர்கள் பலரும் தங்களது இளமைக்காலத்திலிருந்து அவரது ரசிகர்களாக இருப்பவர்கள். இனறு நடுத்தர வயதைத் தாண்டி விட்டவர்கள். இதுவரை ரஜினியை நம்பி, அவரது படங்களே உலகம் என்று இருந்து வந்த அவர்களுக்கு, நமது பலத்தை அரசியலிலும் காட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்த அவர்களுக்கு ரஜினியின் மறுப்பு நிச்சயம் அதிர்ச்சியாகத்தானே இருக்க முடியும்.

அரசியல் தலைவர்கள் கருத்து:

சத்யநாராயணனின் அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், அவரது மதிப்புக்குரியவரும், அரசியல் விமர்சகருமான, துக்ளக் ஆசிரியர் சோ இதுகுறித்துக் கூறுகையில், இது அவரது சொந்த முடிவு. அதுகுறித்து நான் கருத்து கூற முடியாது.

ஆனால் இந்த மாநிலத்தின் நலம் விரும்பியாக நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நாம் நல்ல இதயம் படைத்த ஒரு ஆட்சியாளரை இழக்கிறோம்.

இருந்தாலும் எதிர்காலத்தில் அவரது எண்ணம் மாறலாம், முடிவுகள் மாறலாம் என்று நம்புவோம். காரணம், ' அரசியல்வாதிகள்' எடுக்கும் முடிவுகள் ஒருபோதும் உறுதியாக இருந்த்தில்லை என்ற நம்பிக்கையில் ரஜினியின் முடிவும் மாறும் என்று நம்புவோம் என்றார்.

மூத்த பாஜக தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறுகையில், ரஜினியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இன்னும் ஓரிரு படங்களில் நடித்து முடித்து விட்டு தனது முடிவை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், ரஜினியின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. இது அவருடைய சொந்த முடிவு. அவரது விருப்பப்படி முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது என்றார்.

அதேசமயம், சில தலைவர்கள் ரஜினியின் இந்த திடீர் அறிவிப்புக்கு பின்னணியில், சில அரசியல் நெருக்குதல்கள் இருக்கலாம் என கூறியுள்ளனர்.

ஆளுங்கட்சியின் மிக முக்கிய மாநாடு தொடங்கியுள்ள பின்னணியில், ரஜினி தரப்பிலிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

யாருடைய கருத்து என்னவாக இருந்தாலும், ரஜினியின் கருத்து இதுதான் என்று சத்யநாராயணன் தெரிவித்து விட்டார். ரசிகர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil