2 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினியின் தர்பார்...ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்
சென்னை : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் தர்பார். இந்த படம் 2020 ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரிலீசாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ரஜினி ரசிகர்கள் அட்டகாசமாக கொண்டாடி வருகின்றனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்த, ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் தர்பார். நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார்.

போலீஸ் உடையில் ரஜினி
கிட்டதட்ட 27 ஆண்டுகளுக்கு பின் ரஜினி போலீஸ் ஆபீசர் ரோலில் நடித்திருந்த படம் தர்பார். இதற்கு முன் 1992 ம் ஆண்டு ரிலீசான பாண்டியன் படத்தில் தான் ரஜினி போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். மும்பையில் போதை பொருள் குற்றங்களை தடுக்கும் வயதான போலீஸ் கமிஷனராக ஆதித்ய அருணாச்சலம் ரோலில் ரஜினி நடித்திருந்தார்.

250 கோடி வசூல்
தைப் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் 159 கோடி செலவில் எடுக்கப்பட்டது. இந்த படம் 250 கோடிகளை மட்டுமே வசூல் செய்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மற்ற ரஜினி படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த படத்தில் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகளும் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

சந்தித்த சர்ச்சைகள்
இந்த படத்தில் ரஜினி பேசுவதாக அமைக்கப்பட்ட சில டயலாக்குகள் அரசியல் ரீதியான சர்ச்சைகளை சந்தித்தது. இந்த வசனங்களுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. தர்பார் படம் பெரிய அளவில் பேசப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

மிரள வைத்த ரஜினி
தர்பார் படத்தின் டப்பிங்கை இரண்டு நாட்களில் முடித்து அனைவரையும் அசர வைத்தார் ரஜினி. இந்த படத்திற்காக அனிருத் இசையமைத்த சும்மா கிழி பாடல் ரெக்கார்டிங்கை ரஜினி நேரில் சென்று பார்த்து, வெளிப்படையாக பாராட்டிய வீடியோ படத்தின் ப்ரோமோஷனுக்காக பயன்படுத்தப்பட்டது.
டிரெண்டிங்கில் ரஜினி
தர்பார் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #Rajinikanth என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். இதில் தர்பார் படத்தை மட்டுமல்ல, பொங்கலுக்கு சன் டிவி.,யில் அண்ணாத்த படம் ஒளிபரப்பப்பட உள்ளதையும் சேர்த்து கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











